‘ஆட்டோ வரும்... ஆனா, எக்ஸ்ட்ரா வேணும்!’ - ஒரு பிரச்சினையின் ‘பல’ பரிமாணங்கள்

‘ஆட்டோ வரும்... ஆனா, எக்ஸ்ட்ரா வேணும்!’ - ஒரு பிரச்சினையின் ‘பல’  பரிமாணங்கள்
Updated on
4 min read

‘அண்ணா ஆட்டோ வருமா?’ என்றால், இடம் கேட்டு ஆட்டோக்கள் சவாரிக்கு வரத்தான் செய்கின்றன. அதேபோல் ஓலா, உபெர், ரேபிடோ என்று செயலிகளில் புக் செய்யும் ஆட்டோக்களும் நிமிடங்களில் வாசலுக்கு வந்துதான் நிற்கின்றன.

ஆனால், ஸ்டாண்ட் ஆட்டோக்கார அண்ணன்கள், “நீங்க சொன்ன ஏரியா இதுதான் என்றாலும் இறங்க வேண்டிய இலக்கு ரொம்ப உள்ள இருக்கு, வந்த ரோடு சரியில்ல, எவ்வளவு ட்ராஃபிக் பார்த்தீங்களா!” என்று எக்ஸ்ட்ரா வாங்காமல் செல்வது அரிது.

அதேபோல் ஆப் மூலம் புக் ஆகும் ஓட்டுநர்களும் என்ன ஃபேர் வருகிறதோ அதைவிட ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகமாக வசூலாகும் என்பதை உறுதி செய்துதான் பயணத்துக்கே ஒப்புக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் கேன்சல் செய்கிறார்கள்.

அதைவிட இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. இது கொஞ்சம் புதுசு!

வழக்கமாக ஆப் மூலம் புக் செய்த வாகனங்களை பயன்படுத்துவோரை ஏரியா ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ அண்ணன்கள் புறக்கணிப்பு லிஸ்டில் வைத்திருப்பார்கள். என்றாவது புக் செய்யாமல் அவர்களை நாடினால், ‘சவாரி இருக்கு மா, இப்ப வரல மா’ என்றோ பதிலே சொல்லாமலோ பாய்காட் செய்வார்கள்.

சென்னையில் எனது பெரும்பாலான ஆட்டோ பயண அனுபவங்கள் இப்படித்தான் இருந்துள்ளன, இன்னமும் இருக்கின்றன.

புதுப்புது அனுபவங்கள் தானே வாழ்க்கை என்பதுபோல், மைசூரு சென்ற எனக்கு ஆட்டோ பயணங்கள் ‘அடடே’ சொல்லவைத்த அனுபவங்களைத் தந்தன.

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலேறி காலை 6.45 மணியளவில் மைசூரு சென்றிருப்பேன். வழக்கமாக ஜூன் மாதத்தில் மைசூரு தென் மேற்கு பருவமழையில் நனைந்திருக்கும் என்பார்கள். மப்பும் மந்தாரமும் வானிலையாக இருந்ததே தவிர மழைத்தூரல் கூட இல்லை.

பயணிகளை ஆட்டோக்காரர்கள் மொய்த்தாலும், நைஸாக நழுவி ஆப் உதவியை நாடி படுவரள்ளி விநாயகா நகருக்கு புக் செய்தேன். 2.8 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த இடத்துக்கு வெறும் ரூ.42 கட்டணம் காட்டியது. கூட கேட்டாலும் ரூ.100-க்குள் முடிந்துவிடும் என்று இறங்கியதும், ‘எவ்வளவு?’ என்று கேட்க ஆப்-ஐ காட்டி ரூ.42 என்றார். அதையே ஜிபே செய்தேன். கூடுதலாக பணம் கேட்காமல் ஆட்டோக்காரர் சென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையிலேயே ரூ.42 தானா என்று மீண்டும் மீண்டும் என்னையே கேட்டுக் கொண்டேன்!

அதேபோல், மைசூரு அரண்மனை முதல் படுவரள்ளி வரையிலான 5.2 கிமீ தூரத்துக்கும் ஆப்பில் புக் செய்யாத ஆட்டோ அண்ணா ரூ.100 தான் வாங்கினார். இத்தனைக்கும் கன்னடம் தெரியாமல் ஏதேதோ உளறி இடத்தை புரியவைத்து அமர்த்திய ஆட்டோ அது.

இப்படியாக மைசூருவில் நானிருந்த மூன்று நாட்களுமே ஆட்டோ கட்டணங்கள் என்னை குளிர்வித்தன, தென் மேற்கு பருவமழைகூட அப்படிக் குளிர்வித்திருக்க முடியாது என்றளவுக்கு!

மீண்டும் சென்னை வந்து இறங்கி 9 லக்கேஜுகளுடன் ஆட்டோவை ஆப்களில் புக் செய்தால் எல்லாம் கேன்சல் ஆகிறது. சரி, டாக்ஸி புக் செய்தால் ஸ்டாண்டில் இருப்பவர் சென்ட்ரலில் இருந்து திருவல்லிக்கேணிக்கு ரூ.600 கேட்டார். ஃபைனலா ரூ.500-க்கு போகலாம் என்று பெருந்தன்மையும் காட்டினார்.

