மாணவர் கலாம்

ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு நாள்
மாணவர் கலாம்
Updated on
1 min read

* அம்மா ஆஷியம்மாவும் அப்பா ஜைனுலாபுதீனும் பிறருக்கு உதவ வேண்டும், இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற நல்ல பண்புகளைச் சொல்லி, கலாமை வளர்த்தனர்.

* நான்காம் வகுப்பு படித்தபோது ஒருநாள் பக்கத்து வகுப்பில் நுழைந்த கலாமை, ஆசிரியர் பிரம்பால் அடித்துவிட்டார். அதனால் மிகவும் வருத்தப்பட்டார் கலாம். சில மாதங்களில் அதே ஆசிரியர் பள்ளி வழிபாட்டுக் கூடத்தில் கணிதத்தில் நூறு மதிப்பெண்களைப் பெற்ற கலாமை வாழ்த்தினார்! பிற்காலத்தில் எல்லாருக்கும் பெருமை சேர்க்கப் போகிறார் என்றும் கணித்தார்.

* கலாமும் ராமநாத சாஸ்திரியும் நண்பர்கள். ஒருநாள் ஆசிரியர் கலாமைக் கடைசி பெஞ்சுக்குப் போகச் சொன்னார். கண் கலங்கினார் கலாம். மறுநாள் இருவரின் அப்பாக்களும் ஆசிரியரிடம் வந்து, ‘நாங்கள் சாதி, மதம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்கிறோம். மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய நீங்களே இப்படிச் செய்யலாமா’ என்று கேட்டதும் ஆசிரியர் தன் தவறை உணர்ந்தார்.

* இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் ரயில்கள் நிற்காததால், செய்தித்தாள்களைத் தூக்கி வீசப்படுவது வழக்கம். இந்தச் செய்தித்தாள் களைச் சேகரித்துக் கொடுத்தால், சம்பளம் தருவதாகச் சொன்னார் சம்சுதீன்.

படித்துக் கொண்டிருந்தபோதே கலாம் செய்தித்தாள்களைச் சேகரித்துக் கொடுத்து, சம்பளம் வாங்கினார்.

* தொடக்கப் பள்ளிக் கல்வியை முடித்த கலாம், ராமநாதபுரத்தில் இருந்த ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கியிருந்தது அவருக்குக் கஷ்டமாக இருந்தது. அப்போது ஆசிரியர் அய்யாத்துரை சாலமன்தான் கலாமுக்கு ஆதரவாக இருந்தார்.

* பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரியில் சேர்வதற்கு முன்பு அண்ணன் கடையில் வேலை செய்தார் கலாம்.

* 1950இல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். 1954இல் இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.

* 1955இல் சென்னை எம்.ஐ.டி.யில் (Madras Institute of Technology) வானூர்திப் பொறியியல் (Aeronautical Engineering) படிப்பில் சேர்ந்தார்.

* கலாமும் அவர் நண்பர்களும் சேர்ந்து தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதைப் பார்வையிட வந்த பேராசிரியர் ஸ்ரீநிவாசன், “மூன்றே நாள்களில் முடிக்க வேண்டும், இல்லை என்றால் உதவித்தொகை நிறுத்தப்படும்” என்றார். கலாமும் நண்பர்களும் இரவு, பகல் பாராமல் உழைத்தனர். கிளைடர் என்கிற இன்ஜின் இல்லாத விமானத்தை வடிவமைத்தனர். பேராசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

* 1960இல் பொறியியல் படிப்பை முடித்தார் அப்துல் கலாம்.

மாணவர் கலாம்
ஆகஸ்ட் மாதத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஐபிஓ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in