

புத்தக வாசிப்பில் நாட்டம் கொண்டவர்கள் பல ரகம். சிலருக்கு நூலகத்தில் வாசிப்பது இஷ்டம், சிலருக்கு இரவல் புத்தகங்கள் மீது கொள்ளைப் பிரியம் (திருப்பித் தராமல் இருப்பதில் அதைவிடப் பிரியம்), இன்னும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் வாங்கிக் குவிக்கும் பழக்கம்.
இது இன்னும் வாசிக்க வேண்டியவை என்று ஒரு குவியலை எப்போதும் அவர்கள் வைத்திருப்பார்கள். கால நேரம் பாராமல் பிஸியாக இருக்கும்படி வைத்திருக்கும் மாடர்ன் வேர்ல்டு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்கள் அப்படிப் புத்தகங்களைக் குவிப்பதையும், அவற்றைப் படித்து முடிப்பதையும், பின்னர் மீண்டும் குவிப்பதையும் நிறுத்துவதில்லை.
இத்தகைய புத்தகக் குவிப்புக்குப் பின்னணியில் உளவியல் ரீதியாக, உடலியல் ரீதியாக சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறது ஆய்வுக் கட்டுரை ஒன்று.
பொதுவாகவே நம் நட்புவட்டத்திலோ, குடும்பத்திலோ இப்படி புத்தகங்கள் வாங்கிக் குவிப்போரை, “ஏன் இப்படி மலைபோல குவிக்கிறாய்” என்று விமர்சிப்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.
ஜப்பானிய மொழியில் இந்த புத்தகக் குவியலுக்கு ஓர் அழகான வார்த்தையையே வடித்து வைத்திருக்கின்றனர்.
சுண்டோகு (tsundoku) என்பதே அந்த வார்த்தை. எண் விளையாட்டான சுடோகு-வுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இது சுண்டோகு. புத்தக வாசிப்பில் உள்ள ஆர்வத்தினால் அதனை வாங்கிக் குவிப்பதையே இந்தச் சொல் குறிக்கிறது. பிரித்து எழுதினால், ’சுண்டே’ என்றால் அடுக்கி வைத்தல் ‘ குவித்து வைத்தல் என்றும் ‘ஓகு’ என்றால் விட்டுவைத்தல் என்றும் பொருளாம்.
‘இவர் தீவிர வாசிப்பாளர்’ என்று சிலரை நாம் பெருமைபட அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படியே இனி இவர் புத்தகக் குவிப்பாளர் என்றும் கூட வகைப்படுத்தலாம் போல இந்த சுண்டோகு வார்த்தையைப் பார்க்கும்போது.
சரி புத்தகக் குவிப்புக்குப் பின்னணியில் சில காரணிகளைக் காண்போம். புத்தகக் குவியல் ஒருவித நேர்மறை சிந்தனையைக் கடத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உளவியல் பார்வை.
அதேவேளையில், உடலியல் ரீதியாக நமக்கு நிச்சயமாக மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களை நாம் காணும்போது நமது மூளை இயற்கை வெகுமதிகளை அருளத் தயாராகிவிடுமாம். மூளையின் மையப்பகுதியில் தான் டோபமைன் சுரக்கிறது. இதுதான் மனிதர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் நமக்கு சிறியளவில் டோபமைன்களைக் கடத்துவது உண்டு. உதாரணத்துக்கு பிடித்த உணவு, பிடித்த பாடல் என்று குறிப்பிடலாம்.
டோப்பமைனை மகிழ்ச்சி ஹார்மோன் என்றுதான் நாம் சொல்லிப் பழகியிருக்கிறோம். ஆனால் அது குறைமதிப்பு என்று கூறுகின்றனர் நிபுணர்கள். டோபமைனின் முக்கிய வேலையே, செய்வதற்கு சிறந்த செயல்களை மூளைக்கு அடையாளம் காட்டுவது. அதாவது நல்ல உணவை உண்பதால் மகிழ்ச்சியைக் கடத்துவது மட்டுமல்ல, நன்மை பயக்கக்கூடிய ஒரு பொருளுக்காக, ஒரு செயலுக்காக நமக்கு முன்கூட்டியே மகிழ்ச்சியை வெகுமதியாகத் தருவதும் கூட.
