Published : 18 Nov 2018 09:07 am

Updated : 18 Nov 2018 09:07 am

 

Published : 18 Nov 2018 09:07 AM
Last Updated : 18 Nov 2018 09:07 AM

பெரியாரியர்களைப் பொறுத்தவரை மகாபாரதமும் அரசியல் பிரதிதான்! - ஷோபாசக்தி பேட்டி

ஷோபாசக்தி பேட்டித.ராஜன்சமகாலத் தமிழின் முதல்நிலை எழுத்தாளன் என்பதைத் தாண்டி கூத்துக் கலைஞன், போராளி, சர்வேத அடையாளம் கொண்ட திரைப்பட நடிகர் என்று பல்வேறு முகங்களையுடைய ஷோபாசக்தியின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. கடந்த 40 ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் அடைந்த நெருக்கடிகள், குறுக்குவெட்டாக மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த முரண்பாடுகளை உலகளாவிய இலக்கியமாக மாற்றிய அரிதான தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். ‘கொரில்லா’, ‘ம்’, ‘பாக்ஸ்: கதைப்புத்தகம்’ ஆகிய நாவல்கள் தமிழிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றவை. புதுமைப்பித்தன் தொடங்கிவைத்த சிறுகதை சாதனை மரபில் இவரது சிறுகதைகள் தன்னையும் இயல்பாகச் சேர்த்துக்கொண்டன.

போர்க்காலத் துயரங்களை வலியோடு கூடிய நினைவுகளாக மற்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் அரசியல் பகடியாக்கத்தை ஒரு உத்தியாக எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?


அது உத்தியோ தேர்வோ கிடையாது. என் வாழ்க்கைக்கும் அதிலிருந்து கிளைக்கும் கதைகளுக்கும் அதுதான் விதிக்கப்பட்டது. அறிவுலகுக்கோ கல்விப்புலத்துக்கோ அரசியல் அதிகாரத்துக்கோ நுாறு ஏணிகள் வைத்தாலும் எட்ட முடியாத வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வந்தவன் நான். ஐரோப்பாவில் 25 வருடங்கள் வாழ்ந்தாலும் இன்று வரை இலங்கை உட்பட எந்த நாட்டிலும் குடியுரிமையற்ற அகதி வாழ்வு என்னுடையது. நாடற்றவன். வாழ்க்கையில் இதுவரை ஒருமுறைகூட தேர்தலில் வாக்குச் செலுத்தியதில்லை. எங்கேயும் எனக்கு வாக்குரிமை கிடையாது. இந்தச் சூழலிலிருந்து அதிகாரத்தையும் அரசியலையும் எதிர்கொள்ளும் ஒருவனுக்கு பகடியே இயல்பான ஆயுதம். இலக்கியத்தில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் அதுவே ஆயுதம். கிண்டலும் பகடியும் எப்படி ஒடுக்கப்படுபவர்களின் வலுவான ஆயுதங்களாக இருக்கின்றன என்பதை விளக்கி ராஜ்கௌதமன் ஒரு நுாலே எழுதியிருக்கிறார்.

வடிவத்துக்கும் கலை அம்சத்துக்கும் முக்கியத்துவம் தர நினைத்தது ஏன்?

வடிவமைதியும் கலையும் இல்லாமல் இலக்கியம் ஏது? சினிமா ஏது? வாசகரை வதைத்துப் பாவத்தில் விழக் கூடாது என்பதில் எப்போதும் உஷாராகவே இருக்கிறேன்.

பொதுவாக, இலங்கை படைப்பாளிகளில் யாழ்ப்பாணத்தவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பிற பகுதியிலிருந்து எழுதுபவர்களுக்குக் கிடைப்பதில்லை என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஈழத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு என எல்லா தளங்களிலும் யாழ்ப்பாணத்தை முன்னிறுத்தும் ஒரு மையவாதப் போக்கு காலங்காலமாகவே இலங்கைத் தமிழர்கள் இடையே இருக்கிறது. இந்த மையவாதத்தின் அத்திவாரம் வெள்ளாளச் சாதி ஆதிக்கம். இது இலக்கியத்திலும் இருக்கிறது. இலக்கியவாதிகள் சாதி துறந்தவர்களா என்ன? இலக்கியவாதிகள் சாதிச் சங்கங்களில் இருப்பதையும் சாதிச் சங்கத் தலைவர்களுக்குக் கண்ணீரால் கவிதை வடிப்பதையும் பெயரில் ஆதிக்கச் சாதியைச் சுமப்பதையும் பூணுாலைக் காட்டிக்கொண்டு சமூக சமத்துவம் பேசுவதையும் அப்படிக் காட்டுபவர்களை நியாயப்படுத்துபவர்களையும் கொண்டதுதானே நமது இலக்கியச் சூழல். இன்றுவரை இதுதானே நிலை. வெட்கக்கேடு.

