Published : 14 Oct 2017 10:52 AM
Last Updated : 14 Oct 2017 10:52 AM

நூல் நோக்கு: பாலியல் பாடம்!

பாலியல் தொடர்பான ஆரோக்கியமான பார்வையையும் அணுகுமுறையையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் பாலியல் உறவு, பாலியல்ரீதியான கண்ணோட்டங்கள், தவறான புரிதல்கள், அறிவியல்ரீதியான விளக்கங்கள் என்று விரிவான பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் பி.எம். மாத்யூ எழுதியிருக்கும் இந்த நூலில், இந்திய, கிரேக்கப் புராணங்கள், கலாச்சாரக் கூறுகளில் பாலியல் தொடர்பான வெளிப்பாடுகள், கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. வாத்சாயனர் எழுதிய ‘காமசூத்திரம்’, 16-ம் நூற்றாண்டில் கல்யாண மல்லன் எனும் அரசன் எழுதிய ‘அனந்தரங்கம்’ போன்ற நூல்களிலிருந்து பல மேற்கோள்களைப் பயன்படுத்தியிருக்கிறார் மாத்யூ.

இந்தியச் சமூகத்தின் பாலியல் சிந்தனை, மேற்கத்திய சமூகத்தில் பாலியல் உறவுகள் தொடர்பான புரிதல்கள் போன்றவை குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார் மாத்யூ. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளையும் முன்வைத்து பாலியல் தொடர்பான கண்ணோட்டங்கள், பாலியல் பழக்கவழக்கங்கள், பாலியல் அடிப்படையிலான விசித்திரமான வழிபாடுகள் போன்றவை பற்றி மாத்யூ விளக்கியிருக்கிறார். ‘முறை தவறிய’ உறவுகள் பற்றிய மர்மங்கள், தன்பாலின உறவாளர்கள் குறித்த தவறான புரிதல்கள், திருநங்கைகள், திருநம்பிகளைச் சமூகம் அணுகும் விதம், அவர்களது பாலியல் சுதந்திரம் தொடர்பான பதிவுகளைத் திறந்த மனதுடன் அணுகியிருக்கிறார் மாத்யூ.

பாலியல் உறவுகள் தொடர்பான இருட்டு உலகத்தின் மீது பாய்ச்சப்படும் அறிவார்த்தமான வெளிச்சம் இந்நூல்!

-வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x