Published : 14 Oct 2018 01:11 am

Updated : 14 Oct 2018 01:11 am

 

Published : 14 Oct 2018 01:11 AM
Last Updated : 14 Oct 2018 01:11 AM

மரபின் மையத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது! - சோ.தர்மன் பேட்டி

சோ.தர்மன் பேட்டித.ராஜன்கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளியான சோ.தர்மன் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். நாட்டார் வாழ்க்கையின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் கலாபூர்வமான படைப்புகளாக்கியவர். கூத்துக்கலை, நாடோடிக்கூட்டம் என அருகிவிட்ட எளிய இனங்களைத் தனது படைப்பின்வழி ஆவணப்படுத்தியவர். இவரின் ‘தூர்வை’, ‘கூகை’, ‘சூல்’ நாவல்களும் பல குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் இன்றும் அதன் புதுப்பொலிவு மாறாமல் இருக்கின்றன. வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி குறித்த இவரின் ஆய்வுநூலும் மிக முக்கியமான படைப்பு. கூகையைப் போல ஒரு நள்ளிரவில் உரையாடியதிலிருந்து...

நாட்டார் வாழ்க்கையைப் படைப்பாக்க முயலும்போது எந்த விஷயங்களில் உங்கள் கவனம் குவிந்திருக்கும்?


பண்பாடு, பாரம்பரியம், வழிபாட்டு முறை, தொழில் என கிராமங்கள் குறித்து எழுதும்போது கட்டுரைத் தன்மையோடு அல்லாமல் கலாபூர்வமான சிருஷ்டியைக் கொடுப்பதற்கான முயற்சிகள்தான் என்னுடைய படைப்புகள். ‘மழை பெய்தது போதும்’ என மழையை வழியனுப்பக்கூடிய சடங்கு நம்மிடையே இருந்திருக்கிறது. ஒரு சாமியையும் அதற்காகப் பிறப்பித்திருக்கிறார்கள். இதுமாதிரியான விஷயங்களையெல்லாம் தோண்டிக் கண்டறிந்து இலக்கியமாக்குகிறேன். சொல்லும் விதத்தில் சில கலாபூர்வமான விஷயங்களை மேற்கொள்கிறேன். கிராமத்தவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள், பட்டிக்காட்டான் என்று கீழே வைத்துப் பார்க்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், மாடு கமலையில் இரைக்கும்போது அங்கே இரண்டு பக்கத்திலும் பூவரசு மரங்கள்தான் வைத்திருப்பார்கள். மரங்களிலேயே அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடக்கூடிய மரம் பூவரசுதான். மாடுகள் தெவங்கி தவித்துப்போவதிலிருந்து ஆசுவாசம்கொள்ள இப்படிச் செய்திருக்கிறார்கள். இது எப்படி நமது முன்னோர்களுக்குத் தெரிந்தது? இதையெல்லாம் உரைநடைக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டியது கடமை.

இந்த நம்பிக்கைகள் ஒருகட்டத்தில் நகைப்புக்குரியதாக மாறி பிறகு மீண்டும் கடந்தகாலத்துக்குள் நுழையும் போக்கும் அதிகரித்துவருகிறது இல்லையா?

அது அப்படித்தான் வரும். அதன் தன்மையே அதுதான். மரபின் மையத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது. ஏதோ ஒருவகையில் அதனால் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருப்போம். குடும்பத்தோடு வேறெங்கோ குடிபுகுந்தவர்களெல்லாம் குல தெய்வத்தைக் கும்பிடுவதற்காக வருகிறார்கள். “இங்க கோயிலு கெடையாது, ஒண்ணும் கெடையாது. நீங்க வந்ததுதான் முள்ள வெட்டி சுத்தப்படுத்திக் கும்பிட்டுட்டுப்போற மாதிரி இருக்கு. பெரிய பெரிய கோயிலுக்குலாம் போலாமே?” என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன். “என் தாத்தா நின்ன தடம் இந்த எடத்துலதான் இருந்துச்சு. என்னோட தாத்தா தடத்து மேலதான் என் அப்பா நின்னார். எங்க அப்பா தடத்து மேல நான் நிக்குறேன். என் தடத்து மேல என் புள்ளைங்க நிக்கணும்” என்றார். இதை நீங்கள் மூடநம்பிக்கை, பண்பாடு, பாரம்பரியம் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி.

