Published : 11 Nov 2017 10:01 AM
Last Updated : 11 Nov 2017 10:01 AM

தொடுகறி: கடலூரில் குழந்தைகள் புத்தகத் திருவிழா!

கடலூரில் குழந்தைகள் புத்தகத் திருவிழா!

டலூரில் தேசிய அளவிலான குழந்தைகள் புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கிறது. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பயணப்படி, சிற்றுண்டி, பள்ளி நூலகத்துக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்புகளில் ஒன்று.

கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தத் திருவிழாவில் புதுடெல்லியைச் சேர்ந்த ‘நேஷனல் புக் டிரஸ்ட்’, ‘சாகித்ய அகாடமி’, ‘சென்னை புக் பார் சில்ரன்’, ‘தி இந்து’ உட்பட சுமார் 40 புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழ், ஆங்கிலம் என்று சுமார் 1 லட்சம் தலைப்புகளில் சிறார் இலக்கியப் புத்தகங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

வெறுமனே புத்தகக் காட்சியாக மட்டுமின்றி, மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் குழந்தை கள் திரைப்பட விழாவுக்கான மினி திரையரங்கம், வான்வெளி பற்றி அறிய உதவும் மினி கோளரங்கம், நூலக புகைப்படக் காட்சி உள்ளிட்ட அறிவுச் செயல்பாடு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஐயம்பெருமாள், ராஜசேகர், அய்யப்பன், த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். நாடகக் கலைஞர் வேலு சரவணனும் குழந்தைகளை மகிழ்விக்கிறார்.

தமிழகத்தின் மிகச் சிறந்த 25 நூலகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புகைப்படக் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக சிறார் இலக்கியத்தில் சாதித்த 5 எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். பேராசிரியர் மோகனா (துளிர் இதழ்), யூமா வாசுகி (வண்ணநதி), சுஜாதா (‘தி இந்து’ மாயா பஜார்), கணேசன் (சுட்டி விகடன்), லதா ஆனந்த் (கோகுலம்) ஆகியோருக்கு எழுத்தாளர் சா.கந்தசாமி விருதுகளை வழங்குகிறார்.

புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 2 மணி நேரத்துக்குள் 3,500 குழந்தைகள் பார்வையிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். போட்டிகளிலும் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள்.

நேற்று (10-11-2017) அன்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி நவம்பர் 15-ம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெறுகிறது. குழந்தைகள் புத்தகத் திருவிழா தமிழகம் முழுவதும் கிளை பரப்பட்டும்!

இது நாதெள்ளாவின் ‘ஹிட் ரிஃப்ரெஷ்’

மை

க்ஃரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்ட ‘ஹிட் ரிஃப்ரெஷ்’ புத்தகம் இந்த ஆண்டின் அதிகம் விற்பனையான புத்தககங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது. அதற்குள் இந்தப் புத்தகம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தேக்கநிலையை அடைந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தான் இணைந்த மூன்றாண்டுகளில் தான் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார். இந்த நூலின் தமிழ், தெலுங்கு பதிப்பை வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த வெளியீட்டு விழாவுக்காக சத்யா நாதெள்ளா இந்தியாவுக்கு வந்திருந்தார். மைக்ரோசாஃப்ட்டில் சத்யாவின் வெற்றிக்கதையை அவரது புத்தகத்தின் வெற்றியும் பின்பற்றுகிறதுபோலும்!

வருக ரைம்போ!

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கவிஞர் ஆர்தர் ரைம்போ மகத்தான பிரெஞ்சு கவிஞராக மட்டுமல்லாமல், உலகக் கவிஞராகவும் மதிக்கப்படுபவர். ஆந்த்ரே ப்ரெதோன், புகைப்படக் கலைஞர் கார்த்தியே ப்ரெஸ்ஸோன், விளாடிமிர் நொபக்கோவ், பாப்லோ நெருதா, பாப் டைலான் போன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்திய ரைம்போ தனது 21-வயதில் எழுதுவதை நிறுத்திக்கொண்டார். அந்த வயதுக்குள் அவர் எழுதியதே அவரை மகத்தான கவிஞர்களுள் ஒருவராக வைக்கப் போதுமானது என்பதுதான் வியப்பு! தனது 19-வது வயதில் ஆர்தர் ரைம்போ வெளியிட்ட ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ என்ற வசன கவிதை நூல் தற்போது தமிழில் வெளியாகவிருக்கிறது. எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கார்த்திகைப் பாண்டியன் இந்த நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள இந்த நூலின் அட்டைப்படத்தை நூலின் பதிப்பாளர் ‘எதிர்’ அனுஷ், ஆர்தர் ரைம்போவின் நினைவு நாளான நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

தொகுப்பு: ஆசை, கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x