Published : 31 May 2018 09:04 am

Updated : : 31 May 2018 09:04 am

 

நாடக விமர்சனம்: 3 ஜி

3

1952

-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யுனைடட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் நாடகக் குழு, 66 ஆண்டுகளாக நாடக உலகில் ஆல விருட்சமாக விளங்குகிறது. இதன் 67-வது படைப்பான ‘3 ஜி’ நாடகம் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் சமீபத்தில் அரங்கேறியது.

‘‘எங்கள் நாடக வெற்றிக்கு காரணம், வலுவான கதையமைப்பும் கதாபத்திரங்களின் வடிவமைப்பும்தான். இதைத்தான் தாரக மந்திரமாக எனது தந்தை ஒய்.ஜி.பி எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்’’ என்று நாடகம் தொடங்குவதற்கு முன்பாக ரசிகர்களிடம் கூறினார் ஒய்.ஜி.மகேந்திரன்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அங்கே காவலராகப் பணிபுரிபவர் தாமோஜி. சம்பள உயர்வு கேட்டதற்காக அவர் மோசமாக நடத்தப்படுகிறார். அவமானத்தை தாங்காத தாமோஜி, ‘‘ஒரே வருசத்துக்குள், இதே குடியிருப்பிலேயே ஒரு வீடு வாங்கி முதலாளியாக வருவேன்’’ என்று சவால்விட்டு வெளியேறுகிறார். சொன்னது போலவே சவாலில் வெற்றியும் பெற்று, அந்தக் குடியிருப்பின் செயலாளர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் தன்னை அவமானப்படுத்திய மோகனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இச்சமயத்தில்தான் மகாத்மா காந்தி ஆவியாக அங்கே தோன்றி, தாமோஜிக்கு நற்போதனைகளை வழங்குகிறார். நேத்தாஜியும் ஆவியாகத் தோன்றி எதிரணிக்கு தேர்தலில் வழிநடத்துகிறார்.

இதுவரை நகைச்சுவையும், நற்கருத்துகளுமாக நிறைந்த நாடகத்தின் போக்கு சற்றே தடம் மாறி, ஒய்.ஜி.மகேந்திரனுக்கே உரித்தான பாணியில் ஒரு மெலிதானச் சோகத்துக்குள் சென்று மீண்டும் சமநிலைக்கு வந்துவிடுகிறது. தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் ரசிகர்கள் மேடையில் காண்பதே சுவாரஸ்யம்.

தாமோஜியாக ஒய்.ஜி.எம். ஒவ்வொரு காட்சியிலும் தன் முத்திரையைப் பதிக்கிறார். மேடையிலேயே ரசிகர்கள் அறியாவண்ணம், சக நடிகர்களுக்கு தன் கண் மற்றும் விரல் அசைவினால் கட்டளைகளை இட்டவாறு, தன் பாத்திரத்தையும்மெருகேற்றிக்கொண்டு சென்ற விதம், ஒரு புதிய அனுபவம். தமிழ் நாடக மேடைதான் தன் உயிர் மூச்சு என்று ஒய்.ஜி.எம். அடிக்கடி கூறுவதற்கு இது ஒன்றே சான்று.

மகாத்மா காந்தியாக நடிக்கும் இளைஞர் பாலாஜியும், நேத்தாஜியாக நடிக்கும் ராமச்சந்திர ராவும் தங்கள் மாறுபட்ட வசன உச்சரிப்பாலும் உடல் மொழியாலும் கவர்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்திலேயே பேசுபவராக சித்ராலயா ஸ்ரீராம் சிறப்பாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார்.

மணிரத்னம் பாணியில் இரு வார்த்தைக்கு மேல் பேசாத கதாபாத்திரமாக ஜெயக்குமார், கண்களை உருட்டியே நகைச்சுவையை வெளிப்படுத்துகிறார். தேர்தல் முடிவுகளை அவர் அறிவிக்கும்போது சட்டென ஆங்கிலத்தில் “How is my modulation?” என்று கேட்பது குபீர் சிரிப்பு. ஒய்.ஜி.எம்மின் தோழனாகவும், கட்சித் தொண்டனாகவும் வரும் பாலாஜி தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, ஒய்.ஜி.எம்முக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பது சிறப்பு. `காசேதான் கடவுளடா’வைத் தொடர்ந்து இந்நாடகத்திலும் மனைவிக்குப் பயப்படும் கதாபாத்திரத்தில் ஜெயச்சந்திரன் மிளிர்கிறார். அவருக்கு மனைவியாக நடித்த கவுசிகாவுக்கு நல்ல (எதிர்)காலம் காத்திருக்கிறது. தொட்டதற்கெல்லாம் பந்தயம் வைக்கும் கணவன் -மனைவியாக கிருஷ்ணனும் -வேதாவும், பாலக்காடு பத்துவாக பார்த்தா பாலாஜியும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டுமே தோன்றி அரங்கை அதிரவைக்கும் சுப்புணி, நாடகம் முழுக்க வந்திருக்கலாம்.

எஸ்.கே.ஆர் (ஒப்பனை), கலை ரவி, குஹப்ரஸாத் ( ஓளி மற்றும் பின்ணணி இசை), பத்மா ஸ்டேஜ் கண்ணன் (அரங்க அமைப்பு) இவர்களின் பங்களிப்பு நாடக உயிரோட்டத்துக்கு உறுதுணை. சித்ராலயா ஸ்ரீராமின் வசனங்களில் பல நம்மைக் கவர்ந்தாலும், யார் ஆன்மிகவாதி என்பதற்கு மகாத்மா அளிக்கும் விளக்கம் அவரது திறமைக்கு ஒரு வெளிச்சம்.

தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், சக நடிகர்களுக்கும் சம வாய்ப்பளித்து, அவர்களை நன்றாக இயக்கி, அவரவர் தனித் தன்மையை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் ஒய்.ஜி.மகேந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்குச் சான்று, அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் பாபுவை ஓரிரு காட்சிகளில் தோன்ற வைத்து நம்மை நெகிழ வைத்துவிடுகிறார்.

You May Like

More From This Category

More From this Author