Published : 12 Jan 2019 13:43 pm

Updated : 12 Jan 2019 13:53 pm

 

Published : 12 Jan 2019 01:43 PM
Last Updated : 12 Jan 2019 01:53 PM

கேரளத்தில் இருக்கும் அளவுக்கு தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் இல்லை

 

 


கதை கேட்டுதான் குழந்தைகளின் உலகமே தொடங்குகிறது. தாத்தா, பாட்டி கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாம். வளர்ந்து வரும் இணைய யுகத்தில் சிறார் இலக்கியம் எந்த தூரத்தைத் தொட்டிருக்கிறது? குழந்தைகளின் வாசிப்பு உலகம் எப்படி வளர்ந்திருக்கிறது?

 

சிறார் எழுத்தாளரும் குழந்தைகளுக்கான தளத்தில் இயங்கி வருபவருமான விழியனிடம் பேசினேன்.

 

ஏன் குழந்தைகள் வாசிக்க வேண்டும்?

''குழந்தைகளுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு விதத் தேவைகள் இருக்கின்றன. 0 முதல் 5 வயது வரை அவர்கள் புதிய வார்த்தைகளை எதிர்பார்க்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களின் உலகம் விரியத் தொடங்கும். 5 - 8 வயதில் புதிய தகவல்களைத் தேடுவார்கள். 8 வயதுக்கு மேலாக உணர்வுரீதியான விஷயங்கள் தேவைப்படுகிறது. மண் சார்ந்து, மனித உறவுகள் சார்ந்து அவர்கள் இயங்கத் தொடங்குவர்.

 

இவை அனைத்தையும் பாடப்புத்தகங்கள் தருவதில்லை. வலிமையான ஊடகங்கள் அதற்குத் தேவை. அவற்றை பாடப் புத்தகங்கள் தாண்டிய நல்ல புத்தகங்கள் தரும்.

 

பொதுவாகவே புத்தகங்களை வாசிக்கும்போது அவர்களின் அக உலகம் விஸ்தாரமாகிறது. தொலைக்காட்சி பார்க்கும்போதும் இது நடக்கும். ஆனால் குறைவான அளவே ஏற்படுகிறது. பின்பாதி வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதராகத் திகழ வாசிப்பும் காரணமாகிறது.

 

இன்னொன்றையும் சமீப காலத்தில் அதிகமாகப் பார்க்கிறேன். குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிக்கும்போது பயம், எச்சரிக்கை கலந்த உணர்வுடன் படிக்கின்றனர். ஆனால் மற்ற புத்தங்களை வாசிக்கும்போது தேர்வு குறித்த அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் படிக்கின்றனர். இதனால் படிக்கும் வேகம் அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு பாராவை 10 நிமிடங்களில் வாசிக்கும் குழந்தை, 7 நிமிடங்களில் வாசிக்கத் தொடங்கும். இதன் மூலம் பாடம் படிப்பதும் எளிமையாகிறது.

 

நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள குழந்தைகளின் வாசிப்பு அனுபவங்கள் எப்படி மாறுபடுகின்றன?

நகரங்களில் உள்ள குழந்தைகளுக்குப் பெரும்பாலும் நேரமே தருவதில்லை, அல்லது சக மனிதர்களின் அழுத்தம் (peer pressure) காரணமாக ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கப் பழக்குகின்றனர். பிரின்சஸ், ஹாரி பாட்டர் போன்ற வெகுசில ஆங்கிலப் புத்தகங்களே அங்கு வாசிக்கப்படுகின்றன.

 

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வமும் திறனும் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்களால் புத்தகங்கள் வாங்க முடிவதில்லை. இருக்கும் சில நூலகங்களிலும் குழந்தைகளை மையப்படுத்திய புத்தகங்கள் அதிகம் இருப்பதில்லை. நாம் அவர்களிடம் குழந்தை எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கொடுக்கும்போது மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார்கள். இதுதான் இன்றைய வாசிப்பு நிலை.

 

இந்த நிலையை எப்படி மாற்றலாம்?

இதற்கு முதலில் ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்பட வேண்டும். தினசரிப் படிப்பை இது பாதிக்குமோ என்ற பயம் நீங்க வேண்டும். அடுத்ததாக, பெற்றோர். அவர்களுக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் வருகின்றன என்று தெரிவதில்லை. புத்தகக் கண்காட்சிக்கு வரும் பெற்றோர்களே ஜி.கே. புத்தகங்கள் இல்லையா, தெனாலி ராமன் கதைகள் இல்லையா, சரி போகலாம் என்பார்கள். இந்நிலை மாறுவது அவசர, அவசியத் தேவை.

 

ஆசிரியர்கள், பெற்றோர்கள் என இருவருக்குமே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதேநேரத்தில் குழந்தைகளுக்கான இலக்கியங்கள் நிறைய வரவேண்டும். அதற்கான ஆதரவு இருக்க வேண்டும். வரவேற்பு அதிகமாக இருந்தால்தான் எழுத்தாளர்களும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

 

சிறார் எழுத்தாளர்களுக்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது?