உங்கள் படைப்புகளில் சொலவடைகளுக்கு முக்கியமான இடமிருந்துருக்கிறது. சொலவடைகளும் கிட்டத்தட்ட வாழ்விலிருந்து அகன்றுவிட்டன.

அந்தக் காலத்து ஆட்களுக்குச் சொலவடை இல்லாமல் பேசவே தெரியாது. அவர்களுக்கு இலக்கிய, காப்பியப் புலமையெல்லாம் கிடையாது. அது வாழ்வியலோடு ஒரு அங்கமாக இருந்தது. தொழில்சார் விஷயங்களில் சொலவடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. தொழில்கள் மாறுவதால் சொலவடைகளும் இல்லாமல் போய்விடுகின்றன. ‘ஒரு வயோதிகர் இறந்துபோனால் அவருடன் நூற்றுக்கணக்கான கதைகளும், சொலவடைகளும் போய்விடுகின்றன’ என ஒரு புகழ்பெற்ற ரஷ்யப் பழமொழி இருக்கிறது. இன்றைய தலைமுறைக்குச் சொலவடை என்ற வார்த்தையே அந்நியப்பட்டுவிட்டது.

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவைகள் அரிதானது. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அந்தப் பட்டியலில் ‘தூர்வை’ நாவலில் வரும் முத்தையாவுக்குப் பிரத்யேக இடமுண்டு. அது குறித்து?

இப்படியான பாத்திரங்கள் கிராமத்தில் நிறைய இருந்தன. முன்பெல்லாம் பாவைக்கூத்து, காவடியாட்டக்காரர்கள், மரக்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், பொலிப்பாட்டுக்காரர்கள் என அறுவடைக்காலத்தைக் கணக்கிட்டு பத்துப் பதினைந்து நாடோடிக்கூட்டங்கள் கிராமத்துக்கு வந்துவிடும். பூம்பூம் மாட்டுக்காரர்கள், இராப்பாடிகள், சாமக்கோடாங்கிகள் இப்போது அபூர்வமாகிவிட்டார்கள். வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இப்போது கிராமப்புற வாழ்க்கையிலும் நகைச்சுவை அற்றுப்போய்விட்டது. கி.ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் ஓரளவு பதிவுசெய்திருக்கிறார்கள். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன.

பழங்குடிகளையும், நரிக்குறவர்களையும் படைப்பாக்கியது ஆவணப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில்தானா?

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பழங்குடியின மக்களிடம் சென்று என் பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்னைத் தெரியும். அவர்களோடு இரவு வேட்டைக்குச் செல்கிறேன், சுகதுக்கங்களில் பங்கெடுக்கிறேன். கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்றால் அந்தப் பிரச்சினை தீரும்வரை யாரும் வேலைக்குப் போகக் கூடாது என்றொரு வழமை அவர்களிடம் இருக்கிறது. அறுவடை முடிந்து பருத்தி கூறுவைக்கும்போது யாரேனும் உண்டாகியிருந்தால் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் சேர்த்து பங்குவைக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படிப் பல உயரிய குணநலன்களோடு வாழ்கிறார்கள் அவர்கள்.

வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் மலையுச்சியில் ஒரு திருவிழா நடக்கும். அந்தத் திருவிழாவைப் பழங்குடிகள் தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது. அதைப் புகைப்படம் எடுக்கவோ, அது குறித்து செய்தி வெளியிடவோ கூடாது என்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். பல வருடமாக முயன்று பழங்குடியினத் தலைவரைச் சந்தித்து, பழங்குடி வேஷம் போட்டு திருட்டுத்தனமாக அதைப் பார்த்தேன். அதற்கு ‘வௌவால் திருவிழா’ என்று பெயர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் முழு நிர்வாணமாகக் கையில் இறக்கைபோல கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வௌவால் மாதிரி பறந்தபடி இரவு முழுவதும் நடனமாடுவார்கள். காரணம் கேட்டால், “இந்த மலைகள்ல உள்ள மரங்களப் பூரா வௌவால்தான வெதச்சது, நீயா வெதச்ச?” என்கிறார் பழங்குடியினத் தலைவர்.

