

“நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்…
வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன்...”
இந்தப் பாடல் வரிகள் 1994-ல் வெளியான ‘மே மாதம்’ திரைப்படத்தில் கட்டாய திருமணத்தில் இருந்து தப்பித்து வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு பணக்காரப் பெண் பாடுவதாக அமைந்திருக்கும்.
இந்திய சினிமாவில் இதுபோல் பல நூறு உதாரணப் பாடல்களை பட்டியலிடலாம். எல்லாவற்றுக்கும் அச்சாணி, ஒரு பெண் தன் வீடு, உறவு, ரொட்டீன் குடும்ப வாழ்க்கை போன்ற கட்டமைப்புகளை உடைத்து வந்தால் மட்டுமே சுயத்தை கண்டடைந்து மகிழலாம் என்பதாகவே இருக்க, அதைச் சுற்றி கதைகளை எழுதியிருப்பார்கள்.
உண்மைதான்! அன்பால் இணைக்காது சுதந்திரத்துக்கு சங்கிலிபோடும் உறவுகளோ, ‘இவை பெண்ணுக்கானது’ என்று சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அடையாள பிம்பங்களோ, பொதுபுத்தியில் பெண் மீதான பார்வைகளோ உடைத்தெறிவது நிச்சயமாக ஒரு பெண் தன் சுயத்தைக் கண்டடைதல் தான். ஆனால் அது வெறும் ஆரம்பப் புள்ளி மட்டுமே.
சுய தேடல் என்பது ‘மே மாதம்’ சந்தியா போல் இரவில் தனியாக தேநீர் குடிப்பது மட்டுமல்ல. 2017-ல் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்தில் சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ரொட்டீன்களில் இருந்து சில நாட்கள் தங்களை விடுவித்துக் கொள்வது மட்டுமல்ல, ‘ஒரு பெண்ணின் கனவுகளுக்கு காலாவதி தேதியை நிர்ணயிப்பது யார்?’ என்று 2015-ல் ‘36 வயதினிலே’ படத்தில் வசந்தி எழுப்பும் கேள்வி மட்டுமல்ல!
உணவு, உடை, கல்வி, வேலை, உறவு, திருமணம், குழந்தைப் பேறு, பயணம், வசிப்பிடம் என ஒவ்வொன்றிலும் அவள் அவளாகவே இருத்தல். அவளுக்கானதை அவளே தீர்மானித்தல். அவள் தேர்வுகளை மோசமாக விமர்சிக்காத வண்ணம் சமூகத்தை தட்டி எழுப்பி, பாலினங்களுக்கு இடையே பேதம் இல்லை என்று ஏற்கவைத்தல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லக்ஷ்மி, மது, சாந்தி பாலச்சந்திரன் நடிப்பில் வெளியான ‘Sweet Kaaram Coffee’ சீரிஸ் பார்த்திருந்த எனக்கு மதுவை (மதுபாலாவை) இன்னொரு சுய தேடல் படத்தில் பார்க்கப்போவதில் பெரிய ஈர்ப்பு ஏதும் ஏற்படாத நிலையில், ட்ரெய்லர் பார்க்க நேர்ந்தது. அப்போதுதான், இந்தப் படம் சுய தேடலுக்கு ஊடே மனித உறவுகளின் நுணுக்கங்களைப் பேசுமோ என்ற தூண்டிலில் விழுந்தேன் நான்.
ஆம், முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் இடையே ஏற்படும் பிணைப்பு ஊடே நடைபெறும் சுய தேடல் பற்றி தான் மது, இந்திரன்ஸ் நடிப்பில் 2026 ஜூனில் வெளியான ‘சின்ன சின்ன ஆசை’ பேசுகிறது. திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஒரு ஸ்லோபர்னர் ரொமான்டிக் / கான்வர்சேஷனல் டிராமா ஜானரில் இந்தப் படத்தை அடக்கலாம். ஆரம்பத்தில் ரஹ்மான் வைப் என்று அமைந்திருந்தாலும், படம் முழுவதும் கோவிந்த் வசந்தா இசை காசி போன்ற ஆன்மிக நகரில் ஓர் ஆணும் பெண்ணும் ஆத்மார்த்த உறவை அன்பால் வளர்ப்பதை அழகாகவே செய்திருக்கிறது.
காசிக்கு ஒரு நாள் ஆன்மிகப் பயணமாக வரும் குழுவில் இருக்கிறாள் லீலா. எப்போதும் சேலை முந்தானையை இழுத்து இழுத்து தன்னை மூடிக் கொள்பவள், பூக்கள் சூடிக் கொண்டு, பளிச் அலங்காரத்துடன் உள்ள தனது பெண் ட்ரிப்மேட்ஸைப் பார்த்து ஏங்குவதாக இருக்கிறாள்.
