Published : 23 Dec 2017 09:06 AM
Last Updated : 23 Dec 2017 09:06 AM

சாகித்ய விருதுகள்: வாழ்த்துகளும் சர்ச்சையும்!

ந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மறைந்த கவிஞர் இன்குலாபின் ‘காந்தள் நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்கும் விருது கிடைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் நாவலை ‘கஸாக்குகளின் இதிகாசம்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த யூமா வாசுகிக்குக் கிடைத்திருக்கிறது.

இவை தவிர, தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற இரண்டு மொழிபெயர்ப்பு புத்தகங்களுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. தோப்பில் முகம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ நாவலை காஷ்மீரியில் மொழிபெயர்த்த இக்பால் நஸ்கிக்கும், ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்த கே.எஸ்.வெங்கடாசலத் துக்கும் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருதாளர் கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

சாகித்ய அகாடமியின் தேர்வு குறித்து சர்ச்சைகள் எழுவது வழக்கம்! தற்போது வேறு ஒரு காரணம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மறைந்த கவிஞர் இன்குலாபின் குடும்பத்தினர் இன்குலாபுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் தாங்கள் ஏற்கப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். ‘அதிகாரத் தரப்புக்கு எதிராகக் காலமெல்லாம் போராடியவரும், நிறுவனமயமான அங்கீகாரங்களைப் பொருட்படுத்தாதவருமான கவிஞர் இன்குலாப் தற்போது உயிரோடு இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்’ என்று கூறியிருப்பது அவர்களின் மறுப்பைச் சரியாகவே நியாயப்படுத்துகிறது. இன்குலாப் வழியில் அவரின் குடும்பமும் நடைபோடுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

இன்குலாபுக்கு விருது வழங்கப்பட்டது, அதை அவர்கள் குடும்பம் மறுத்தது என்பதையெல்லாம் தாண்டியும் சில விஷயங்கள் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. இன்குலாப் போன்ற ஒருவருக்கு அவர் இறந்த பிறகான காலம் வரை விருது கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி நம்முள் எழுகிறது. அவர் உயிரோடு இருந்திருந்தால் விருதை மறுத்திருப்பார் என்றாலும்கூட, அவருக்கு முன்பே விருது கொடுத்திருக்க வேண்டியது சாகித்ய அகாடமியின் கடமையல்லவா!

சாகித்ய விருதின் நிழல் தீண்டாமலே இறந்துபோன அரிய படைப்பாளிகள் எத்தனையெத்தனை பேர்! ந.பிச்சமூர்த்தி, மௌனி, ப.சிங்காரம், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, சி.மணி, பிரமிள், ஹெப்சிபா ஜேசுதாசன், ஆர்.சூடாமணி, மா.அரங்கநாதன், ஞானக்கூத்தன், தஞ்சை ப்ரகாஷ், ஆத்மாநாம் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். நம் சமகால எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால், விருதுபெறத் தகுதியானவரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். அவர்களையெல்லாம் சாகித்ய விருதுகள் எப்போது கண்டுகொள்ளப்போகின்றன?

நல்ல படைப்பாளிகளுக்குக் காலத்தே உரிய அங்கீகாரம் கொடுப்பதென்பது அந்தப் படைப்பாளிகளுக்குச் செய்யும் மரியாதை மட்டுமல்ல, ஒரு சமூகம் தனக்குத் தானே செய்துகொள்ளும் மரியாதையும்கூட. தமிழில் இந்த ஆண்டு அமைந்ததுபோலவே வரும் ஆண்டுகளிலும் சாகித்ய அகாடமியின் தேர்வுகள் அமையுமென்றால், தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x