இந்த இடம் எங்கே இருக்கிறது?

சொல்லக் கூடாது. சொன்னால் செத்துப்போய் விடுவேன்.

மா.அரங்கநாதன் உங்கள் விருப்பத்துக்குரிய படைப்பாளி இல்லையா?

தமிழில் இன்றும் சிறுகதையாசிரியர்களில் மா.அரங்கநாதனுக்குத்தான் முதலிடம். அவர் எழுதியிருப்பது அனைத்தும் நமது சைவ சித்தாந்த விஷயங்கள், சிறுதெய்வங்கள், பண்பாடு, கலாச்சாரம் குறித்துதான். அவரது மொழி மிகவும் சிக்கனமானது. ஆனால், பல அர்த்தங்கள் தரக்கூடியவை. அவரது ஒரே கதை வெவ்வேறு காலகட்டத்தில் வேறு வேறு மாதிரி தெரிகிறது. இப்படிப் புகழ்ந்து சொல்வதால் அவருக்கு எனக்கும் ஏதோ பந்தம் இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கும் எனக்குமான நேரடிப் பழக்கம் வெறும் மூன்று நிமிடங்களே.

மா.அரங்கநாதன் படைப்புலகுக்குள் எப்படி வருகிறீர்கள்?

நான் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் மா.அரங்கநாதன், மௌனி கதைகளெல்லாம் புரியவில்லை. நிராகரித்தபடியே கடந்துவந்தேன். பிறகு, எனது எழுத்துகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும்போது சிலரைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டுமென முயலுகையில் மா.அரங்கநாதன் எனக்கு நெருக்கமானவராகிறார். கவனம் ஊன்றி வாசிக்கும்போது அது அலாதியான அனுபவமாகிறது. பதினைந்து பக்கத்தில் சொல்ல வேண்டியதை அவர் இரண்டு பக்கத்தில் சொல்லிவிடுவார்.

உங்கள் வாசிப்புலக நுழைவாயிலாகத் திராவிட இயக்கப் படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது அப்படியான சூழல் இல்லை. இந்த இடைவெளி எப்படி உருவானதென்று நினைக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் அவர்கள் இலக்கியத்தைப் பிரதானப் படுத்தித்தான் உள்ளே வருகிறார்கள். அவர்கள் சொல்ல நினைத்த கருத்தாக்கத்தில் அவர்களின் மொழி ஆளுமை, அடுக்குமொழிப் பேச்சு இளைஞர்களை வசீகரித்தது. அந்த மொழி அவர்களது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறதே தவிர, படைப்புக்காகப் பயன்படவில்லை. அதிகாரம் கைக்கு வந்த பிறகு, அவர்களே அந்த மொழியைக் கைவிட்டுவிட்டார்கள்.

கரிசல் இலக்கியம், தலித் இலக்கியம் என 90-களைப் போல துல்லியமான வகைமைகளில் இந்தத் தலைமுறை படைப்புகள் வெளிப்படுவதில்லை. இந்தப் பின்னணியில் சமகால இலக்கியப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எங்கள் தாத்தா எங்கள் ஊரைவிட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார். எங்கள் அய்யா 50 ஊர்களுக்குப் போயிருப்பார். டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் என நான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். என் மகனோ சர்வசாதாரணமாக ஸ்பெயின், ஜெர்மன், அமெரிக்கா போய்க்கொண்டிருக்கிறான். இந்த நெகிழ்வுத்தன்மைதான் உடையிலும், பேச்சிலும் பிரதிபலிக்கும். இலக்கியத்திலும் அந்தத் தாக்கம் இருக்கத்தான் செய்யும். இரண்டு கிளிகள் வைத்து ஒரு கதை எழுதினேன். வனம் அழிக்கப்பட்ட நான்குவழிச் சாலையில் கூடுகட்டி குஞ்சி பொரித்த பின்பாக தனது குஞ்சிகளுக்குக் கத்தச் சொல்லிக்கொடுக்கிறது தாய்ப்பறவை. ஆனால், வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டுப் பழகிய அந்தக் கிளிகள், ஹாரன்போலவே கத்தத் தொடங்கிவிடுகின்றன. சமகாலப் போக்கும் இப்படித்தான் இருக்கிறது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x