Published : 28 Oct 2018 08:55 AM
Last Updated : 28 Oct 2018 08:55 AM

நீர்வண்ண ஓவியத்தில் இளையராஜாவின் இசை

இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் காட்சிகளை நீர்வண்ண ஓவியங்களாக வரைந்து அசத்துகிறார் பரணிராஜன்.

பெங்களூருவில் ஆட்டோமொபைல் பொறியாளராகப் பணிபுரியும் இந்த இளைஞர், சுயமாக ஓவியம் கற்றுக்கொண்டவர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான பரணிராஜன், மதுரை திரையரங்குகளில் வைக்கப்பட்ட பிரம்மாண்டமான கட்-அவுட் ஓவியங்களால் கவரப்பட்டவர். “அந்தத் தாக்கத்தில் இளையராஜா இசையமைத்த பாடல் காட்சிகளின் முக்கியத் தருணங்களை வரைய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவற்றை முகநூலில் பதிவேற்றியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது இசையின் மூலம் வெவ்வேறு கலைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பெரும் ஊக்கியாக இருக்கும் இளையராஜாவுக்கு ஒரு ரசிகனின் எளிய சமர்ப்பணம் இது!” என்கிறார். தொடர்ந்து அவரது பாடல் காட்சிகளை வரையத் திட்டம் இருக்கிறதாம்.

சர்வதேச அளவில் கவனம் பெறும் பெருமாள்முருகன்

பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல், ‘ஒன் பார்ட் வுமன்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப்  பரவலான கவனம்பெற்றதும், அதைத் தொடர்ந்த அவரது அயல்தேசப் பயணங்களும் உலகப் புத்தக சந்தையில் பெருமாள்முருகனுக்கென தனித்த மதிப்பை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில்,  ‘ஒன் பார்ட் வுமன்’ நாவலைப் பற்றி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழிலும், ‘தி நியூயார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ’விலும் விரிவான கட்டுரைகள் வெளியாகின. ‘நியூயார்க்கர்’ இதழில் சிறு குறிப்பும் வெளியாகியிருக்கிறது. அத்துடன், பெருமாள்முருகனின் இரண்டு நாவல்கள் அமெரிக்காவின் இரண்டு முன்னணி பதிப்பகங்களில் மொழிபெயர்க்கப்படுவதற்குக் கையெழுத்தாகியிருக்கிறது. ‘மாதொருபாகன்’ நாவல் நேரடியாகத் தமிழிலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்ப்பாகியிருக்கிறது. சர்வதேச எழுத்தாளர் அமைப்பான ‘பென் இன்டர்நேஷனல்’ வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இந்தியர்கள் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பெருமாள்முருகனும் ஒருவர். இந்த ஆண்டு, இந்தியாவில் வழங்கப்படும் ஆங்கில இலக்கியத்துக்கான எல்லா விருதுகளின் குறும்பட்டியலிலும் பெருமாள்முருகனின் நாவல் இடம்பெற்றிருக்கிறது. இலக்கிய உலகுக்குள் பெருமாள்முருகனின் மறுபிரவேசம் புது உத்வேகத்தோடு எட்டுத்திக்கும் சிறகுகளை விரித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x