Published : 01 Jul 2023 11:22 AM
Last Updated : 01 Jul 2023 11:22 AM

தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

மருத்துவர்கள் தினம்

சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துகள்! மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: "உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான்" அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள். அல்லும் பகலும் மக்களுக்காக தன்னலம் கருதாமல் மகத்தான மருத்துவ சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளும் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு குறித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்னையும், தந்தையும் படைக்கும் கடவுள்கள் என்றால், மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள் ஆவர். அவர்கள் இல்லாமல் மனித உடலில் ஓர் அணுவும் அசையாது. மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மருத்துவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதை உறுதிப் படுத்த அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமூகப் பொறுப்புடன் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மக்களுக்கு நலவாழ்வை உறுதி செய்வதில் ஈடு இணையில்லாத பங்கை ஆற்றுவது மருத்துவர்களே. தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பின் விலைமதிப்பற்ற அங்கமாக அமைந்த மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இத்தினத்தில், மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ( அரசாணை எண் 354 அமல் படுத்துவது) அறிவிப்பை, தமிழக அரசாங்கம் வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: மருத்துவராக பணியைத் தொடங்கி மேற்கு வங்கத்தின் முதல்வராக உயர்ந்த மருத்துவர் பி.சி. ராயின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் பி.சி.ராய். உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் கேடுகளையும் அகற்ற வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை மருத்துவர்களால் சாதிக்க முடியும். தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவாக தலைவர் வேல்முருகன்: அர்ப்பணித்து கொண்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் மருத்துவர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவு தினமான இன்று, மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து உரிமை முழுக்கம் எழுப்பும் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x