ஒருவழியாக நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் ஆப் ஒன்றில் டாக்ஸி புக் செய்தால், அவர் ஸ்டேஷனுக்குள் வந்து நம் அருகே காரை நிப்பாட்டியவுடன், ‘கேன்சல் செய்திருக்கிறீர்கள், ஏன்?’ என்கிறார். நாங்கள் கேன்சல் செய்யாமலேயே ட்ரிப் கேன்சல் ஆகியிருந்தது. அதில் நாங்கள் செய்ததாகவும் இல்லை, ட்ரைவர் செய்ததாகவும் இல்லை. எவ்வளவு ஃபேர் காட்டியதோ அதிலிருந்து எக்ஸ்ட்ரா ரூ.50 தாங்க இறக்கிவிடுகிறேன் என்றார். தாமதமாக வந்த ரயில், லக்கேஜ் பாரம், சோர்வு என்று கலந்துகட்டி அழுத்த ஓகே சொல்லி வந்தோம்.

மைசூரு குளுகுளுன்னு இருக்கு, பரபரப்பு இல்லாமல் இருக்கு, ஆட்டோ ஃபேர் கம்மியா இருக்கு அங்கேயே வாழ்ந்தா எப்படியிருக்கும்னு கனா கண்டதுதான் மிச்சம்.

சென்னையைப் போலவே, பெங்களூருவில் ஆட்டோ கட்டணங்கள் பகல் கொள்ளைதான் என்கின்றனர் அங்கு வசிப்பவர்கள்.

பெட்ரோல் விலையில் மாநிலங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும் கூட ஒருசில நகரங்களில் மட்டும் ஆட்டோ கட்டணம் கொள்ளையடிப்பது போல் வசூலிக்கப்படுவது கண்டு கொள்ளப்படாத பிரச்சினையோ என்று தோன்றியது.

அதைப் பற்றிய தேடல்களைத் தொடங்கிய போது, “பெட்ரோல், டீசல் விலையுயர்வு உள்ளிட்ட விலைவாசி அதிகரிப்பு மட்டுமே தொடர்கதையாக இருக்கிறது, ஆனால் ஆட்டோக்களின் குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஆட்சிகள் மாறினாலும் கண்டு கொள்ளப்படாத துயரமாகவே இருக்கிறது. அதனாலேயே நாங்கள் கூடுதலாக வசூலிக்கிறோம்” என்பது ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பு வாதமாக இருந்தது.

“இன்றைய தேதியில் சென்னையில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.100 என்றளவில் இருக்கிறது. சில பகுதிகளில் ரூ.120 தான் குறைந்தபட்டச கட்டணமாக இருக்கிறது. ரயிலில் ஓர் ஊரில் இருந்து வருவதற்கான கட்டணமும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து வீடு செல்லும் ஆட்டோ கட்டணமும் சில நேரங்களில் ஒரே மாதிரியாகவும், பல நேரங்களில் அதைவிட இரண்டு மடங்கும் இருக்கும் நிலைதான் நிலவுகிறது. மக்களின் போக்குவரத்து செலவை அதிகப்படுத்தியதில் ஆட்டோ கட்டணங்களுக்கு பெரிய பங்கு உண்டு” என்று ஆட்டோ / டாக்ஸி கட்டணம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள்.

இதற்கடையில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் பாலசுப்ரமணியனிடம் பேசினேன். ஆட்டோ கட்டணங்கள் தொடர்பான அவரது வாதத்தை முன்வைத்தார்.

“ஆரம்பகாலத்தில் குதிரை வண்டி, கை ரிக்‌ஷா இழுத்தவர்கள் தான் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆனார்கள். அரசாங்கம் தான் ஆட்டோ தொழிலை ஊக்குவித்தது. அந்த வகையில் குதிரை வண்டி, கை ரிக்‌ஷாவை விட்டொழித்த விளிம்புநிலை குடும்பப் பின்னணி கொண்டவர்கள் மாற்று பிழைப்பாக ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தனர். இப்போது ஆட்டோக்கள் ஓட ஆரம்பித்து 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டது.

இப்போதெல்லாம் படித்த இளைஞர்கள் பார்ட் டைமாக ஆட்டோ ஓட்டுகின்றனர். சென்னையில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன.

ஸ்டாண்ட் ஆட்டோ, ரன்னிங் ஆட்டோக்கள் கடந்து ஆப் மூலம் ஆட்டோ புக் செய்து மக்கள் பயணிக்கின்றனர். அந்த ஆப்களை டவுன்லோடு செய்யும்போது அரசுக் கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ.25 அதன் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.12 என்ற விதிமுறையை நாம் ஏற்றுக் கொண்டுதான் அதை பதிவிறக்கம் செய்கிறோம்.

ஆனால், ஆப்-களில் ரூ.10, 20, 30, 40 என 4 ஸ்லாப் இருக்கும். அதை டிக் செய்தால் தான் ரைட் பிக் அப் ஆகும் பல நேரங்களில். மக்களும் ஆப்களில் ஆட்டோ புக் செய்து பயணிக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டனர். பெரிதாக பேரம், வாதமின்றி பயணிக்கின்றனர்.

