

ஒரு திரைப்படம் என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதை தாண்டி அதன் முடிவில் நாம் அதிலிருந்து என்ன எடுத்துச் செல்கிறோம் என்பது மிக முக்கியம். ஒரு படைப்பு நம்மை அழ வைக்கலாம், சிரிக்கவும், நெகிழவும் வைக்கலாம் அல்லது எரிச்சலடையவும் செய்யலாம். இப்படி ஒவ்வொரு சினிமாவும் ஒரு தனித்துவ அனுபவம். அந்த வகையில் ஒரு சாதாரண துப்பறியும் கதை, உள்ளம் வருடும் மனிதநேயத்தை இரண்டரை மணி நேரம் பேசினாலும் அதுதான் ‘தி ஷீப் டிடெக்டிவ்ஸ்’ (The Sheep Detectives).
அண்மையில் வெளியான ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ போலவே இதுவும், பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையின் மீது ஒரு புதிய நம்பிக்கையையும், இந்த உலகம் இன்னும் பாழடைந்து போகவில்லை என்ற மனிதநேயத்தின் மீதான பற்றையும் ஏற்படுத்த வல்லது.
லியோனி ஸ்வான் எழுதிய புகழ்பெற்ற ‘த்ரீ பேக்ஸ் ஃபுல்’ என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.
இங்கிலாந்தில் உள்ள ஓர் அழகான புல்வெளி பகுதியில் ஜார்ஜ் (ஹ்யூ ஜாக்மேன்) என்ற ஆடு மேய்ப்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவர் வளர்த்து வந்த செம்மறி ஆட்டு மந்தையில் இருக்கும் மிஸ் மேப்பிள் என்ற மிக புத்திசாலியான ஆடு, தனது சக ஆடுகளுடன் இணைந்து தங்களது அன்புக்குரிய எஜமானரின் கொலையாளியை கண்டுபிடிக்க துப்பறியத் தொடங்குகிறது.
மனிதர்களின் உலகம், அவர்களது விசித்திரமான பழக்கவழக்கங்கள், எதையும் அறியாத இந்த ஆடுகள், தங்களது ஒற்றுமை மூலம், உண்மை கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கின்றன என்பதுதான் படத்தின் கதை.
ஆடுகள் ஒன்று சேர்ந்து ஒரு கொலை வழக்கை துப்பறிகின்றன என்பதை கேட்கும்போதே ஏதோ சின்ன குழந்தைகளுக்கான படம் என்று விசித்திரமாக தோன்றலாம். ஆனால், அந்த விசித்திரமான கற்பனையை திரையில் கொண்டு வந்திருக்கும் விதம் அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு துப்பறியும் கதையை குழந்தைகளும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி ஒன்றாக ரசிக்கும் வகையில் அசாத்திய நகைச்சுவையோடும் நுணுக்கமான காட்சிகளோடும் உருவாக்கியிருப்பது சாதாரண விஷயமல்ல.
இதுபோன்ற கதைக்களங்கள் கையாள்வதற்குக் கடினமானவை. ஆனால், இப்படம் அதன் தீவிரத்தை குறைக்காமல், அதேசமயம் பார்வையாளர்களின் மனதில் உணர்வுகளை மிக ஆழமாக கடத்துகிறது. படம் முழுவதும் நம்மை சிரிக்க வைப்பதுடன், ஒருவித இலகிய உணர்வு இழையோடுகிறது.
படத்தின் மற்றொரு ஈர்ப்பு, இதில் உள்ள கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் நட்சத்திர நடிகர்கள்தான்.
குறிப்பாக, 'டெட் லாஸோ' தொடரின் மூலம் புகழ்பெற்ற பிரெட் கோல்ட்ஸ்டைன் இதில் ஒரு ஆட்டுக்கு குரல் கொடுத்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. அவருடன் இணைந்து எம்மா தாம்சன், ‘பிரேக்கிங் பேட்’ தொடரில் வால்டராக ஈர்த்த பிரையன் கிரான்ஸ்டன், பெல்லா ராம்சே மற்றும் ரெஜினா ஹால் என பெரிய ஹாலிவுட் நட்சத்திரப் பட்டாளமே தங்களின் குரல் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுத்துள்ளனர். இவர்களின் சிறப்பான பங்களிப்பு படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் சலிப்பில்லாமல் ரசிக்க வைக்கிறது.
வழக்கமான ஹாலிவுட் கமர்ஷியல் படம்தான் என்றாலும் இதன் திரைக்கதை மிகவும் கூர்மையாக, புத்திசாலித்தனத்துடன் எழுதப்பட்டுள்ளது. நம்மை விட்டு பிரிந்தவர்களின் நினைவுகளை நாம் எப்படித் தாங்கிச் செல்ல வேண்டும், நம்முடைய துக்கங்களை நமக்குள் பூட்டி வைக்காமல் மற்றவர்களுடன் எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை பல காட்சிகளில் போகிற போக்கில் படம் அழகாக விளக்குகிறது.
மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, நல்லது, கெட்டது எல்லாமே கலந்ததுதான் இந்த வாழ்க்கையை அழகாக்குகிறது என்ற உன்னதமான செய்தியை வலிந்து திணிக்காமல் மிக அழகான முறையில் பேசியிருக்கிறார் இயக்குநர் கைல் பால்டா.
ஒரு சில காட்சிகளே வந்தாலும் ஹியூ ஜாக்மேன் படம் முழுக்க வியாபித்திருக்கிறார். ஆடுகளுக்கு க்ரைம் நாவல்களை படித்து காட்டுவது, ஒவ்வொரு ஆட்டுக்கும் பெயர் சூட்டி உரையாடுவது என ஒரு தேர்ந்த நடிகராக தனது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் சில படங்களில்தான் ஒருங்கே சிறப்பாக அமையும். அந்த மேஜிக் இந்த படத்தில் நடந்துள்ளது.
ஒரு சிம்பிளான துப்பறியும் கதையில் மனிதநேயத்தையும் அன்பையும் செம்மறி ஆடுகளின் வழியே பேசியிருக்கும் இந்த ‘தி ஷீப் டிடெக்டிவ்ஸ்’ குடும்பத்தோடு பார்க்க வேண்டிய அழகான திரைப்படம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.