Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35
Updated on
5 min read

“உண்மையான காதல் என்பது பேய்களைப் போன்றது. அதைப் பற்றிய பேச்சுகள் உண்டு; ஆனால் கண்ணால் கண்டவர் சிலரே.” - பிரான்சுவா டி லா ரோச்ஃபோகால்டு (François de La Rochefoucauld) என்ற 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்ஸ் சிந்தனையாளர், எழுத்தாளர் தனது ‘ரெஃப்லெக்சியோன்ஸ்’ என்ற நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

கண்களால் காண முடியாதவற்றின் மீதும், அறிவால் அளக்க முடியாதவற்றின் மீதும், நம் புரிதலுக்கு அப்பால் நிற்பனவற்றின் மீதும்தான் மனித மனம் எப்போதும் தீராத தேடல் கொள்கிறது. அந்தத் தேடல், சிலசமயம் கடவுள் மீதான பக்தியாகவும், சில நேரங்களில் வேற்றுக் கிரகவாசிகள் மீதான ஈர்ப்பாகவும், சில தருணங்களில் அமானுஷ்யங்கள் மீதான அச்சமாகவும் கிளைகள் பரப்புகிறது.

அமானுஷ்யம் என்றதுமே கோரப் பற்கள், அதில் ரத்தக்கறை, விகாரமான முகம், தலைவிரி கோலம் கொண்ட பெண் உருவங்கள்தான் நம் மனதில் பதிய வைக்கப்பட்ட பேய்கள்.

இந்த உலகம் பெண்ணைப் பேயாகக் காட்டித்தான் பழக்கப்பட்டிருக்கிறது. சூனியக்காரி முதல் ரத்தக் காட்டேரி வரை அதில் நூறு வகை உண்டு. அதிலும் அவற்றின் இலக்கு பழி வாங்குதலாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களையும் கூட அது பழி வாங்கும்.

தமிழ் சினிமா தொடங்கி உலக சினிமா வரை பழி வாங்கும் பேய்களாக வந்துபோன பெண்கள் மத்தியில் ஆறுதல் பரப்பி மிளிர்ந்த ஆன்மாக்கள் சில இருக்கின்றன.

அப்படியான ஓர் ஆன்மாவைப் பற்றிய படமான 2025-ல் மலையாளத்தில் வெளியான சர்வம் மாயா (Sarvam Maya) தான் நாம் இந்த அத்தியாயத்தில் பார்க்கவிருக்கும் முதன்மையானத் திரைப்படம்.

ரியா ஷிபு (டெலுலு), நிவின் பாலி (பிரபேந்து) நடித்த ரோம்-காம் ஜானரில் அடங்கும் இந்தப் படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் காணக்கிடைக்கிறது.

இந்த அத்தியாயத்தில், ‘சர்வம் மாயா’வில் பிரபேந்துவுக்கு நல்லதொரு துணையாகும் டெலுலுவைத் தரிசிப்பதோடு, ‘கூடே’ ஜெனிஃபர், ‘நீலவெளிச்சம்’ பார்கவிக்குட்டி, ‘பிசாசு’ பவானி போன்ற ஆவிகள் தரும் ஆறுதல்களைப் பற்றியும் பார்ப்போம்.

உங்கள் எண்ண ஓட்டத்தை ஒரே பார்வையில் அறிந்து கொள்ளவும், உங்கள் மவுனத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ளவும் கூடிய ஒருவர் உங்களுடன் இருந்தால் அது எத்தனை பெரிய ஆசிர்வாதம்.

‘சர்வம் மாயா’வில் பிரபேந்துவுக்கு டெலுலு அப்படியான கம்பேனியன்தான்.

காமெடி ஹாரர் படங்களில் கூட பேயை கொடூரமாகத் தான் காட்டியிருப்பார்கள். ஆனால், டெலுலு அறிமுகக் காட்சியிலேயே பாந்தமான தோற்றத்தில், சகஜமாக ஃபோன் ஸ்க்ரோல் செய்து கொண்டுதான் நமக்கு அறிமுகமாகிறாள்.

அன்பு கொண்ட ஆன்மா டெலுலுவை ‘அவள்’ என்று உயர்திணையிலேயே அழைக்கலாம்.

