Published : 30 Mar 2023 04:16 PM
Last Updated : 30 Mar 2023 04:16 PM

‘சிகை அலங்காரம் சரியில்லை’ - சிறுவனை ஒதுக்கிய ஜப்பான் பள்ளி; சிதைந்துபோன கனவு!

கார்ன்ரோ 9cornrows) ப்ரெய்டிங் எனப்படும் சிகை அலங்காரம் | பிரதிநிதித்துவ படம்

பள்ளிக்கு வரும்போது சீருடை அவசியம் என்பது உலகம் முழுவதுமே கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆனால், மாணவரின் சிகை அலங்காரம் எப்படியிருக்க வேண்டும் என்பது வரை ஒரு பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாடு நீளும் என்றால் அது விவாதப் பொருளாவது இயல்பு. இப்படியொரு கட்டுப்பட்டால் ஜப்பான் பள்ளிகள் விவாதப் பொருளாகியுள்ளன. நம்மூரிலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் என்று முத்திரை குத்தி கட்டாயமாக முடி திருத்தம் செய்யப்பட்ட சம்பவங்கள் உண்டு. அது விவாதப் பொருளாகி கருத்துகள் காரசாரமாக பகிரப்பட்டதும் நினைவில் இருக்கலாம். இப்போது ஜப்பான் சம்பவத்திற்கு வருவோம்.

ஜப்பானின் ஹிமேஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் பட்டம் பெறவிருந்தார். ஆப்பிரிக்க அமெரிக்க தந்தைக்கு, ஜப்பானிய தாய்க்கும் பிறந்த அவர் அன்றைய நாளை வெகு ஆவலாக எதிர்நோக்கியிருந்துள்ளார். இயல்பாகவே தந்தைவழி தாக்கத்தால் அவரது தலைமுடி சுருள் முடியாக இருக்கிறது. அதனால் அவர் பட்டமளிப்பு விழாவிற்கு தன்னைத் தயார்படுத்தும்போது தலைமுடியை வாரி அதனை சிறு சடைகளாகக் கட்டியுள்ளார். (இதனை கார்ன்ரோ ப்ரெய்டிங் எனக் கூறுகின்றனர்) பின்னர் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

ஆயிரம் ஆசைகளுடன் சென்ற அந்த 18 வயது சிறுவனுக்கு அங்கே அதிர்ச்சிகள் மட்டுமே காத்திருந்தன. அவர் விழா அரங்குக்குள் நுழைந்ததுமே அவரை அரங்கின் கடைசி இருக்கையில் அமரச் சொல்லியுள்ளனர். மேலும் அவர் பெயரைக் கூறி பட்டம் பெற அழைக்கும்போது எழுந்திருக்க வேண்டாம் என்றும் பள்ளி நிர்வாகத்தினர் கண்டிப்பு காட்டியுள்ளனர்.

இதனால், அந்தச் சிறுவன் அங்கிருந்து விழா நடந்து கொண்டிருந்தபோதே கிளம்பியுள்ளார். பட்டமளிப்பு விழா முடிந்தபின்னர் மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுவன் தனது பட்டயப்படிப்புச் சான்றிதழைக் கோரியுள்ளார். அவரை ஒரு காலி அறையில் காத்திருக்கச் சொல்லியுள்ளனர். பின்னர் அங்குவந்த ஆசிரியர் ஒருவர் அந்தச் சிறுவனை கழிவறைக்கு அழைத்துச் சென்று நீ உன் நண்பர்களுக்காக இங்கே காத்திருக்க வேண்டாம். பள்ளி வளாகத்திலிருந்து முதலில் வெளியேறிவிடு என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் இந்தச் சம்பவம் பற்றி செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த பெயரை வெளியிடவிரும்பாத அந்தச் சிறுவன், ''நான் அங்கு 3 ஆண்டுகள் படித்துள்ளேன். ஆனால் இப்போது என்னால் அந்த மூன்றாண்டுகளின் பசுமையான நினைவுகள் என்று எதையுமே நினைவுகூர முடியவில்லை. மாறாக நான் மிகவும் விரக்தியில் உள்ளேன். என்னிடம் மட்டும் அவர்கள், இது உன்னுடைய நாளில்லை என்று சொன்னது போல் தோன்றுகிறது. நான் அன்றையதினம் செய்து கொண்ட சிகை அலங்காரம் என் தந்தை சார்ந்த கறுப்பினத்தின் கலாச்சாரத்தினுடைய வேர்'' என்றார்.

