Published : 25 Nov 2017 10:18 AM
Last Updated : 25 Nov 2017 10:18 AM

பரணி வாசம்: ஒரு சொம்பும் மூன்று பிச்சிப் பூக்களும்

பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவனிடம் பேசிக்கொண்டிருந்தால், ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளைச் சொல்வார். நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் துஷ்டி. கொஞ்ச வயது வாலிப இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான். வீட்டின் முன்பு ஊரே திரண்டிருக்கிறது. ஒருபுறம் மேளச் சத்தம்; இன்னொரு புறம் பெண்களின் ஒப்பாரி. மேளச் சத்தம் நிற்கிறது. இழவு வீட்டிலிருந்து வயதான ஆச்சி ஒருத்தி கையில் செம்புடன் வெளியே வருகிறாள்.

செம்பைக் கூட்டத்தின் நடுவே வைத்துவிட்டு, கையில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பிச்சிப் பூக்களைச் சொம்பில் உள்ள தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அவ்வளவுதான். அந்த ஆச்சி பூக்களைக் கையில் எடுத்துவிட்டு, சொம்புத் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிடுகிறார். கூட்டம் அனுதாபத்தில் ‘உச்’ கொட்டுகிறது. விஷயம் என்ன? இறந்துபோனவரின் மனைவி மூன்று மாதக் கர்ப்பிணி என்ற விஷயத்தை நாசூக்காகச் சொல்லும் முறைதான் இது. இந்தப் பெண் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, யார் இந்தக் குழந்தையின் தகப்பன் என்று ஊரார் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு சின்ன அசைவின் மூலம் நுட்பமாகவும் மென்மையாகவும் சொல்லப்படும் தன்மை.

இதே போல, ‘பள்ளி’ என்ற சொல் எப்படிக் கல்வி நிலையங்களைக் குறிக்கும் சொல்லாக வந்தது என்பதையும் சமணர்களின் வரலாற்றிலிருந்து எடுக்கிறார். மலைக் குகைகளில் வசித்த சமணத் துறவிகள் குகையின் தரைப் பகுதியைப் படுக்கைபோல சமதளமாக்கி அதிலே தான் படுப்பார்கள். அதுவே அவர்களின் பள்ளியறை (படுக்கை). பகல் நேரங்களில் ஞானதானம் செய்வதற்காக மலையிறங்கி வந்து ஊரில் உள்ள சிறுகுழந்தைகளைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வார்கள் இந்தத் துறவிகள். குகையில் குழந்தைகள் அமர்வதற்கு வேறு இடம் இல்லாததால், இந்த கற்படுக்கைகளின் மீது அமர்ந்து பாடம் கற்றனர்.

பள்ளிகளிலிருந்து பாடம் கற்றதால், கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று. இதுபோன்ற தகவல்கள் தொ.பரமசிவனின் ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் நிறைய உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x