Published : 25 Nov 2017 10:11 AM
Last Updated : 25 Nov 2017 10:11 AM

நிரந்தரப் புத்தகக் காட்சியை மாநிலம் முழுமைக்கும் ஏன் விரிவுபடுத்தக் கூடாது?

 

சி

ல பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட புத்தக உலகமும் புத்தக விற்பனையும் பல மடங்கு விரிவடைந்து இருக்கிறது. அவ்வாறே, பதிப்புலகத்தினர் சந்தித்துவரும் பிரச்சினைகளும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. அரசுத் துறைகளோ தனியார் துறைகளோ எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசையே நாடும் சூழலில் பதிப்புலகத்தினர் மட்டும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வுகண்டுகொள்ள வேண்டும் என்ற நிலையில் அரசால் வைக்கப்பட்டிருப்பதுதான் பெருந்துயரம்.

ஒரு சமூகத்தின் அறிவுக் கலாச்சாரத்துக்கு அரசுதான் பிரதான பொறுப்பாளர் என்பதை அரசு உணர வேண்டும்.

அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருக்கின்றன. நிரந்தரப் புத்தகக் காட்சியைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவது அவற்றுள் ஒன்று. தற்போது சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் மட்டுமே நிரந்தரப் புத்தகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களும் விற்பனைக்கு, ஆண்டு முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன.

10% தள்ளுபடியும் வழங் கப்படுகிறது. இந்த நிரந்தரப் புத்தகக் காட்சி குறித்து மக்களி டையே போதிய அளவு விளம்பரப்படுத்தப்படவில்லை என்றாலும் கணிசமான அளவு விற்பனை நடைபெறுகிறது. கன்னிமாரா நிரந்தரப் புத்தகக் காட்சிக்கு ஆண்டு முழுவதும் பெரும் அளவிலான மக்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளிலிருந்து நிரந்தரப் புத்தகக் காட்சியை விரிவுபடுத்தும் முயற்சியை அரசு தொடங்கலாம்.

தமிழ்நாடு பொது நூலகங்கள் இயக்ககத்தின் கீழ் 4,600-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இருக்கின்றன. மாநில, மாவட்ட நூலகங்கள், கிளை நூலகங்கள் என்று பல்வேறு நூலகங்கள் இவற்றுள் அடங்கும். நூலகங்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு வளர்ந்திருக்கின்றன என்பதையே இந்த எண்ணிக்கை நமக்குத் தெரிவிக்கிறது. மேலும், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்துக் கிராமங்களிலும் 2006-ல் 12,522 நூலகங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன.

நிரந்தரப் புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு இந்த விரிந்த நூலக வலையமைப்பு சிறப்பாகப் பயன்படும் என்பதில் சந்தேகமேயில்லை. பதிப்பகங்களோ புத்தக விற்பனையாளர்களோ உருவாக்குவதற்குச் சாத்தியமே இல்லாத அருமையான வலையமைப்புதான் பொது நூலகங்கள்.

நூலகங்கள்தோறும், அவை அமைந்திருக்கும் ஊரின் அளவைப் பொறுத்து, போதிய அளவு பணியாளர்களை நியமித்து, நிரந்தரப் புத்தகக் காட்சிக்கான விற்பனைப் பிரிவை அரசு நினைத்தால் எளிதில் உருவாக்கிவிட முடியும். நூலக வாரம் போன்ற தருணங்களில் நூலகங்களில் புத்தகக் காட்சி நடைபெறுகிறதல்லவா! அதை நிரந்தரப் புத்தகக் காட்சியாக நீட்டித்துவிட அரசால் இயலாதா என்ன? இதன் மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்குகள்தோறும் மக்களிடம் புத்தங்களைச் சேர்த்துவிட முடியும்.

பெருமழை வெள்ளம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று தொடர்ச்சியான பாதிப்புகளால் தொய்வடைந்திருக்கும் பதிப்புலகைத் தூக்கி நிறுத்தி, வளமான அறிவுக் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் நிரந்தரப் புத்தகக் காட்சியைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் நடவடிக்கையை அரசு உடனே எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x