Published : 14 Jul 2018 08:45 AM
Last Updated : 14 Jul 2018 08:45 AM

நாடக உலா: திருஅரங்கண்

‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…’ எனும் பாணியில் நேரடியாக கதை சொல்லும் திரைப்படங்களைவிட, முடிவை முதலில் திரையில் காட்டிவிட்டு, அந்த முடிவு எப்படி நிகழ்ந்தது என்பதை ஃபிளாஷ்பேக் உத்தியில் சொல்லும் திரைப்படங்களுக்கு இப்போதெல்லாம் மவுசு அதிகம். அதைவிடவும், முன்னும் பின்னுமாக காட்சிகளால் பின்னப்பட்டு நகரும் திரைப்படங்களைப் பார்ப்பதில் சுவாரசியம் அதிகம் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு முயற்சியை ‘தியேட்டர் மெரினா’வின் 4வது படைப்பான `திருஅரங்கண்’ நாடகத்திலும் பார்க்கமுடிந்தது.

ஸ்ரீரங்கத்தின் நாயகன் திருவரங்கனின் கண்ணில் இருந்த ஒளிபொருந்திய வைரம், அந்நி யரின் படையெடுப்பு நிகழ்ந்த காலத்தில் களவாடப்பட்டதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. அந்த வைரம் தற்போது ரஷ்ய அருங்காட்சியகத்தில் இருப்ப தாகச் சொல்லப்படுகிறது.ஸ்ரீரங்கத்தில் இருந்து ரஷ்யாவுக்கு வைரம் எப்படி போயிருக்கும்? இதைப் பின்னணியாகக் கொண்டுஅருமையான ஒரு கற்பனை நாடகத்தை ஜெயராமன் ரகுநாதன் எழுத, அதற்கு இசையமைத்து, இயக்கி, நடித்தும் அசத்தியிருக்கிறார் ரா.கிரிதரன்.

அரங்கனின் கண்ணில் இருந்த வைரம் பற்றிய கதை என்பதை நாடகத்தின் தலைப்பிலேயே சிம்பாலிக்காக சொல்லிவிடுகின்றனர்.

கி.பி.1700-க்கும் கி.பி.2018-க்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பாக, நாடகத்தின் காட்சிகள் பழங்கால ஸ்ரீரங்கத்துக்கும், பண்டைய ரஷ்யாவுக்கும், தற்போதைய ரஷ்ய வெளியுறவுத் துறைக்குமாக ஊடாடுகின்றன.

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீரங்கத்து கோதண்ட னோடு சேர்ந்து நாமும் தவிக்கிறோம். ரஷ்யாவின் பட்டத்து ராணி காத்ரின் – ஆர்லோவின் காதலில் நாமும் களிக்கிறோம். ரஷ்யாவில் பணிபுரியும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ராமின் மர்மமான அதிரடி நடவடிக்கைகளில் நாமும் உறைகிறோம். இப்படி நம்மை ஒன்றவைக்கும் தருணங்கள், நாடகத்தில் அதிகம்.

அனுராதா ஸ்ரீராமின் பாடல், அரங்க அமைப்புகள் என ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமான ரசனை வெளிப்படுகிறது. அரங்கனின் கருணை இருந்தால் எதுவும் நடக்கும் என்னும் எதிர்பார்ப்பை, பார்ப் பவர்கள் உள்ளத்தில் தோன்றச் செய்கிறது நாடகத்தின் கிளை மாக்ஸ்.

‘திருஅரங்கண்’ நாடகம் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாளை (ஜூலை 15) ஞாயிறு மாலை 7 மணிக்கு  மீண்டும் அரங்கேற இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x