இனி, டெலுலுவின் அன்பை ருசிப்போமாக. கேரளத்தின் பாரம்பரியமான நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த பிரபேந்து, ஒரு கட்டத்தில் கடவுள் மறுப்பாளராகிறான். பூனூல் துறந்து வீட்டைவிட்டு வெளியேறி இசைக் கலைஞனாகும் அவனுக்கு 2 மாத காலம் வீட்டுக்கு வந்தே ஆகவேண்டிய சூழல் உருவாகிறது.

சம்பாத்தியம் இல்லாத நேரத்தில் தங்குமிடம், உணவு என்று தரமான இளைப்பாறுதல் கிடைக்குமே என்பதால் மட்டுமே வீடு திரும்பும் அவன் கைச்செலவுக்காக மீண்டும் பூனூலை போட்டுக் கொண்டு புரோஹிதம் செய்யும் சூழலும் உருவாகிறது. கைச்செலவுக்கு காசும், கூடவே அவன் சற்றும் எதிர்பாராத இன்னொரு இலவச இணைப்பும் கிடைக்கிறது.

வழக்கமாக பேய்ப் படங்களில் இருளில் தெரியும் உருவத்தைப் பார்த்து மனிதர்கள் பயந்துபோவார்கள். இங்கே, திடீரென்று எழுந்து உட்காரும் பிரபேந்துவைப் பார்த்து டெலுலு பயந்து கத்துவாள். படம் நெடுகவே எதையாவதுப் பார்த்து டெலுலு ஷாக் மோடில் கீச்சிடுவதும், ஓரிடத்தில் ‘உன்னமாதிரி பயந்த பேயை’ நான் பார்த்ததில்லை...” என்று பிரபேந்து சொல்வதும் டெலுலுவின் இளகிய ஆன்மாவுக்கு சாட்சி.

உறவுகள் வலுப்பெற பெரிய வாக்குறுதிகள் எல்லாம் தேவையில்லை. ஒரு சின்ன அக்கறை போதும்.

பிரபேந்து ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் எதிர்பார்த்தபடி வாசிக்கத் திணறும்போது வரும் டெலுலு, ‘இந்த மெலடியை ஒட்டி கிட்டார் வாசி. அப்படியே அதில் ஒரு லேயர் ஆட் பண்ணு’ என்று சொல்லும்போது அவர்கள் உறவு வலுவாகும்.

அத்தனை நாள் பார்த்துப் பயந்த டெலுலுவுக்கு காது கொடுப்பான் பிரபேந்து. தான் யார்? பேய் ஆனது ஏன், எப்படி? என்று தெரியாமல் ஐடன்டிட்டி க்ரைசிஸில் சிக்கிய டெலுலுவுக்காக கல்லறைத் தோட்டங்களிலும், கல்லூரி வாசல்களிலும் நிற்கும்போது பிரபேந்து - டெலுலு உறவு ஆழமாகியிருக்கும், அழகாகியிருக்கும்.

வாழ்தல் என்பதே நம்மை நாமே கண்டடைவதில் தான் இருக்கிறது. ஆனால், புறச்சூழல்களும், வாழ்க்கை எனும் ரொட்டீனும் நம்மைச் சிக்க வைத்துவிடுகின்றன. அப்படிச் சிக்கிக் கொண்ட நம்மை, பெரும்பாலும் வேறொருவர் தான் நமக்கு அடையாளம் காட்டுகிறார். அந்தக் கண்டடைதல் தான் விடுதலை.

டெலுலு ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு பேய் என்று அழைக்க விரும்பாவதவள். அவளுக்குத் தேவை சில விடைகள். அந்த விடைகள் அவளைக் குழப்பத்திலிருந்து விடுவிக்கும் போது அவளுக்கு விடுதலை நேர்கிறது.

பிரபேந்துவின் கண்டடைதலுக்கும், டெலுலுவின் விடுதலைக்கும் இடையே படம் முழுவதும் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக நாத்திகனான பிரபேந்துவிடம், ‘இசை எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது’ என்றெல்லாம் கேள்வி கேட்டு அதை இறை நம்பிக்கையுடன் ஒப்பிட்டுப் பேசுவது ரசிக்க வைக்கும்படி அமைந்திருக்கும்.

