Last Updated : 22 Jan, 2019 08:40 AM

 

Published : 22 Jan 2019 08:40 AM
Last Updated : 22 Jan 2019 08:40 AM

ஒரு புத்தகத் திருடரின் ஒப்புதல் வாக்குமூலம்

எந்தப் புத்தகக்காட்சியிலும் அழையா விருந்தாளிகள் ‘புத்தகத் திருடர்கள்’. இந்தமுறை எப்படியேனும் ஒரு புத்தகத் திருடரைப் பேட்டி கண்டுவிடுவதென உறுதியாக இருந்தேன். அடையாளம் மறைக்கப்படும் என்ற வாக்குறுதிக்குப் பின்னர் ஒருவர் சிக்கினார்.

உங்களது உத்திகளில் எது உங்கள் விருப்பத்துக்குரியது?

ஒரு பிரபலம் உடன் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுப்பேன். அவர் பில் கவுன்டரில் இருப்பவரோடு பேசிக்கொண்டிருப்பார். நான் எனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்று நிற்பேன். பேச்சு இன்னும் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும்படி பார்த்துக்கொள்வேன். பிறகு, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட வேண்டியதுதான்.

பிரபலம் உடன் இல்லையென்றால் இந்த உத்தி செல்லுபடியாகாதா?

ஏன், ஆகாது! கைகளில் ஏற்கெனவே சிலபுத்தகங்களை வைத்திருக்க வேண்டும். புதிதாக எடுத்த  புத்தகத்தை அதோடு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, பில் கவுன்டரின் கூட்டம். இரண்டாவது, செல்போனில் அழைப்பு வருவதுபோல நடிப்பது. உதாரணமாக, காலச்சுவடு அரங்கில் இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். போனை எடுத்து, ‘காலச்சுவடு ஸ்டால்லதான் இருக்கேன். இங்க வந்துடு’ என்று சொல்ல வேண்டும். அப்படியே, ‘சரியா கேக்கல’ என்று சொல்லிக்கொண்டே நகர்ந்துவிட வேண்டும்.

நகரும்போது யாராவது பார்த்துவிட்டால்?

மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளானதுபோல முகபாவனையை வைத்துக்கொண்டு, ‘சாரி, மறந்துட்டேன்’ என்றபடி பில் போட்டுவிட வேண்டியதுதான். எனக்குக் குழந்தை முகம்என்பதால் யாருக்கும் சந்தேகம் வராது. அம்மா, அப்பாவுக்கு நன்றி. இதுவரை என்னையாரிடமும் மாட்டிவிடாத கடவுளின் அனுக்கிரமும் இருக்கிறது. கடவுளுக்கும் நன்றி.

எங்கெல்லாம் எடுக்கலாம் என விதிகள் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

சிறு பதிப்பகங்கள், சிறு வியாபாரிகளிடம் கைவரிசையைக் காட்ட மாட்டேன். அறம் முக்கியம். விலை அதிகம் வைத்து விற்கும் பெரிய பதிப்பகங்களே எனது இலக்கு.

புத்தகக்காட்சியில் எடுத்த ‘டாப் 5’ புத்தகங்கள்?

அமரந்த்தாவின் ‘சொர்க்கத்துக்கு அருகிலிருந்து வந்தவன்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவம்’, பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’, இராசேந்திர சோழன் கதைகள் முழுத் தொகுப்பு, அம்பேத்கரின் ‘புத்தரும் அவர் தம்மமும்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x