பணிபுரியும் ஜென்ஸீ-க்களிடம் ‘பதவி உயர்வு’ மோகம் பெரிதாக இல்லாதது ஏன்?

பணிபுரியும் ஜென்ஸீ-க்களிடம் ‘பதவி உயர்வு’ மோகம் பெரிதாக இல்லாதது ஏன்?
Updated on
3 min read

ஒருவரின் சிந்தனை, பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்பு, நம்பிக்கை சார்ந்த நிலைப்பாடுகள் அவர் எந்தத் தலைமுறையை சார்ந்தவர் என்பதை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை தலைமுறை இடைவெளி என்று வகைப்படுத்தலாம். இருப்பினும் இந்தத் தலைமுறையில் பிறந்தவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள் என்று பொதுப்படையாக சொல்லிவிடவும் முடியாது. 70-களில் பிறந்தவர் நவீன சிந்தனையோடும், 2கே-வில் பிறந்தவர் பழமைவாதியாகவும் இருக்கலாம்.

ஆனாலும், இந்த ஜென்ஸீ தலைமுறையினர் அணுகுமுறை பல தளங்களிலும் வித்தியாசமானதாகவே இருப்பதை கவனிக்கமுடிகிறது. அந்த வகையில் ஜென்ஸீ-க்களின் ‘கான்ஷிஸ் அன்பாஸிங்’ (conscious unbossing - சுய விருப்பத்துடன் உயர் பதவிகளை தவிர்ப்பது) என்ற உத்தி கார்ப்பரேட் வேலை கலாச்சாரத்தில் வேகமெடுத்து கவனம் ஈர்க்கிறது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் இதுபற்றி ஒரு சுவாரஸ்ய செய்தி வெளியாகிருக்கிறது. அதைப் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அலசுவோமாக.

சீனாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஜென்ஸீ தலைமுறையினரில் பெரும்பாலானோர், ‘எங்களுக்கு புரோமோஷன் வேண்டாம்’ என்று சுய விருப்பத்தோடு தெரிவிக்கின்றனர். வேலை - வாழ்க்கை சமநிலை, தனிப்பட்ட வளர்ச்சி, சம்பாத்தியத்துக்கு முக்கியத்துவம் தரும் அவர்கள், பாரம்பரியமாக வேலையில் முன்னேற்றம் / வளர்ச்சி என்பது பதவி உயர்வு சார்ந்தது என்ற கற்பிதத்துக்குள் அடங்க மறுக்கின்றனர்.

அதன்படி, சீன ஜென்ஸீக்கள் பதவி உயர்வை சுய விருப்பத்தின் பேரில் நிராகரிப்பது தொடர்பான சமூக வலைதளப் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன. மேலாளர் பதவி உள்ளிட்ட உயர் பதவிகள் வழங்கப்பட்டால் அதை மிக நேர்த்தியாக எப்படி நிராகரிப்பது என்பதற்கு வழிகாட்டும் பதிவுகள் அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் உலா வருகின்றன.

பணியிடத்தில் மிகும் அழுத்தங்களை சுமக்கத் தயாராக இல்லை, பணிச்சுமை கூடினாலும் போதுமான ஊதியின்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி எப்படி பணிவுடன் புரோமோஷன்களை நிராகரிப்பது என்பதை விளக்கிப் பதிவுகள் மிகுந்து வருகின்றன.

முன்பெல்லாம், “அதிக வேலைப்பளு, நெருக்கடியான சூழல், குறுகிய காலக்கெடு (deadline) இருந்தாலும் பதற்றமடையாமல், தெளிவாக சிந்தித்து வேலையை சிறப்பாக முடிப்பேன்”, அதாவது ‘Works well under pressure’ என்பது ஒருவர், தனது வேலைக்கான சுய விவர அறிமுகக் குறிப்பில் குறிப்பிடும் போக்கு இப்போது க்ளிஷே (தேய்வழக்கு) ஆகிவிட்டது.

அதுவும், வேலையிடத்தில் எதற்காக நெருக்கடியை மேலே தூக்கிச் சுமக்க வேண்டும் என்று கேள்வி கேட்கின்றனர் சில ஜென்ஸீ-க்கள். அதன் விளைவுதான் இந்த ‘கான்ஷியஸ் அன்பாஸிங்’.

சீன ஊடகத்துக்குப் பேட்டியளித்த கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர்,10 வருட பணிக்காலத்தில் 3 முறை மேலாளர் பதவியை புறக்கணித்ததாகக் கூறியுள்ளார். ஒருமுறை கல்வி நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர், 2 வாரங்களிலேயே அதைக் கைவிட்டதாகவும் கூறுகிறார். அதற்குக் காரணம் பணிச்சுமை என்கிறார். அதன்பின்னர் வந்த பதவி உயர்வை அதற்கேற்ற ஊதிய உயர்வு இல்லை என்பதற்காகத் துறந்ததாகக் கூறுகிறார்.