ஷோபாசக்திக்கு ஆதரவான அணி, ஷோபாசக்திக்கு எதிரான அணி என இரு பிரிவுகள் உருவாகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆதரவு, எதிர்ப்பு எல்லாம் பேசும் பிரச்சினையைக் குறித்து எழுபவையே. அடுத்த பிரச்சினையில் அந்த ஆதரவும் எதிர்ப்பும் தலைகீழாகவும் மாறும். இவை மாறிக்கொண்டிருக்கும் கருத்து விவாதங்களேயொழிய அணிகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் தந்தை ஈவெரா பெரியார் அணி.

ஈழப் பிரச்சினையின் எந்த அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லையென நினைக்கிறீர்கள்?

போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும். ஒரு தமிழகத்தவருக்கும் ஈழப் போராட்டத்துக்குமுள்ள உணர்வுபூர்வமான உறவுநிலையை மையப்படுத்தி யாராவது எழுத வேண்டும். அது இன்னொரு ‘புயலில் ஒரு தோணி’யாக வாய்ப்புண்டு.

அரசியலற்ற ஈழப் படைப்புகளைக் காண்பது அரிது. ஆனால், தமிழகச் சூழலோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள இந்த அரசியல் நீக்கத்துக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?

ஈழத்திலிருந்தும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகள் வெளியாகத்தான் செய்கின்றன. அ.முத்துலிங்கத்திடம் என்ன அரசியலைக் கண்டுபிடிப்பீர்கள்? தமிழகச் சூழலில் அரசியல் பிரதிகள் ஏராளமிருக்கின்றன. குறிப்பாக, கடந்த 30 வருடங்களில் அவை தீவிரமாக வெளிப்படுகின்றன. தலித்துகளும் பெண்ணியவாதிகளும் திருநங்கைகளும் ஓரினக் காதலர்களும் எழுதும் பிரதிகளைவிட வேறென்ன உன்னத அரசியல் இருக்கிறது? அதேபோல மார்க்ஸியம் சார்ந்தும், திராவிட இயக்க அரசியலைப் படைப்பாக்கவும் ஒரு பெரும் படையே இருந்தது. இந்தத் தமிழ்த் தேசியவாத அரசியல்தான் இலக்கியத்தில் கொஞ்சம் சுணங்கிக் கிடக்கிறது. குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும் என்பார்கள். நிற்க, ஒவ்வொருநாளும் புதுமையான வடிவில் வெளியிடப்படும் மகாபாரதத் தொடரையெல்லாம் நீங்கள் அரசியல் பிரதியாகக் கொள்ள மாட்டீர்களா? பெரியாரியர்களைப் பொறுத்தவரை மகாபாரதமும் அரசியல் பிரதிதான்.

அவ்வளவு கெடுபிடியான காலத்திலும்கூட கணிசமான நபர்கள் புலிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். எதிரிகளை சம்பாதித்துக்கொண்டதைத் தவிர அந்தக் குரல்களுக்கு ஏதேனும் பலன் கிடைத்ததா?

இலக்கியத்தளத்திலும் ஓரளவு அறிவுப்புலத்திலும் என் குரல் கேட்கப்பட்டது என்றே நம்புகிறேன். ஆனால், என்னுடைய குரலைப் புலிகளுக்கு எதிரான குரலாக மட்டுமே சுருக்கிவிடக் கூடாது. அது யுத்தத்துக்கும் இனவாதத்துக்கும் எதிரான குரல். புலிகளை மட்டுமல்லாமல் மற்ற ஆயுத இயக்கங்கள், இலங்கை அரசு, இலங்கைப் பிரச்சினையை இந்திய அரசு கையாளும் விதம் என எல்லா அதிகார நிலைகளுக்கும் எதிராகத்தான் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். எனினும், என்னுடைய கதைகள் என்னுடைய வாழ்வையும் அனுபவங்களையும் சுற்றிச் சுற்றி எழுதப்படுவதால் அங்கே புலிகள் மீதான விமர்சனம் முதன்மையானதாக இருக்கும். ஏனெனில், அந்தச் சூழலில் ஒரு கட்டத்துக்குப் பின்பாக அவர்கள்தான் அதிகார மையம். அந்த அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டு நான் கதை சொன்ன நேரங்களில் இலங்கை அரசு மீதான விமர்சனம் முதன்மைப்படும். என்னுடைய ‘ம்’ நாவல் அரசு நடத்திய வெலிகடைச் சிறைப் படுகொலையை மையப்படுத்தியதுதான். அந்த நாவல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும்கூட மொழியாக்கப்பட்டு வெளியானது.

