Last Updated : 07 Jul, 2018 10:05 AM

 

Published : 07 Jul 2018 10:05 AM
Last Updated : 07 Jul 2018 10:05 AM

வாசிப்பு பூதம் என்னைப் பிடித்துக்கொண்டது!

இலக்கிய வாசகர்களுக்குக் கோவை என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் விஜயா வேலாயுதமாகத்தான் இருக்க முடியும். எழுத்தாளர், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் என பல்வேறு வகைமைகளில் தனது பங்களிப்பைத் தந்திருந்தாலும் தன்னை ஒரு வாசகராக முன்னிறுத்திக்கொள்ளவே விரும்புகிறவர்.

“என் வீட்டுக்கும் பள்ளிக்கும் 3 மைல் தூரம். அப்ப பஸ்லாம் கிடையாது. நடந்தேதான் போகனும். அப்போ டமாரம், டிங்டிங், அம்புலிமாமான்னு எக்கச்சக்க குழந்தைகள் பத்திரிகை வந்தது. 6 மைல் நடைபயணமும் வாசிப்புலதான் போனது. வாசிப்பு பூதம் என்னை பலமாகப் பிடித்துக்கொண்டது. அப்போது பிடித்த பூதம் இப்போது 78 வயதிலும் விட மாட்டேன் என்கிறது. அப்படி குழந்தை புத்தகத்துல ஆரம்பிச்சு சங்கர்லால் துப்பறியும் கதைகள், மர்ம மனிதன், இரவு மணி 12ன்னு வாசிப்பு உலகம் மாறியது. அதுல இருந்து நவீன இலக்கியத்துக்கு வந்தது மு.வ மூலமாத்தான். அப்படியே அவரத் தொடர்ந்து நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன்ன்னு வாசிப்பு விரிய ஆரம்பித்தது. 1977-ல் பல்பொருள் அங்காடி தொடங்கினேன். அதோட ஒரு பகுதியா புத்தகங்கள் வாங்கி வைத்தேன். அதுதான் பதிப்பகம் தொடங்குறதுக்கான ஆரம்பப்புள்ளி. 1979-ல் வாசகர் திருவிழா நடத்திட்டு புத்தகங்கள் பதிப்பிக்க ஆரம்பித்தேன். முதலில் வெளியிட்டது மு.மேத்தா புத்தகம்.

தினமும் நான்கு பத்திரிகை வாசிக்கிறேன். வாசகர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமா ‘இந்து தமிழ்’ பத்திரிகை இருக்குது. ஜி.நாகராஜன் பத்திலாம் வேற எந்த பத்திரிகைல பாக்க முடியும்? செய்தி எனக்கு எல்லா ஊடகத்துலயும்தான் கிடைக்குதே. செய்தியைத் தாண்டின விஷயத்தை ‘இந்து தமிழ்’ நடுப்பக்கம்தான் கொடுக்குது. தமிழ் வாசகர்களுக்கு ‘இந்து தமிழ்’ ஒரு பெரிய கொடை.அப்புறம், ஒரு படைப்போடு வெற்றி வாசகனோட மனசையும் எண்ணத்தையும் பொறுத்துதான் இருக்குது. ஒரு நல்ல படைப்பு எழுத்தாளரோட கைல மட்டும் இல்ல; வாசகனுக்கும் ஈரம் சுரந்துகிட்டே இருக்கனும். வாசிப்புங்குறது மனிதனோட அடையாளம். விலங்குகள் இருந்து மனிதனைத் தனித்து காட்டுறது வாசிப்புதான். சக மனிதர்கள் கிட்ட பகிர்ந்துகிறதுக்கு வாசிப்ப விட்டா மத்த விஷயங்கள்லாம் உப்புசப்பில்லாதது. அன்பு, கருணை, நல்ல சமூகத்தைக் கட்டமைக்குறதுக்கான சாவிதான் வாசிப்பு!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x