மற்றுமொரு சீன இளைஞர், “நிறுவன மேலாளர் பதவியை ஏற்றுக் கொண்ட பின், அது சார்ந்த நான் பொறுப்புகளை தனியாகவே கையாள வேண்டியிருந்தது. அழுத்தம் கூடியதாக நான் உணர்ந்த போதெல்லாம் அது எனக்கு தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் என்று எனக்கும் மேலே இருப்பவர்கள் கூறினார்கள். ஆனால் என் சுய அனுபவத்தின்படி, அந்தப் பதவி எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதத்திலும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கவில்லை. நான் யாரையும் பார்த்து எதுவும் கற்றுக் கொள்ளும் வகையில் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இன்னமும் கூட டெஸிக்னேஷன் சேஞ்ச் என்ற பெயரளவிலான பதவி உயர்வு அங்கீகாரமாக கருதிக்கொள்ளும் முந்தைய தலைமுறையினர் மத்தியில், தங்களுக்கு தேவையானது சரியான வடிவத்தில் கிடைக்காவிட்டால் அதைப் புறக்கணிக்கும் ஜென்ஸீக்களின் துணிச்சல் ஒரு பாடமே என்றும் சீன சமூக வலைதளங்களில் மில்லனியல்கள் வரவேற்கின்றனர். எங்களால் இப்படிச் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படும் ரியாக்‌ஷன்களும், பொறுப்பற்ற போக்கு என்ற வசைபாடும் எதிர்வினைகளும் இல்லாமல் இல்லை.

பதவி உயர்வுடன் அதற்கேற்ற ஊதிய உயர்வு, சலுகைகள் வராதபோது அதை ஏற்பது நம்மை சுமைதாங்கியாக மாற்றிவிடும் என்று, ஜென்ஸீக்களின் முடிவை மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் வரவேற்கின்றனர்.

சீனாவை தாண்டி..

இப்போதைக்கு சீனாவில் பரவலாகக் காணப்படும் ‘கான்ஷியஸ் அன்பாஸிங்’ முறை, சீனாவைத் தாண்டியும் வேகமாக விரிவடைதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2024-ல் ராபர்ட் வால்டர்ஸ் என்ற பிரிட்டன் நிறுவனம் எடுத்த ஆய்வறிக்கையில், ஜென்ஸீ தலைமுறையினரில் பாதிக்கும் மேலானோர் மிடில் மேனேஜர் பதவிகளை விரும்பவில்லை என்று கூறியதாகக் குறிப்பிடுகிறது. மேலும், ஜென்ஸீ தலைமுறையினரில் 72% பேர் பணி சார்ந்த முன்னேற்றத்தைத் தாண்டி தனிப்பட்ட வளர்ச்சியையே விரும்புகின்றனர் என்றும் குறிப்பிடுகிறது.

இந்தப் போக்கு காரணமாக, அவர்களுக்கு பொறுப்பு இல்லை, இலக்கு இல்லை என்று கூறிவிட முடியாது. மாறாக, அவர்கள் தங்களை முன்கள ஊழியர்களுக்கும், மூத்த செயலாக்க அதிகாரிகளுக்கும் இடையே சிக்கவைக்க விரும்பவில்லை என்றே கருத வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை, தனது குடும்பம் என்று அவர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கை முடிவுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பழமைவாதிகளுக்கு எச்சரிக்கையா?

இது வெறும் சீனாவின் நிலவரம் மட்டுமல்ல, இந்தியாவிலும், குறிப்பாக ஐடி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இதே மனநிலை பரவி வருவதாக பணியாளர் போக்கு ஆய்வு நிறுவனங்கள் (Employee Trend Researchers) கூறுகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களோ, பாரம்பரிய நிறுவனங்களோ, இல்லை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களோ இனியும் பதவி உயர்வை மட்டும் கொடுத்து பணியாளர்களை தக்கவைக்க முடியாது. அவர்களின் திறனுக்கேற்ற ஊதியம், அவர்களின் மனநலனுக்கு முக்கியத்துவம், பணி சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யாவிட்டால் ‘புரோமோஷன் வேண்டாம், நிம்மதி போதும்’ என்ற ஜென்ஸீக்களின் குரல் இன்னும் ஓங்கியே ஒலிக்கும். இது சோம்பேறித்தனம் அல்ல; தங்கள் உழைப்பின் மதிப்பை உணர்ந்த தலைமுறையின் தெளிவான நிலைப்பாடு என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கூடுதல் பொறுப்பு என்பது கூடுதல் சன்மானம் அல்ல என்பதை ஜென்ஸீக்கள் தங்களின் முந்தைய தலைமுறையினருக்கும் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இதனை மறுக்கும் கருத்துகளும் நிறையவே இருக்கின்றன.

குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இல்லாத நாடுகளை விரல்விட்டு எண்ணிவிடும் நிலையே இருக்கும் சூழலில், ‘கான்ஷியஸ் அன்பாஸிங்’ இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த காலங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

பணிபுரியும் ஜென்ஸீ-க்களிடம் ‘பதவி உயர்வு’ மோகம் பெரிதாக இல்லாதது ஏன்?
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in