Published : 08 Oct 2017 11:30 AM
Last Updated : 08 Oct 2017 11:30 AM

கொடிக்கால் ஷேக் அப்துல்லா: போராட்ட வாழ்க்கையின் ஆவணப் படம்

கொடிக்கால் ஷேக் அப்துல்லாவைப் பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநர் அமீர் அப்பாஸ், கொடிக்காலைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “பூமிக்கு வெளியே புன்னகைக்கும் பூக்களைப் போன்றது அல்ல போராளிகளின் வாழ்க்கை. அது பூமிக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் வேர்களைப் போன்றது.” நம் சமூகத்துக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் மாபெரும் உழைப்பு, வரலாற்றில் மறைக்கப்பட்டதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம் அந்தக் குறையை ஓரளவேனும் தீர்க்கும் வகையில் கொடிக்காலின் வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது ‘கொடிக்கால் வரலாற்று ஆவணப் படம்’!

ஆவணப் படத்தில் காண, கேட்கக் கிடைக்கும் பல்வேறு விஷயங்கள் அந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை நம் கண்முன் நிறுத்துகின்றன. கொடிக்காலைப் பற்றி எழுத்தாளர்கள், சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள் சொல்லும் கருத்துகளும் ஆவணப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கொடிக்காலை முதல் சந்திப்பில் கடுமையாக விமர்சித்து அவமதித்ததாகக் குறிப்பிடும் எழுத்தாளர் ஜெயமோகன், பல இடங்களில் தனது இப்படியான அறியாமை குறித்து நேர்மையுடன் வருத்தம் தெரிவித்திருப்பார். ஆவணப் படத்திலும் அதனைச் சொல்லியிருப்பதன் மூலம் இது ஆறாத வடுவாக அவர் மனதில் தங்கிவிட்டதை உணர்த்துகிறது. மேலும் அவர், “சாது ராமானுஜதாஸ் கொடிக்கால் வீட்டில் தங்கி தலித் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். கொடிக்காலின் மொழியில் வராவிட்டிருந்தால் இதுவும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும். நான் எழுதும் லட்சியவாதக் கதாபாத்திரங்களின் மாதிரியில் அமைந்தவர் கொடிக்கால்” என்று சொல்வதன் மூலம் தனது மனதில் கொடிக்காலுக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை வெளிப்படுத்துகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றபோது தேர்தல் அரசியல் வேண்டாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். ஆனால், கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் எனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சந்திக்கும்போதெல்லாம் அறிவுறுத்தினார். முதன்முறையாக மூப்பனாருடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தபோது சென்னைக்கு என்னைத் தேடி வந்து ஊக்கப்படுத்தினார். என்னுடைய உந்துசக்தியாகத் திகழ்ந்தவர் கொடிக்கால்” என்று நெகிழ்வுடன் நினைவுகூர்கிறார். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, “கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைய வேண்டும் என்கிற போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றபோதுதான் கொடிக்காலுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1982-ம் ஆண்டு மண்டைக்காடு மதக்கலவரம் ஏற்பட்டபோது குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்தியவர் கொடிக்கால். இலக்கியம் தொடங்கி அரசியல்வரை அவருக்கும் எனக்கும் பரிச்சயம் ஏராளம்” என்று நினைவுகூர்கிறார்.

தனது 11 வயதில் தாய் மறைந்தது, தந்தை கைவிட்டுச் சென்றது, ஒரு சலவைத் தொழிலாளிப் பெண் தன்னைப் பராமரித்தது, கொடிக்கால் என்கிற கிராமத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்தது என்று தனது பால்ய கால அலைக்கழிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் கொடிக்கால், தான் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதற்கான காரணத்தை மேலோட்டமாகச் சொல்லிவிட்டுக் கடந்து செல்கிறார். காரணத்தை விரிவாகச் சொல்ல அவர் தவிர்க்க விரும்பினாலும் இந்து மதத்தில் உள்ள சாதியக் கொடுமையே அவரை இஸ்லாத்தை நோக்கித் தள்ளியது என்பதுதான் உண்மை. அதேசமயம் இஸ்லாம் மார்க்கத்தை நோக்கித் தன்னை ஈர்த்தவர் அப்துல்லா அடியார் என்கிற முரசொலி அடியார் என்பதையும் நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார் கொடிக்கால்!

இவை தவிர, அன்றைய காலகட்டத்தில் கேரளத்தில் மன்னர் ஆட்சிகளில் நடந்த மக்கள் மீதான அடக்குமுறைகள், பெண்கள்மீது மன்னர்களின் பாலியல் சுரண்டல்கள் ஆகியவற்றையும் அவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்களையும் குறிப்பிடும் கொடிக்கால், அவையும் ஒருவகையில் சுதந்திரப் போராட்டங்களே என்று பதிவுசெய்கிறார். நாகர்கோவிலில் இருக்கிறது ஒழுகினசேரி. ஒரு காலத்தில் மன்னருக்குப் பாத்தியப்பட்ட இந்த இடத்தில் தனியார் குதிரை லாயம் இருந்தது. ஒருமுறை தலித் மக்கள் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஆட்சியரிடம் பேசி அவர்களுக்காக இந்தப் பகுதியை கேட்டு வாங்கிக் கொடுத்தார் கொடிக்கால். இன்றைய தலைமுறையினர் அறியாத இந்த விஷயமும் ஆவணப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்னொரு இடத்தில், “ஒருமுறை தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது ராசய்யா, பாவலர் வரதராஜன் இசைக்குழுவினருடன் இடதுசாரிகளுக்காகப் பிரச்சாரம் செய்தேன். காங்கிரஸுக்கு அப்போது இரட்டைக் காளைச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ‘சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா வெட்கங்கெட்ட காளை ரெண்டு’ என்கிற பிரச்சாரப் பாடல் அப்போது பிரபலம். பிரச்சாரத்தில் அதற்கு இசையமைத்துப் பாடிய ராசய்யாதான் பின்னாட்களில் இசைஞானி இளையராஜாவானார்...” என்று நினைவுகூர்கிறார் கொடிக்கால். இவை தவிர, கேரள எல்லைப்புறப் பகுதிகள் பலவற்றைத் தமிழகத்துடன் இணைக்க நடந்த அன்றைய போராட்டங்களும் இந்த ஆவணப் படத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன!

இறுதியாக, சமூகத்திடம் கொடிக்கால் ஒரு வேண்டுகோளின் தொனியில் கேட்கிறார்... “இந்தியர்களுக்கு மதம் உண்டு. இந்தியாவுக்கு மதம் கிடையாது. இதுதான் இந்த நாட்டின் அடிப்படை அம்சம். ஆனால், ஒரு மதம் சார்ந்த அரசியல் அதிகாரம் இந்த மண்ணில் உருவாக்கப்பட வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். சில மதவாத சக்திகள் இந்த தேசத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. மிகப் பெரிய ஆபத்து இது. இதைப் போராடி நாம் தடுக்க வேண்டும்” என்கிறார். 84 வயதிலும் நாட்டைக் காக்கும் போராட்டக் களத்திலிருந்து அவர் விலகிவிடவில்லை என்பதைத்தான் அவரது வேண்டுகோள் நமக்கு உணர்த்துகிறது!

- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

கொடிக்கால் : வரலாற்று ஆவணப்படம்
இயக்கம் : அமீர் அப்பாஸ்
விலை : ரூ. 100
கிடைக்குமிடம்: ரஹ்மத் பதிப்பகம், சென்னை -04. தொடர்புக்கு: 044- 2499 7373

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x