இன்று 50+களில் இருக்கும் பெண்களில் பலருக்கு இந்த அடையாளச் சிக்கல் இருக்கிறது. தனக்கு பிடித்த வாழ்க்கை எது என்பதே தெரியாமல் போகும் அளவுக்கு அந்தப் பெண்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒருவேளை இன்னும் 10 ஆண்டுகள் தாண்டினால் இதுபோன்ற சுய தேடலுக்கு ஏங்கும் பெண்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காரணம், இப்போதைய இளம் பெண் தலைமுறையினர் வசம் இருக்கும் கல்வியும், அது தந்த துணிச்சலும், பொருளாதார சுதந்திரமும் என்றால் மிகையாகாது.
காசிக்கு வந்து இறங்கிய அடுத்தநாள் காலையிலேயே லீலா தன் குழுவில் இருந்து தவறிவிடுகிறாள். பணப்பையும், மொபைலும் பறிபோய்விட செய்வதறியாது காசியின் ஒரு படித்துறையில் அவள் நிற்க, முதன்முதலில் மாதவன் மாஸ்டருடனான நிகழ்கிறது. அவள் அழுகிறாள். அவளுக்கு உதவி தேவைப்படுகிறது. அவள் தமிழ் பேசுபவள், காசியில் தொலைந்துவிட்டாள் என்பதை மட்டுமே தெரிந்த நிலையில் உதவிக்கு வருகிறார் மாதவன் மாஸ்டர்.
அடுத்தடுத்து பெரும்பாலும் நாம் ஊகிக்கும் படியான காட்சிகள்தான். ஆனால் சக மனிதரின் மீதான அன்பு ஆழமாவதும், நம்பிக்கை வளர்வதும் அத்தனை இயல்பாய் நடக்கிறது.
ஒருநாள் காலை தொடங்கி இரவு வரை 50+ வயதை அடைந்த மனைவியை இழந்த ஆண், கணவனை இழந்த பெண் தங்களுக்காக தாங்கள் வாழ்தலை அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் நிறைவாகவே சொல்லியிருக்கிறார்.
இணையர் இல்லாத நிலையில், 50+களில் உள்ள மனிதர்களுக்கு வழித்துணையின் அவசியம் என்ன என்பதை லீலா - மாதவன் மாஸ்டரின் பார்வைகள் கடத்தும் பாசமும், வார்த்தைகள் கடத்தும் வெறுமையும் உணர்த்தும்.
லீலாவை தேட யாருமில்லை. மாதவன் மாஸ்டருக்கு இனிமையான தருணம் என்றால், அது மகளைப் பார்ப்பது மட்டுமே.
லீலாவின் ஆன்மிக ட்ரிப் குழுவில் உள்ள பெண்கள் அவளைப் பற்றி பேசும் புறணிகள் அதை நிரூபிக்கும்.
இணையர் இல்லாத நவநாகரிக பெண்களின் நிலை சற்றே மேம்பட்டிருந்தாலும் கூட அவர்களைச் சுற்றிய பிரச்சினைகள் இதே அளவுக்கு ஆழமானவையே. இந்திய சமூகத்தில், அதுவும் மதம், சடங்குகள் என கட்டுபட்டுக் கிடக்கும் ஒரு நடுத்தர வர்க்க வடக்கத்திய குடும்பத்தில் ஓர் இளம் விதவையின் விடுதலை வேட்கையும், அவளின் விடுதலையும் வெகு நிச்சயமாக பைத்தியக்காரத்தனமாக மட்டுமே பார்க்கப்படும் என்பதை தெரிந்துகொள்ள 2021-ல் வெளியான ‘Pagglait’ படத்தைப் பாருங்கள் புரியும்.
நாம் லீலாவுக்கு வருவோம். பொதுவாகவே முன்பின் பெரிதும் அறிமுகமில்லாதவரிடம் பெண்கள் எந்த வயதிலிருந்தாலும் ஓர் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவர். அதுவும் 10-ம் வகுப்பைவரை கூட படித்து முடித்திராத, தஞ்சையில் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த லீலாவுக்கு மொழி தெரியாத ஓர் ஊரில் பழக்கமில்லாத மாதவன் மாஸ்டர் மீது எச்சரிக்கையை தாண்டி சந்தேகம் இருக்கிறது. ஒருவகையில் தற்காப்பு மனோநிலை எனலாம்.
