Published : 01 Jul 2023 07:57 AM
Last Updated : 01 Jul 2023 07:57 AM

நூல் நயம்: ஈழப் போராட்டத்தின் மீள் பார்வை

ஈழம்: வந்தவர்களும் வென்றவர்களும்
ஜோதி கணேசன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 8148066645

ஈழத் தமிழர்களின் போராட்டம் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த நூலும் ஈழ இனக் குழுக்களின் வரலாற்றுப் பக்கங்களைச் சற்று மாறுபட்ட கோணத்தில் அசைபோட வைக்கிறது. இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற 2009 மே 16, 17, 18 ஆகிய தேதிகளிலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. பிறகு ‘ஃபிளாஷ்பேக்’ போலப் பிற்கால வரலாற்றுக்குள் வாசகர்களை இழுத்துச் செல்கிறது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதி கணேசன், இலங்கையில் உள்ள தமிழர்கள் வாயிலாகப் பேசி அறிந்தது எனப் பல தகவல்களையும் நூலில் தொகுத்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே.பி.யிடம் பேசி, நண்பர் ஒருவர் வாயிலாக உறுதிப்படுத்திய உண்மைத் தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் அவ்வப்போது உருவான சிங்களத் தலைவர்கள் பற்றியும், ஈழ விவகாரத்தில் அவர்கள் கடைப்பிடித்த தவறான கொள்கைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டங்கள் ஏன் தொடங்கின என்பது போன்ற கேள்விகளுக்கும் இந்த நூல் விடையளிக்கிறது. ஈழ விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு, ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம், ராஜிவ் காந்தி படுகொலை போன்ற அம்சங்களும் இடம்பெற்றிருப்பது, ஈழ விவகாரத்தை முழுவதும் அறிந்துகொள்ள உதவும்.

- மிது

தருமபுரி பூர்வ சரித்திரம்
டி.கோபால செட்டியார் (பதிப்பாசிரியர்: இ.தங்கமணி)
திருவள்ளுவர் பொத்தக இல்லம்
விலை: ரூ.75
தொடர்புக்கு: 9360224172

துலங்கும் காலம்

தருமபுரி குறித்து 1939இல் எழுதப்பட்ட வரலாற்று நூல் இது. இதை எழுதிய டி.கோபால செட்டியார் ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’ போன்ற நூல்களை எழுதியவர். இவரைக் குறித்து கவிஞர் பழமலய் எழுதிய கட்டுரையை முன்னிணைப்பாகச் சேர்த்திருப்பது விசேஷமானது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், கோபால செட்டியாருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்கிற தகவலை இந்தக் கட்டுரை வழி அறிய முடிகிறது. அன்றைய காலகட்ட தருமபுரி குறித்துத் தொடங்கும் இந்நூல், பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் கொங்கு நாட்டின் ஒரு பாகமான தகடூர் நாட்டை ஆண்ட அதியமானைத் தொட்டு நகர்கிறது. இந்தத் தகடூர்தான் இன்று தருமபுரி ஆகியிருக்கிறது என்கிறார். சென்னை மாகாண ஆளுநராகப் பின்னாளில் புகழ்பெற்ற தாமஸ் மன்றோ தருமபுரியில் வருவாய்த் துறையில் பணியாற்றிய அனுபவங்களும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி அருந்தகவல்களின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

- விபின்

Caption


வீடும் வாசலும் ரயிலும் மழையும்
மு.இராமனாதன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 044-24332424, 24330024

எளிய தமிழில் பொறியியல்!

பொறியாளர் மு.இராமனாதன், ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்திலும் இன்னும் சில அச்சு, இணைய இதழ்களிலும் எழுதிய பொறியியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’ என்கிற பெயரில் வெளியாகியுள்ளது. கட்டுமானத் துறைசார்ந்த கலைச்சொற்களை ஆசிரியர் இந்நூல் வழி பதிவுசெய்துள்ளார். எடுத்துக்காட்டாக, கியுரிங் (curing) என்ற சொல்லுக்கு நீராற்று என்ற சொல்லை முன்மொழிகிறார். அண்மைக்காலத்தில் நடைபெற்ற விபத்துகளைக் கொண்டு சுவர்களின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகிய மூன்று நிலைகளில் நேரும் பிழைகளை எடுத்துக்காட்டி, அவை நேராவண்ணம் தக்கவைப்புச் சுவர் (retaining wall) உள்ளிட்ட எல்லாக் கட்டுமானங்களுக்கும் பொறியியல் கணக்கீடுகளையும் வரைபடங்களையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது இந்நூல். மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொறியியல் கூறுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருப்பதால், இது சாமானியர்களுக்குப் பயன் தரும் நூல் எனலாம்.

- பால பன்னீர்செல்வம்

திண்ணை

டிராட்ஸ்கி மருதுவுக்கு விருது

தமிழ் இலக்கியச் சூழலுடன் இணைந்து பயணித்துவருபவர் டிராட்ஸ்கி மருது. தமிழின் அடையாளத்தைத் தன் ஓவியங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருபவர். இந்தியாவின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பின்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஓவியக் காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் திரைப்படங்களுக்கான கலைத் துறையில் இவர் பங்காற்றியுள்ளார். நவீன நாடகங்களுக்கான அரங்கங்களை வடிவமைத்துள்ளார். டிராஸ்ட்கி மருதுவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஸீரோ டிகிரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி பெஞ்ச் தெலுங்கில்…

இளையோருக்கான கவிதைகள் என்ற வகையில் எழுதப்பட்ட இருபத்தைந்து கவிதைகள் கொண்ட தொகுப்பு கவிஞர் ந.பெரியசாமி எழுதிய ‘கடைசி பெஞ்ச்’. பதின் பருவத்தில் உள்ள ஆர்வம், ஆர்வக் கோளாறுகள், ஆசைகள், கனவுகள், இப்பருவத்துக்கே உண்டான குழப்பம், முடிவெடுக்க முடியாமை போன்ற பல்வேறு நிலைகளைச் சொல்லும் இந்தத் தொகுப்பு, ஆங்கிலத்தைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் மொழிபெயர்த்துள்ளனர்.

இலவச ஓவியப் பட்டறை

இளைஞர் அரண் அமைப்பு ஒருங்கிணைக்கும், தமிழகத்தின் சமகாலக் கல்வி முறையை மையமாக வைத்து, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் ஓவியப் பட்டறை நடைபெற உள்ளது. ஓவியர் விஸ்வம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்க உள்ளனர். இடம், சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ். தொடர்புக்கு: 9025870613

ருஷ்டிக்கு ஜெர்மன் விருது

இந்திய-இங்கிலாந்து எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஜெர்மன் பீஸ் பிரைஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ருஷ்டியின் இலக்கியப் பங்களிப்புக்காக இந்த விருது அளிக்கப்பட உள்ளதாக ஜெர்மன் புத்தக வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விருது 25,000 யூரோ பரிசுத் தொகையையும் பாராட்டுக் கேடயத்தையும் கொண்டது. இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற உள்ள பிராங்பர்ட் சர்வதேசச் சந்தையில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

முதல்வரின் கிராஃபிக் நாவல்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கிராஃபிக் நாவல் ‘அஜய் டு யோகி ஆதித்யநாத்’ சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா பாரம்பரிய மையத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, சுவாமி மித்ரானந்தா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ‘முதல்வரான துறவி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதிய சாந்தனு குப்தா இந்நூலின் ஆசிரியர் ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x