Published : 19 Aug 2018 11:27 AM
Last Updated : 19 Aug 2018 11:27 AM

திரையில் உயிர்பெறும் மன்ட்டோ!

சாதத் ஹசன் மன்ட்டோ, காலங்களைத் தாண்டி திரும்பி வந்திருக்கிறார். அவரது எழுத்துகளையும் ஒருசில புகைப்படங்களையும் மட்டும் தரிசித்திருக்கும் நம் முன்னே, ரத்தமும் சதையுமான மனிதனாக நிற்கிறார். நந்திதா தாஸ் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ‘மன்ட்டோ’ திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை, சந்தர்ப்பங்களுக்கேற்ப கோர முகம் காட்டும் மனித வாழ்வின் கசடுகளைப் பதிவுசெய்த மன்ட்டோவின் எழுத்துகள் சமூகத்தை உலுக்கியெடுத்தன. தேசப் பிரிவினையின் ரத்த சாட்சியமாக, பாலியல் தொழிலாளர்களின் வேதனைகளின் ஓலமாக, கைவிடப்பட்ட மனிதர்களின் கண்ணீராக அவரது எழுத்துகள் வெளிப்பட்டன.

அவரது எழுத்தின் உக்கிரத்தைத் தாங்க முடியாத சமூகம் அவரை ஆபாச எழுத்தாளராகச் சித்தரிக்க முயன்றது. ஆபாசமாக எழுதுவதாக இந்தியாவிலும், பிற்பாடு பாகிஸ்தானிலும் தலா மூன்று வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. “எனது கதைகளை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் சகித்துக்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றே அர்த்தம்” என்று பதிலடி தந்தார் மன்ட்டோ. தான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றையே எழுதினார். தன் எழுத்தைப் போலவே வாழ்ந்தார். ஒரேசமயத்தில் துணிச்சல்காரராகவும் உள்சுருங்கியாகவும் கோபக்காரராகவும் வாழ்ந்தார்.

பாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளராகப் பணிபுரிந்த மன்ட்டோ, இறுதிவரை பம்பாய் நினைவுகளுடனே இருந்தார். புறக்கணிப்புகள், பிரிவினை ஏற்படுத்திய பாதிப்புகள் என்று பல்வேறு காரணங்களால் 1948-ல் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். புதிய தேசத்தின் வாழ்க்கைக்கும் பழைய நினைவுகளுக்கும் இடையில் அல்லாடியிருக்கிறார். அவரது இறுதி ஆண்டுகள் கொந்தளிப்பாகவே இருந்தன.

மன்ட்டோ தொடர்பாக எந்த வீடியோ பதிவும் இல்லாத நிலையில் அவரைப் பற்றிய குறிப்புகள், உறவினர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் மன்ட்டோவின் உடல்மொழி, பாவனைகளை எழுதியிருக்கிறார் நந்திதா தாஸ். அசாத்தியமான நடிப்புத் திறன் கொண்ட நவாஸுதீன் சித்திக் அவற்றை உள்வாங்கி நம் கண் முன்னே மன்ட்டோவை உயிர்ப்பித்திருக்கிறார்.

சேகரித்த தகவல்களை வைத்து ஆவணப்படமாக ஆக்கிவிடாமல் அதை உயிரோட்டமான படைப்பாக மாற்ற முயன்றிருப்பதாக நந்திதா கூறியிருக்கிறார். மன்ட்டோவின் நெருங்கிய நண்பர்களான நடிகர் அசோக் குமார், நடிகை நர்கீஸ் போன்ற பாத்திரங்களுக்கும் படத்தில் இடம் உண்டு. மன்ட்டோவின் சில கதைகள் சிறிய அளவில் காட்சி வடிவமாகவும் இப்படத்தில் பதிவாகியிருப்பதை ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, ‘டண்டா கோஷ்த்’, ‘டோபா டேக் சிங்’!

“தூய்மையான மனிதராக வாழ்ந்த மன்ட்டோவின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது ஒரு சாமானிய மனிதனாக எனக்குப் பெரும் சவாலாக இருந்தது” என்று நவாஸுதீன் சித்திக் சொல்கிறார். ட்ரெய்லரைப் பார்க்கும்போது மனிதர் அந்த சவாலில் மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்துக்கு இத்தனை எதிர்பார்ப்பு இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கலாம். மன்ட்டோவின் எழுத்துகள் மூலம் அவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கி வைத்திருப்பவர்களுக்கு அது நிச்சயம் ஆச்சரியம் தராது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x