தற்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர்கள் உட்படச் சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் உரிமைகள் இன்னும் மறுக்கப்படுவது, சிறையில் உழலும் தமிழ் அரசியல் கைதிகள், தமிழர்களது நிலங்களில் அடாவடியாக நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் காணாமற்போனவர்களுக்கும் சரணடைந்த போராளிகளைப் படுகொலை செய்ததற்கும் அரசு பொறுப்புக் கூறாமை, நீதியான விசாரணை செய்யாமை, இழப்பீடுகள் வழங்காமை, சிங்கள இனவாதச் சக்திகளும் பவுத்த பீடாதிபதிகளும் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவது என ஆயிரம் பிரச்சினைகள் அங்கே உள்ளன. சிறுபான்மை இனங்களின் ஒன்றுபட்ட அரசியல் முன்னெடுப்பு மட்டுமே நாம் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மெல்ல மெல்ல மீள்வதற்கான ஒரே வழி. சர்வதேசம் நம்மைக் காப்பாற்றும், இந்திய அரசு ஒரு தீர்வை உருவாக்கித்தரும் என்பதெல்லாம் நடக்க மாட்டாதவை.

சிறுபான்மை இனங்கள், குறிப்பாக ஈழத் தமிழர்கள் இலங்கை அரசியலில் இன்னும் தீர்மானிக்கும் சக்திகளாகவே இருந்துவருகிறார்கள். கடந்த அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோற்கடிக்கப்பட்டதற்கு சிறுபான்மை இனங்களின் வாக்குகளே காரணம். இன்று அவமானகரமான முறையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டதற்கும் ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. இந்த அரசியல் பலத்தைச் சிந்தாமல் சிதறாமல் வளர்த்துக்கொண்டு சிறுபான்மை இனங்கள் மேலும் முன்னே செல்ல வேண்டும். இனி இலங்கைத் தீவில் அரசியலில் நடைபெறப்போகும் மாற்றங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திலேயே சாத்தியப்படும். ஈழத் தமிழர்களிடம் இன்னும் ஏதாவது ஆயுதப் போராட்ட அபிமானங்கள் எஞ்சியிருந்தால் அதைத் துாக்கிப்போட்டுவிட்டு தேர்தல் ஜனநாயக அரசியலை நோக்கி வலுவாக முன்நகர வேண்டும். இதுவரை உலகம் கண்ட ஆட்சி அமைப்பு முறைகளில் நாடாளுமன்ற அரசியல்முறைதான் ஒப்பீட்டுரீதியில் முற்போக்கானது என்றே எனக்குத் தோன்றுகிறது. என் அந்தரங்கக் கனவு என்னவோ ஓர் அனார்க்கிஸ உலகுதான். ஆனால், நம்மை ஆள்வது ஒரு நாடாளுமன்றம் என்பதுதான் தலையைத் திருகும் உண்மை. கனவுநிலையிலிருந்து விழிக்க வேண்டும்.

இலக்கியவாதியான நீங்கள் சினிமாவுக்குப் போக ஆசைப்பட்டது ஏன்?

சாதத் ஹசன் மன்டோவையும் எம்.டி.வாசுதேவன் நாயரையும் பார்த்து இப்படிக் கேட்க முடியுமா என்ன! இலக்கியவாதி சினிமாவுக்குப் போவதைப் பற்றி ஆதங்கப்படத் தேவையில்லை. அங்கே போய் அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி வேண்டுமானால் ஆதங்கப்படலாம். அவருடைய இலக்கியமும் மொழித்திறனும் அவர் எழுதும் சினிமாவை ஒருபடி உயர்த்துகிறதா அல்லது அவரும் சேர்ந்து சீரழிகிறாரா என்பதைப் பொறுத்தது அது.

உலகம் முழுவதும் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் போர், வன்முறை, படுகொலை போன்றவற்றுக்கு ஒரு எழுத்தாளராக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எழுத்தாளர் ஹென்றி மில்லர் சொல்வதைத்தான் நானும் வழிமொழிகிறேன். “எல்லோரும் செக்ஸ் ஆபாசமானது என்கிறார்கள்; உண்மையில் போர்தான் ஆபாசமானது!”

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x