ஸ்டாண்ட், ரன்னிங் ஆட்டோக்கள் மீதுதான் புகார்கள் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2013-ல் அரசாங்கம் 1.8 கிமீ தூரத்துக்கு ரூ.25 அடிப்படைக் கட்டணம் என்றும், அதற்கு அதிகமான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக ரூ.12 கட்டணம் வசூலிக்கலாம் என்று கட்டணங்களை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதெல்லாம் பெரிதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசு அதை கண்காணிக்கவும் இல்லை.

நாங்கள் இப்போது கேட்பது கிலோ மீட்டருக்கு ரூ.50, அதற்கு அதிகமான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.25. அதை இதற்கு முன்னர் இருந்த எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.

2022-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் மீட்டர் கட்டணத்தை உயர்த்த உத்தரவிட்டது. மீட்டர் ஆட்டோக்களுக்கு அரசு வழங்கிய மீட்டரில் ப்ரைவேட் ஆட்டோக்களில் உள்ளது போல் காலக் கட்டணம் நிர்ணய முறை இல்லை. ஆப் ஆட்டோக்களில் காலை, இரவு என கால கட்டணங்களை நிர்ணயிக்க முடியும். இப்படி பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

இதுவரை ஆட்டோ ஓட்டுநர்களின் பிரதிநிதிகள், அரசுப் பிரதிநிகள், பயணிகளின் பிரதிநிதிகள் கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைக்கப்படவில்லை.

எங்களுடைய கேள்வி, ஒரு பெருநிறுவனத்தை ஆப் மூலம் லாபம் அடையவிடுவதற்குப் பதிலாக ஏன் அரசாங்கமே இப்படியொரு ஆப் உருவாக்கி இயக்கக் கூடாது. கடந்த ஆட்சியில் அதற்கான திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. அதற்குத் தேவையான முதலீட்டுப் பணத்துக்குக் கூட யோசனை சொன்னோம். எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மைசூரு போன்ற சில நகரங்களில் கட்டணம் மிகவும் குறைவாக இருக்க, அங்கு பொதுப் போக்குவரத்து வாகனங்கள் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சென்னை போன்ற பெருநகரில் போக்குவரத்து வாகனங்களின் போட்டி அதிகம். ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வருமானம் பெட்ரோல், வண்டி பராமரிப்பு தாண்டி தான் லாபத்துக்கு ஒதுக்கப்படும். சராசரியாக ஒரு ஆட்டோ ஓட்டுநர் ரூ.700 சம்பாதிக்கிறார். ரூ.21 ஆயிரத்தில் சென்னையில் ஒரு குடும்பம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆட்டோ கட்டணங்களை அநியாயமாக வாங்குவோரும், பயணிகளிடம் தரக்குறைவாக பேசுவோரும் இருக்கின்றனர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. காலத்துக்கு ஏற்ற மாதிரி அவர்கள் மாறி வருகின்றனர். இங்கு மாறாதது விலைவாசி உயர்வு மட்டும்தான். ஒரு பயணியிடம் அதிகபட்சமாக ரூ.30 சிலர் அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆட்டோ கட்டணம் என்பது ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள், அரசு என மூன்று தரப்பையும் சார்ந்தது. அரசு எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க கட்டணம் நிர்ணயம் செய்யலாம். அரசுப் பேருந்துக்கே 13 ஆண்டுகளில் 3 முறை கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள். அப்படியிருக்க ஆட்டோ கட்டணத்தை அரசு அரசியல் காரணங்களுக்காக உயர்த்தாமல் இருக்கக் கூடாது.

இல்லை, நான் ஏற்கெனவே சொன்னதுபோல், ஆட்டோ செயலியை அரசே தொடங்க வேண்டும். மக்களும் ஆட்டோ ஓட்டுநர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. தனியாக அணுக முடியாது. ஏற்கெனவே பல ஆய்வறிக்கைகளும் கூட ஆட்டோக்களுக்கு அடிப்படைக் கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.

இந்த தேர்தலில் 3.5 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் தவெகவுக்கு தான் வாக்களித்தனர். இதை புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய அரசு கொடுத்த இமெயில், தொலைபேசி, க்யூ ஆர் கோடு ஸ்கேன் என எதுவுமே வேலை செய்யவில்லை. எங்கள் கோரிக்கைகளை விரைவில் புதிய அரசிடம் முன்வைக்கவிருக்கிறோம்” என்றார்.

‘ஆட்டோ வரும்... ஆனா, எக்ஸ்ட்ரா வேணும்!’ - ஒரு பிரச்சினையின் ‘பல’  பரிமாணங்கள்
Niharika - in the mist: இருளிச்சைகளின் சுடரி தீபா | திரை தேவதைகள் 24
‘ஆட்டோ வரும்... ஆனா, எக்ஸ்ட்ரா வேணும்!’ - ஒரு பிரச்சினையின் ‘பல’  பரிமாணங்கள்
The Sheep Detectives: மனிதநேயம் பேசும் ஆடுகள் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in