அதேபோல், தந்தையுடன் பல காலமாக பேசாமல் இருக்கும் பிரபேந்துவிடம், “இதோ பாரு பிரபா, யார் மேலேயாவது கோபப்பட்டு அந்த கசப்பை பல காலம் சுமந்துட்டு இருப்பதெல்லாம் அர்த்தமற்றது. வாழ்க்கை ரொம்ப சுருக்கமானது” என்று சொல்வது தத்துவம்.

பிரபேந்து தன் தந்தையுடனான உறவை புதுப்பிக்க ஒரு கவுன்சலர் போல டெலுலு இருப்பாள்.

நமக்கு சில பிடிவாதங்கள் இருக்கலாம், நமக்கு சிலர் மீது கோபமோ, வெறுப்போ இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் அப்படியே சுமந்து கொண்டே இருப்பது எத்தனை அபத்தம். அப்படியிருந்தால் அதை இறக்கிவையுங்கள், டெலுலு உங்களுக்கும் உங்களை அடையாளம் காட்டுவாள்.

அக்கறையாக விசாரிக்காதவர்கள் எல்லோருமே சக மனிதர்கள் மீது அக்கறையற்றவர்கள் இல்லை. அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கும்.

பிரபேந்துவும் அப்படித்தான். மும்பையில் சந்திக்கும் சாத்யா என்ற பெண்ணின் அழுகையை அணுகத் தெரியாமல் இருக்கும் பிரபேந்துவை டெலுலு எமோஷனல் அட்டாச்மென்ட்டுக்கு பயிற்றுவிக்கும் விதம் சிரித்து ரசிக்க வைக்கும்.

வெளிப்படுத்தாமல் போகும் அன்பும், அக்கறையும் அதைத் தேக்கி வைத்திருப்பவருக்கு மட்டுமல்ல, அதற்காக ஏங்கி நிற்பவருக்கும் மன உளைச்சல்.

சாத்யா மீதான ஈர்ப்பை காதலெனும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பிரபேந்துவை ஊக்குவிக்கும்போது டெலுலு ஒரு நல்ல தோழியாக மிளிர்வாள்.

டெலுலு படம் முழுவதும் அன்பையும், சமாதானத்தையும் விதைத்துக் கொண்டே இருப்பாள். அவளின் வருகைதான் பிரபேந்துவுக்கு வாழ்க்கை மீது புதிய பார்வையை செலுத்த வைக்கும்.

பிரபேந்து - சாத்யா காதல் உறுதியானதும், டெலுலுவுக்கு சிறிய பதற்றம் வரும். அதை அதீதப் பற்று என்று பிரபேந்து புறந்தள்ளும் போது, “காதல் உடல் சார்ந்தது அல்ல. உணர்வுகள் சார்ந்தது. நமக்குள்ள அப்படியான உணர்வுப்பூர்வ தொடர்பு இருக்கிறது” என்று சொல்வாள் டெலுலு. அவளால் அதைக் காண முடிந்தது. பிரபேந்துவால் அதை சாத்யாவின் கட்டியணைத்ததில் ஏற்பட்ட இனம்புரியாத மகிழ்ச்சியால் மட்டுமே உணர முடிந்தது.

அதனால்தான், காதல் என்பது பேயைப் போன்றது எல்லோராலும் உணர முடியாது என்று அந்த பிரெஞ்சு அறிஞர் சொன்னாரோ என்னவோ?!

டெலுலு தன்னை கண்டடைந்து, தன்னைப் பற்றிய விவரங்களை சொல்லிவிட்டு மாயா என்ற பெயரைச் சொல்லிவிட்டு மாயமாவாள்.

அவள் இல்லாதபோது பிரபேந்துவுக்கு ஒரு பெரிய வெற்றிடம் உருவாகும். ஆரம்பக் காட்சிகளில் டெலுலுவைப் பற்றி மனநல மருத்துவரிடம் விவரிக்கும்போது உன் ஆழ்மனது காயங்களில் இருந்து வெளியே அவள் தானாகப் போய்விடுவாள் என்பார்.

