Published : 19 May 2018 08:47 AM
Last Updated : 19 May 2018 08:47 AM

தொடு கறி: மக்கள் கலைஞன் ராஜவர்மா!

புத்தகப் பண்பாடு தொடரட்டும்

வடலூரிலிருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நூலகராகப் பணியாற்றும் க.புஷ்பநாதன், விருத்தாசலத்தில் நடைபெற்ற அவரது மகன் கார்த்திக் - திவ்யா திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புத்தகங்களைப் பார்வைக்கு வைத்து, அதிலிருந்து அவர்கள் விரும்பும் புத்தகம் ஒன்றைத் தாம்பூலமாக வழங்கினார். ‘நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நூல், உங்கள் நூலகத்தின் அடிக்கல்லாகவோ மணிமகுடமாகவோ இருக்கட்டும்’ என்றும் வரவேற்பரங்கில் எழுதியிருந்தார். இந்தப் புதிய புத்தகப் பண்பாடு எங்கெங்கும் தொடரட்டும்.

தமிழில் தஸ்தயேவ்ஸ்கியின் டைரிக் குறிப்புகள்

தஸ்தயேவ்ஸ்கியின் ‘ஏ ரைட்டர்ஸ் டைரி’ எனும் நூலைத் தற்போது சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். நூறாண்டுகளுக்கு முன்னர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இந்தக் குறிப்புகளில், தான் சந்தித்த மனிதர்கள், தன்னை நெகிழவைத்த நிகழ்வுகள் என அனைத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார். 1400-க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் இரு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளை மட்டும் மொழிபெயர்த்துவருகிறார் தேவதாஸ். நூல்வனம் பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.

ஆரணியில் முதல் புத்தகக் காட்சி!

ஆரணியில் முதன்முறையாகப் புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக் கிறது. தினமும் மாலை பட்டிமன்றம், பேச்சுப் போட்டி, கதைசொல்லல், கவிதை வாசிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. மே 16 அன்று தொடங்கிய புத்தகக் காட்சி மே 20 வரை ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அடுத்து தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊர்களிலும் களைகட்டவிருக்கிறது புத்தகக் காட்சி.

சிறகு விரிக்கும் ‘கூடு’

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள் ளது இடையாத்தி கிராமம். அந்த கிராமத்துப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும், சிங்கப்பூரில் பணியாற்றும் இடையாத்தி இளைஞர் களும் சேர்ந்து, ‘கூடு’ எனும் கிராமப் பொது நூலகத் தைத் தொடங்கியுள்ளனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இந்த நூலகத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர் கள் எனப் பலரும் பங்கேற்று திறந்து வைத்ததோடு, நூல்களையும் வழங்கியுள்ளனர். ‘கூடு’ இன்னும் பல கிராமங்களை நோக்கியும் சிறகு விரிக்கட்டும்!

மக்கள் கலைஞன் ராஜவர்மா!

ராஜா ரவிவர்மா போல அவரது தம்பி ராஜவர்மாவின் ஓவியங்கள் புகழ்பெறவில்லை. இது குறித்து ஓவியர் சந்தோஷ் ஃபேஸ்புக்கில் சிறு குறிப்பு எழுதியிருந்தார்: ரவிவர்மாவின் ஓவியங்களில் இருக்கும் பளபளப்பும் அலங்காரங்களும் ராஜவர்மாவின் ஓவியங்களில் இல்லை. அவர் வண்ணங்களைக் கொஞ்சம் மங்கலாக, மண்ணின் தன்மையுடன் வரைந்திருக்கிறார். ரவிவர்மா அரச குடும்பத்தையும், கடவுள் படங்களையும் வரைந்துகொண்டிருந்தபோது, இவர் திருவிதாங்கூரின் தெருக்களில் இறங்கி சாராயக்கடை பெண்ணையும், பச்சைக்கறி விற்கிற பெண்ணையும் வரைந்திருக்கிறார். மக்கள் கலைஞனாக வந்திருக்க வேண்டியவர். ரவிவர்மாவின் அதீத வெளிச்சத்தின் பின்னால் ராஜவர்மா மங்கலாகக் காலத்தில் உறைந்து நிற்கிறார்.

தொகுப்பு: மானா, மு.மு.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x