குடியரசுத் தலைவர் பதவியில் கலாம் - சில முக்கிய குறிப்புகள்

ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு நாள்
குடியரசுத் தலைவர் பதவியில் கலாம் - சில முக்கிய குறிப்புகள்
Updated on
1 min read

2002 - 2007 காலக்கட்டத்தில் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக கலாம் இருந்தபோது, அவரைப் பார்ப்பதற்கென டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை சென்ற சாமானியர்கள் ஏராளம்.

தனக்கு அனுப்பப்படுகிற வாழ்த்துகளுக்கான பதில்களை அவரே கையொப்பமிட்டு அனுப்புவார். ஏற்கெனவே இருந்த நடைமுறைகளிலிருந்து விலகி, ஒருமுறை ரமலான் விருந்துக்கான செலவுத்தொகையை ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்கச் சொல்லி இருக்கிறார்.

சகோதரரும் அவரது குடும்பத்தினரும் குடியரசுத் தலைவர் மாளிகை சென்று தங்கியபோது, அவர்களுக்கான செலவைத் தானே ஏற்றுக்கொண்டார். கலாமின் எளிமை, நேர்மை, தியாகத்தைப் போற்றுகிற வகையில் இது போன்ற சம்பவங்கள் அந்த ஐந்தாண்டுகளில் நிறையவே உண்டு.

2005இல் தகவலறியும் உரிமைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் போன்றவை கலாம் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது நடைமுறைக்கு வந்தன.

அதேநேரத்தில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற (தகுதிநீக்கத் தடுப்பு) திருத்த மசோதாவைத் திருப்பி அனுப்பி, இரண்டாவது முறையே ஒப்புதல் அளித்தார்.

சிறு வயதில் ஏழ்மையை எதிர்கொண்டாலும், தொடர் உழைப்பாலும் முயற்சியாலும் மிகப்பெரிய உயரத்தை அடையலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒருவர் கலாம்.

அதனை உணர்ந்தே, முதுமையில் தனது அனுபவங்களை இளைய தலைமுறை யினரோடு தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார். இளைஞனாக இருந்தபோது போர் விமானி ஆக வேண்டும் என்பது கலாமின் கனவுகளில் ஒன்று. அப்போது அது ஈடேறவில்லை.

குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, நாட்டின் முதல் குடிமகன் என்கிற வகையில் போர்விமானத்தை ஓட்டுகிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார் கலாம்.

2006, ஜூன் 8 அன்று புனேவிலுள்ள லோஹேகான் விமானப்படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தை இயக்கினார். அச்சாதனையைப் புரிந்த இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

குடியரசுத் தலைவர் பதவியில் கலாம் - சில முக்கிய குறிப்புகள்
கடைசி பெஞ்சு மாணவனுக்குக் குரல் கொடுத்த கலாம்!
குடியரசுத் தலைவர் பதவியில் கலாம் - சில முக்கிய குறிப்புகள்
‘ஆதர்ச நாயகர்’ அப்துல் கலாம்!
குடியரசுத் தலைவர் பதவியில் கலாம் - சில முக்கிய குறிப்புகள்
மாணவர் கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in