பரிணாம வளர்ச்சியின் பார்வையில் இருந்து பார்த்தால், இதன் அர்த்தத்தை உள்வாங்கலாம். நமது முன்னோர்கள் பசிக்கும் முன்னர் உணவைத் தேடிக் கண்டடைவது, புயலுக்கு முன் வசிப்படத்தை உருவாக்குவது, தேவை ஏற்படுவதற்கு முன்னரே சில அறிவுகளை பெற்றுக் கொள்வது என்று வாழ்ந்ததைக் குறிப்பிடலாம். வருங்கால வெகுமதிகளை முன் கூட்டியே தீர்மானிக்கும் மூளை, உடனடித் தேவைகளைக்கு வளைந்து கொடுக்கும் மூளையைவிட நிறைய மகிழ்ச்சியைப் பெறும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதற்கு வாசிக்கப்படாத புத்தகம் சிறந்த உதாரணம் என்கின்றனர். அது பல வாரங்களாக, மாதங்களாக வாசிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், மூளை அதன் மதிப்பை ஏற்கெனவே கணித்திருக்கும். அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தை திறக்கும் மகிழ்ச்சியைப் பெற்றிருக்கும்.
நினைவுகளை தேக்கிவைக்கும் மூளையில் முக்கியமான பாகம் ஹிப்போகேம்பஸ். இது எப்பவும் பழைய நினைவலைகளை மீட்டுத்தரும் என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இதுவே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளையும் விரிவடையச் செய்கிறது. கடந்தகால நினைவுகளையும், எதிர்காலக் கனவுகளையும் மூளையின் ஒரே மெஷினரிதான் கையாள்கிறது.
வரப்போகும் கோடை விடுமுறையிலோ அல்லது நீண்ட நெடிய பயணத்திலோ அல்லது மழை கொஞ்சும் மதியத்திலோ நீங்கள் அந்தப் புத்தகத்தை படிக்கப்போவதாக கற்பனை செய்வதை ஹிப்போகேம்பஸ் செய்யும்.
அதேவேளையில் இளம்வேனில் கதகதப்பு, காபியின் நறுமணம், புத்தகப் பக்கங்களைத் திருப்புகையில் எழும் ஓசை, உங்கள் நாற்காலி தரும் சொகுசு என்று எல்லாமே மனதில் அனுபவம் போல் விரியும். அவையெல்லாம் சேர்ந்து எதிர்காலத்தில் அனுபவிக்க்ப் போகும் மகிழ் தருணத்தை ஒத்திகை பார்ப்பதுபோன்ற மகிழ்ச்சியைத் தரும்.
நலம் சேர்க்கும் நமக்கு..
நாம் நினைப்பதை விட இதுபோன்ற கற்பனைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதாவது, நேர்மறையான எதிர்பார்ப்பு என்பது நல்வாழ்வுக்கு பங்களிக்கும் ஒரு காரணி என்கின்றனர்.
மகிழ்ச்சியான அனுபவங்களை எதிர்நோக்கி காத்திருப்பது மனநிலையை மேம்படுத்தும், உத்வேகத்தை அதிகரிக்கும், மேலும் மனித வாழ்வின் அன்றாட நெருக்கடிகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகவும் செயல்படும்.
சில நேரங்களில், ஒரு நிகழ்வை எதிர்பார்பது என்பது அந்த நிகழ்வை அனுபவித்தலுக்கு நிகரான மகிழ்ச்சி கடத்தக்கூடியதாக இருக்கும்.
படிக்கப்படாத புத்தகங்களின் குவியல், பதிலளிக்கப்படாத மின்னஞ்சல்களின் குவியலிலிருந்து ஏன் வேறுபட்டதாக உணர்கிறது என்பதை இது விளக்கலாம். இரண்டுமே செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் மூளை அவற்றை எப்படி புரிந்துகொள்கிறது என்பதில்தான்.
பதிலளிக்கப்படாத மின்னஞ்சல்கள் எதிர்கால கடமைகள். ஆனால் படிக்கப்படாத புத்தகங்கள் எதிர்கால பரிசுகள். அதுவும் இ புக்ஸ் வைத்திருப்பதை விட நம் வீட்டு அலமாரி, நூலகம் இந்த உணர்வை வலுவாக கடத்தும் என்பதே உண்மை.
ஏனெனில் ஒரு புத்தகத்தை கைப்பட வாசிப்பது என்பது மூளையை முழுமையாக ஈடுபடுத்துவது ஆகிறது. உதாரணமாக, நாம் தொடும் காகிதத்தின் தன்மை, மையின் தனித்துவமான, லேசான இனிமையான வாசனை நுகர்வு அமைப்பால் கண்டறியப்பட்டு, நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளில் ஈடுபடும் ஹிப்போகேம்பஸ் மற்றும் அமிக்டலா போன்ற பகுதிகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கும் முன்பே, அதை வாசிக்கப்போகிறோம் என்ற கற்பனை சுகானுபவத்தை கிடைக்கச் செய்துவிடுகிறது.
எனவே, ‘சுண்டோகு’ என்பது மூளையின் மிகவும் குறிப்பிடத்தக்க திறன்களில் ஒன்றை பிரதிபலிக்கலாம். இன்னும் நடக்காத அனுபவங்களிலிருந்து கூட உண்மையான மகிழ்ச்சியைப் பெறும் திறன்.