இதைத்தான் தமிழில் சிறார் இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்வேன். ஏராளமான சிறுவர் இதழ்கள் வெளிவருகின்றன. நிறையப் பதிப்பகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. 80-களுக்குப் பிறகு இப்போதுதான் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது போதாது.

 

கேரளத்தில் நான் நேரடியாகப் பார்த்த விஷயம் - சிறு கடைகள், பெட்டிக்கடைகள், வணிக வளாகங்களுக்குச் சென்றபோது பத்தே நிமிடங்களில் 20-க்கும் அதிகமான சிறுவர் புத்தகங்கள் கிடைத்தன. ஆனால் தமிழ்நாட்டில் அரை மணி நேரம் சுற்றினால் கூட, சிறுவர் இதழ்கள் கிடைப்பதில்லை.

 

வாசிப்புப் பழக்கத்தில் அரசு, தனியார்ப் பள்ளி மாணவர்களிடம் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?

வாசிப்புத் திறனில் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் ஒரு கதையை வாசிக்கச் சொல்வோம். அப்போது அரசுப்பள்ளிகளில் வாசிக்க முடியவில்லை என்றால்கூட தைரியமாக முன்னால் வருவார்கள். தவறாக வாசித்தாலும் படிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தனியார்ப் பள்ளிகளில் முன்னால் வரவே மாட்டார்கள். ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு சிலர் வருவார்கள்.

 

தமிழ்ப் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது?

மிகவும் குறைவாகவே உள்ளது எனலாம். பொதுவாக என்னென்ன தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றன என்று கேட்டால், திருக்குறள், அகராதி, தெனாலி ராமன் கதைகள், நீதிக்கதைகள், விடுகதைகள் அவ்வளவுதான் தெரிகிறது. வேறு புத்தகங்கள் வருவதே அவர்களுக்குத் தெரியவில்லை. என்னென்ன பத்திரிகைகள் வெளிவருகின்றன என்று கேட்டால், கல்யாணப் பத்திரிகையா என்று திருப்பிக் கேட்பார்கள்.

 

மாயா பஜார், றெக்கை, பஞ்சுமிட்டாய், சிறுவர் மலர், சிறுவர் மணி போன்றவை குறித்து பெரும்பாலானோருக்கு அறிமுகமே இல்லை. கிராமங்களில் ஆசிரியர்களும், நகரங்களில் நடுத்தர வர்க்கத்தினர், உயர்தர வர்க்கப் பெற்றோர்களுமே இந்நிலையை மாற்ற வேண்டும்.

 

அரசும் பாடத் திட்டங்களில் வாசிப்பை இணைக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் ஆண்டுக்கு 5 புத்தகங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். அதேபோல நம் பாடத் திட்டங்களிலும் மாற்றம் வரவேண்டும்.

 

அச்சில் இருக்கும் படக்கதைகளுக்கும் நகரும் அனிமேட்டட் கதைகளுக்கும் என்ன வித்தியாசம்?

இதில் மூன்று விஷயங்கள் உள்ளன. அச்சிடப்பட்ட கதைகள், அச்சிடப்பட்ட படக் கதைகள் மற்றும் அனிமேட்டட் கதைகள் (கார்ட்டூன்கள்). மூன்றுமே குழந்தைகளின் கற்பனைத் திறன்களை அதிகரிக்கும். ஒவ்வொன்றும் ஒரு வேலையைச் செய்கின்றது.

அச்சிடப்பட்ட கதைகளை (pure text) வாசிக்கும்போது அதில் வரும் காட்சிகளை குழந்தைகள், தங்கள் கற்பனை உலகில் காட்சிப்படுத்துவர். தாங்கள் அதுவரையில் கண்ட காட்சிகளோடு தொடர்புபடுத்தி அதனை உருவாக்குகின்றனர். படக் கதைகளில் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வீடியோவாக்கி தங்கள் மனதில் ஓட்டி மகிழ்கின்றார்கள். இதில் ஓவியரின் கற்பனையும் உள்ளது. குரல்களை குழந்தைகள் பூர்த்தி செய்வார்கள்.

 

அனிமேட்டட் வீடியோவில் குழந்தைகளின் காதுகளுக்கும் கண்களுக்கும் மட்டுமே வேலை. யாரோ ஒருவரின் கற்பனைகளை காண்கின்றார்கள். இதிலும் கற்பனை உலகம் விஸ்தரிக்கும். மூன்றுமே வெவ்வேறு பரிமாணங்கள். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொன்று தேவைப்படும். அச்சிடப்பட்ட கதைகளுக்குள் அவர்களைப் பயணிக்க வைப்பதே மிகச்சரியாக இருக்கும்'' என்றார்.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author

    x