படத்தின் இறுதியில், இறை நம்பிக்கை மிகுந்த பிரபேந்துவின் பெரியப்பா, “நீ சொல்றது எல்லாம் உண்மையான்னு தெரியல.. உண்மையா இருந்தா நல்லாயிருக்கும்” என்று சொலார். அவர் அறிவுரையின் படி தான், டெலுலு வீட்டுக்குச் செல்வான். அங்கே அவள் அம்மா, “நீங்கதான் அவ விரும்பிய பையனா” என்று கேட்கும்போது அமைதியாக இருந்து ஆமோதித்து டெலுலுவின் தாய்க்கு ஒரு சிறு ஆறுதலை கடத்திவிட்டு வருவான். வெளியே வரும் அவனை காற்றாக வருடுவால் டெலுலு.

எல்லோராலும் இந்து என்று அழைக்கப்பட்ட பிரபேந்துவை ஆரம்பித்திலிருந்தே பிரபா.. என்றே அழைக்கும் டெலுலு அவனுக்கு அவனுள் இருக்கும் சுயத்தைக் காட்டிச் சென்றிருப்பாள். டெலுலு கண்ட பிரபா தான் நிஜம். மற்ற வீம்பும், பிடிவாததும் வாழ்க்கை ரொட்டீன் கொடுத்தவை.

டெலுலு படம் நெடுக ஒரு கவுன்சலர், தெரப்பிஸ்ட், ஹீலராக இருப்பாள். வாழ்க்கை நிலையற்றது என்ற தத்துவத்தையும் சொல்லிச் சென்ற போதகர் அவள்.

டெலுலுவைப் போல் என் மனதில் இடம்பிடித்தவர்கள் தான், ‘கூடே’ ஜெனிஃபர், ‘நீலவெளிச்சம்’ பார்கவிக்குட்டி, ‘பிசாசு’ பவானி.

‘கூடே’-வில், ஜெனிஃபர் (நஸ்ரியா), தன் மறைவுக்குப் பின்னர் அண்ணன் ஜோசுவாவுக்கு (பிரித்விராஜ்) மட்டும் தெரிவாள். அவனுக்கும் ஒரு குழந்தைப் பருவ மனக் காயம் இருக்கும். பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறந்த தங்கைக்காக படிப்பு, ஃபுட்பால், பால்ய கால க்ரஷ் என்று எல்லாவற்றையும் துறந்து சம்பாதிக்கச் செல்வான் ஜோசுவா. அவன் இழந்த குழந்தைப் பருவம், குடும்பத்துடனான உணர்வுப்பூர்வமான பிணைப்பை துண்டித்திருக்கும்.

தன் மறைவுக்கு கண்ணீர் சிந்தாத அண்ணன் ஜோசுவாவுக்கு ஜென்னி ஒரு சகாயம் செய்வாள். அவனை ஓர் உள்ளார்ந்த பயணம் மேற்கொள்ள உதவியாக இருப்பாள். வெளிநாட்டில் உறவுகள் இன்றி, உணர்வுகளைத் தொலைத்து, மனம் இறுகி வாழ்ந்து கொண்டிருந்த ஜோசுவா, தன் குடும்பத்தின் வலிகளை தன்னுடையது போல் உணர்வதற்கும், குடும்பத்தினரை நேசிப்பதற்கும் தன்னைத் தானே அனுமதிக்கவும் வழிவகுத்துத் தருவாள்.

நம்மைச் சார்ந்தோருக்கு அன்பின் நிமித்தமாக நாம் செய்யும் உதவிகள் இயல்பானவை. நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு அது தியாகமோ, கருணையோ அல்ல. அதேபோல் நாம் வருந்தித் தவிக்க இழப்போ, தண்டனையோ அல்ல.

ஒருவருக்காக உடன் இருத்தலின் மகிமையை ஜோசுவாவுக்கு புரியவைத்த ‘கூடே’ ஜெனிஃபர் ஒரு மீட்பர்.

‘நீலவெளிச்சம்’ படத்தில் பார்கவிக்குட்டி (ரீமா கல்லிங்கல்), எழுத்தாளர் பஷீர் (டொவினோ தாமஸ்) இடையேயான பரஸ்பர புரிதல் பற்றிய படம்.