லீலாவின் சந்தேகங்களை, தயக்கங்களை அவளது முகபாவனை, உடல்மொழி கொண்டே கணித்து நடந்துகொள்ளும் மாதவன் மாஸ்டர் உண்மையில் குணத்தில் ஒரு மாஸ்டர்தான். அவருக்கு உள்ளூரில் இருக்கும் மரியாதை, நிச்சயமாக அவர் ஒரு நல்ல மனிதர் தான் என்று லீலாவுக்கு நம்பிக்கையை வளர்க்கிறது.
பார்த்த சில மணி நேரங்களிலேயே இருவரும் தங்களது பின்புலம் பற்றி மனம்விட்டு பரிமாறிக் கொள்ளும் விதம் ஃப்ளாஷ் பேக், கண்ணீர் என்று நம்மையும் துயரத்தில் தள்ளாமல் சக மனிதரின் துக்கத்துக்கு பரஸ்பரம் காது கொடுக்கும் அவர்களைப் போல் நம்மையும் செய்யத் தூண்டுகிறது.
கணவருக்கு பிடிக்காது என்பதால் நடனமாடுவதை நிறுத்திய, அவர் தன் மீது காதலை செலுத்தாமல் ஒரு வேலைக்காரியைப் போல் மட்டுமே நடத்தினாலும் கணவர் மீது மொத்த அன்பையும் குவித்த லீலா காலப்போக்கில் ஏக்கங்களின் உருவகம் ஆகிவிட்டாள் என்பதை அவளது விவரிப்புகள் நமக்கு உணர்த்தும்.
அத்தனையையும் கேட்டுக் கொண்ட மாதவன் மாஸ்டர், சற்றே கூடுதல் அக்கறை, அவளுக்குக் கிடைக்காதுபோன அன்பை வெளிப்படுத்தியபோது லீலா அதிர்ச்சியடைகிறாள்.
புடவையும், பூவும் அவளுக்கு உறுத்துகிறது. உண்மையில் அதுபோன்ற சின்னச் சின்ன அன்புக்காக ஏங்குபவள்தான் லீலா. ஆனால், சமூகத்தின் விமர்சனங்களுக்கு பயப்படுகிறாள். மாதவன் மாஸ்டர் அத்துமீறியதாக உணர்கிறாள்.
எனக்கு பூ வாங்கிக் கொண்டு வந்ததற்காக ‘சாரி’ சொல்லுங்கள் என்பாள் லீலா. அப்போது மாதவன் மாஸ்டர் சொல்லும் ‘சாரி’ அத்தனை பாந்தமானது.
அந்த வகையில், தலை சாய்த்து, புன்னகை கலந்து, ‘இந்த ஒற்றை வார்த்தை சொன்னால் நீ என்னுடன் சகஜமாகப் பேசுவாயா, இதோ சொல்கிறேன்’ என்பதுபோல் மாதவன் மாஸ்டர் சொல்லும் அந்த ‘சாரி’... நாம் எல்லோரும் தாராளமாகப் பயன்படுத்த வேண்டியது.
இப்படியாக பரஸ்பரம் புரிதல்கள் நீண்டு, அது வலுவான பிணைப்பாக உருவாகும் வேளையில், லீலாவை அவளது சுற்றுலா குழு கண்டுபிடித்துவிடும்.
ஒருநாள் முழுக்க தன்னைத் தானே செல்ஃப் டேட் (Self-date) கூட்டிச் செல்ல நினைத்த லீலாவுக்கு குழுவுடன் மீண்டும் ஐக்கியமாவதில் விருப்பமில்லை. அதனால் மாதவன் மாஸ்டரிடம் பொய் சொல்லி அனுப்பிவைப்பாள். தனது உள்ளமறிந்து போக வேண்டாம் என்று சொல்வார் என நினைத்து நிற்பாள். மாதவன் மாஸ்டரோ நான் உங்களுடன் வருகிறேன் என்று லீலா சொல்ல மாட்டாளா என்று ஏங்கி நிற்பார். ஆனால் பிரிவு சம்பவிக்கும்.
என்னுடன் நீங்கள் வந்தால் குழுவினர் தப்பாக நினைப்பார்கள் என்று லீலா சொல்வதும், பின்னொரு காட்சியில் தம்பி ராமையா லீலா - மாஸ்டரை தவறாகப் பேசுவதும் அருவருப்பானவை.
