Published : 28 Apr 2018 08:56 AM
Last Updated : 28 Apr 2018 08:56 AM

எக்காலத்துக்குமான பகுத்தறிவு வழிகாட்டி

றிமுகமோ முன்னுரையோ தேவைப்படாத நூல்களுள் தந்தை பெரியாரின், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலும் ஒன்று. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அடிமைக்குள்ளும் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களின் விடுதலைக்காக பெரியார் ஏற்றிவைத்த சுடர், இந்த நூலின் பக்கங்கள்தோறும் ஒளிர்கிறது. கற்பை ஒழுக்க நெறியாக வைத்துக் கொண்டாடியதோடு அதையே பெண்களை அடிமைப்படுத்தும் கருவியாகவும் செயல்படுத்தியவர்கள் மத்தியில் கற்பு என்ற பொருளையே கேள்விக்குள்ளாக்கியவர் பெரியார். விதவைகளின் நிலை குறித்தும் மறுமணத்தின் தேவை குறித்தும் எடுத்துச் சொன்னவர் பெரியார். ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலின் முதல் பதிப்பு குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில் 1933-ல் அது முதல் பதிப்பு கண்டது என்பதைத் தகுந்த தரவுகளின் உதவியோடு பசு.கவுதமன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் பொதுமக்கள் பங்களிப் போடு தொடங்கப்பட்ட முதல் வெளியீட்டு நிறுவனமான ‘பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்’ சார்பில், இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல் சார்பற்றவர்களும் பகுத்தறிவு இயக்கத்தில் பங்குபெறும் வகையில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், தனி லிமிடெட் கம்பெனியாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. 1926 முதல் 1931 வரை பல்வேறு காலகட்டங்களில் ‘குடி அரசு’ இதழில் பெரியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நூலை வெளியிட்ட பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் தொடர்ந்து செயல்பட்டதற்கான போதிய சான்றுகள் இல்லை. ஆய்வுப் பதிப்பாக இப்போது வெளிவந்திருப்பது இதன் சிறப்பு!

- பிருந்தா சீனிவாசன்

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியார்

பாரதி புத்தகாலயம்,

சென்னை-18.

விலை - ரூ.50

: 044-24332424/24356935

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x