பார்கவி நிலையத்தில் பார்கவி என்ற ஆவி இருக்கிறது. அது ஆண்களைக் கொன்றுவிடும் என்பது ஊரின் கதை. ஆனால் முற்போக்கான, திறமைசாலியான பார்கவி தன்னை ஊரும் உலகமும் பழிவாங்கும் பேய் என்று தூற்றுவதில் விருப்பமில்லை. தான் காதலனை இழந்து, ஒரு நயவஞ்சகனால் கொல்லப்பட்டவள். என்ற உண்மையை வெளி உலகம் அறியச் செய்ய வேண்டும். அவள் ஏக்கத்துக்கு பஷீர் செவி கொடுக்கிறான். அவள் விவரிப்புகளை கதையாக வடிக்கிறான். அவளுக்கு நீலவெளிச்சமாக ஒளிர்கிறாள் பார்கவி.

படம் நெடுக பார்கவிக்குட்டி என்று பஷீர் (டொவினோ) அழைக்கும்போது நம் மனமும் குளிர்ந்துபோகும்.

இறந்த பின்னரும் தன் மீதான களங்கத்தைப் போக்க, தனக்காக வெளிச்சம் பரப்பியவள் பார்கவிக்குட்டி. அவள் ஒரு சுயமரியாதைச் சுடர்.

மிஷ்கினின் ‘பிசாசு’ பற்றிப் பேசாவிட்டால், இந்த அத்தியாயம் முழுமை பெறாது. தமிழ் சினிமாவில் ஒரு பிசாசை தேவதையாகப் படைத்த கர்த்தர் மிஷ்கின்.

மிஷ்கின் படைத்த ‘பிசாசு’ பவானியின் அன்பு அழுத்தமானது. திருமணம் செய்து கொள் என்று தந்தை செல்லமாகக் கடிந்து கொள்ளும் போதெல்லாம் எனக்குப் பிடித்தப் பையனைப் பார்த்ததும் சொல்வேன் என்று சொல்லி வந்த பவானி விபத்தில் சிக்குகிறாள்.

படுகாயங்களுடன் அவளை மீட்கும் சித்தார்த்தை பார்த்ததும் அவளுக்குப் பிடித்துவிடுகிறது. அவனைப் பற்றி அப்பாவிடம் சொல்ல அப்பா என்று கூப்பிட்டபடியே இறந்தும் போகிறாள்.

அதன்பின்னால், சித்தார்த் வீட்டில்தான் அவள் வாசம். ஆரம்பத்தில் அஞ்சி நடுங்கும் சித்தார்த்த பின்னாளில் அவளின் காதலை உணர்கிறான். அவன் தான் அவள் மரணத்துக்குக் காரணம் என்று தெரிந்து குற்ற உணர்ச்சியில் துடித்து, அவள் தந்தையிடம் மண்டியிட்டு தண்டனை கோரும் அவனுக்காக தன்னை அழித்து அவனை குற்றவுணர்ச்சியிலிருந்து விடுவிக்கும் பேரன்புக்காரி. ஒரு பேயாவாவது அவனுடன் அவன் வீட்டில் இருந்துவிட வேண்டும் என்ற தன் ஆசையையே தியாகம் செய்தவள்.

அன்பால், ஆறுதலால், தியாகத்தால், சுயமரியாதையால் வியக்கவைக்கும் டெலுலு, ஜெனிஃபர், பார்கவிக்குட்டி, பவானி எல்லாம் ஆறுதல் தரும் ஆன்மாக்கள். அவர்கள் பேய்களல்ல, நாம் வாழும் காலத்திலேயே நம்மைக் கண்டடைய, பிறருக்கு உதவியாக இருக்க, பேரன்பின் ஊற்றாகத் திகழப் பழகிக்கொள்ள நமக்கான வழிகாட்டிகள்.

|தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35
Chandlo - கதவற்ற கூண்டுகளும், சிறகை விரிக்காத மீராக்களும் | திரை தேவதைகள் 34
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35
Are You There God? It's Me, Margaret. - கடவுளை நோக்கிய மார்கரெட்டின் கேள்விகள் | திரை தேவதைகள் 33

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in