“ஒருவருக்கு உரிய வழித்துணை அமையும்போது, அதை சமூகம் எப்படி பார்க்க வேண்டும்?” என்பதை எப்படிச் சொன்னாலும் புரிந்து கொள்ளாதவர்களாகவே சமூகத்தின் அந்த 4 பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக அஞ்சி லீலா எடுக்கும் முடிவு மீண்டும் அவளுக்கு வெறுமையையே அளிக்கிறது. அந்தக் குட்டி வெறுமைக்கு துணைக்கு வருகிறான் ஜாஃபர் சாதிக்.
“எனக்குள் இருக்கும் குட்டி லீலாவின் அழுகைக்கு காரணம் தெரியும். அதனாலேயே நான் அவளிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டத்தில்லை” என்று ஜாஃபரிடம் ஓபன்-அப் ஆகும் லீலாவிடம், ‘இந்த நிமிடத்தை வாழ்’, என்று கற்றுக் கொடுக்கிறான்.
ஏற்கெனவே, “நான் எதிர்பார்த்த காசி இதுவல்ல” என்று சொல்லும் லீலாவிடம், “நீ இங்கு என்ன காண விரும்புகிறாயோ, அதை மட்டும் பார். தெரியும்” என்று தத்துவார்த்தமாக அறிவுறுத்தியிருப்பார் மாதவன் மாஸ்டர்.
படத்தின் போக்கு தெரியாத ஊரில் ஒரு பெண் இத்தனை நல்லவர்களைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். உண்மையில் மனிதர்கள் இப்படித்தானே இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னென்னவோவாக இருக்கிறார்கள்.
அதிகாலை தொடங்கி அந்தி மாலை கடந்து இருள் கவ்வும் இரவு வரை இருவரும் காசியில் அன்பில் இணைந்து உலாவுகிறார்கள்.
நம் எல்லோரைப் போலவும், மாதவன் மாஸ்டர் மகளும், மருமகனும் இருவரும் காதலை சொல்லிக் கொள்ள மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள்.
நான் அத்தியாய ஆரம்பத்தில் சொல்லியிருப்பேன், இன்னும் சில ஆண்டுகளில் இதுபோன்று காலங்கடந்து சுயத்தை கண்டடையும் பெண்கள் இருக்க மாட்டார்கள் என்று. மாதவன் மாஸ்டரின் மகள் ஜானகி தந்தையின் உணர்வுகளை மதித்து செயல்படும் விதமே அப்படி என்ன சொல்லவைத்தது. அது மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தனித்து வாழும் நபர்களின் மனம் முதிர்ந்தவாரிசுகளை நான் பார்த்துப் பழகியிருக்கிறேன்.
மாதவனும், லீலாவும் மற்றும் பலரும் ஒருவொருக்கொருவர் செய்யும் சகாயங்கள், குறிப்பாக மாதவன் - லீலா இடையே நிலவும் சொல்லப்படாத காதல் அத்தியாயத்தை நாம் பல விதமாக எதிர்பார்த்திருக்க, லீலாவின் ‘சின்ன சின்ன ஆசை’களுக்கு அறிமுக இயக்குநர் வர்ஷா வேறொரு விதத்தில் ஃபேர்வெல் சொல்லியிருப்பார். அதன் நோக்கம் என்ன என்பதை பார்வையாளர்கள் யோசிக்கும்போது, அவரவர் அனுபவத்துக்கேற்ப விடை கிட்டுவது நிகழக்கூடும்.
லீலாக்களின் சுய தேடல் தாகம் தணியும் காலம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதால், தேவதைகள் தேரில் அவளை ஏற்றத் தோன்றியது.
எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் திரையுலகுக்கு கேட்க வேண்டியுள்ளது.
‘உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ’ என்று சிவாஜி காலத்திலும், ‘மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ!’ என்று ரஜினிகாந்த் காலத்திலும், ‘அனல் மேலே வாழ்கிறாய்… நதி போலே பாய்கிறாய்… ஒரு காரணம் இல்லையே… மீசை வைத்த பிள்ளையே...’ என்று தனுஷ் கால யாமினிக்கள் வரை ஆண்களின் அகம், புறத்தை எல்லாம் அன்பினால் அரவணைக்கும் பெண்களையே காட்டும் திரையுலகம், பிரமாதமான புறத்தோற்றம் கொண்ட ஹீரோ, ஓர் இயல்பான தோற்றம் கொண்ட பெண்ணின் அன்பை, அறிவை மட்டுமே சிலாகித்து, அவளுக்காக வாழ்வது போல் எப்போது திரைப்படங்கள் எடுப்பீர்கள் என்பதே அந்தக் கேள்வி. அதுவொரு பெரிதினும் பெரிதான ஆசையும் கூட.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in