ஆனால், மாணவரின் இந்தக் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளியின் துணை முதல்வர் அளித்த பேட்டியில், ''குறிப்பிட்ட அந்த மாணவர் பள்ளிய்யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிகை அலங்காரம் செய்யாத ஒரே காரணத்துக்காக மட்டுமே அன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டாரே தவிர இதில் இனவாதம் ஏதுமில்லை'' என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பள்ளியின் சட்டத்திட்டங்களில் சிகை அலங்காரம் காலத்திற்கேற்ப ‘ட்ரெண்டியாக’ இருக்கக் கூடாது. மேலும் மாணவர்கள் தங்களின் முடிக்கு வண்ணம் பூசக்கூடாது. ஒருவேளை இயல்பாகவே அவர்களின் தலைமுடி கருப்பு நிறத்தைத் தாண்டி வேறு நிறத்தில் இருந்தால் பிரச்சினையில்லை என்ற விதியும் அப்பள்ளியில் உள்ளது.

சமீபத்தில் ஒசாகா மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான உயர்மட்டத்தினருக்கான பள்ளியில் மாணவர்கள் சிகை அலங்காரத்தை கண்காணிக்த்து விதிகளை மீறினால் பள்ளி விதிகளுக்கு ஏற்ப அவர்களே திருத்தம் செய்வதாக புகார் எழுந்தது. இதற்கு ஒசாகா வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. அங்குள்ள 1780 மாணவர்களும் தலைமுடியை ஒட்ட வெட்டியிருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதனால் மீறும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடி திருத்தம் செய்யப்படும். இது மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த சிகை அலங்கார சர்ச்சை பற்றி யோமியுரி பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில், ஜப்பானிய பள்ளிகளில் ஒரு புத்த கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு சில விதிமுறைகள் பல நூறாண்டுகளாக பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டுன் என்பதை நிர்ணயிக்கவும் என்ற அந்தக் கோட்பாட்டை இப்போதும் பின்பற்றுகின்றனர். அதனாலேயே நிறைய பள்ளிகளில் சிகை அலங்கார பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் என்ன காரணம் சொன்னாலும் ஏற்கத்தக்கதல்ல. இது ஒரு தனிநபர் சுதந்திரத்தை அத்துமீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜப்பானிய மாணவி ஒருவர் அவர் பள்ளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். தனது இயற்கையான பழுப்பு நிற முடிக்கு கறுப்பு மை அடித்துவருமாறு பள்ளி நிர்வாகம் கட்டுப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவே அதன் பின்னர் பல ஜப்பானிய பள்ளிகளும் தங்களின் சிகை அலங்காரக் கட்டுப்பாட்டு விதிகளில் சில தளர்வுகளை அறிமுகம் செய்தன.

இதேபோல் பெண் குழந்தைகள் வெள்ளை நிற உள்ளாடைகள் அணியக் கூடாது என்ற கட்டுப்பாடும் ஜப்பானிய பள்ளிகளில் இருந்தது. கொடுமையின் உச்சபட்சமாக ஆசிரியைகள் மாணவிகளின் ப்ரா ஸ்ட்ராப்களை வெளியே இழுத்துப் பார்த்தல் இல்லை அவர்கள் விளையாட்டு வகுப்பு தயாராகும் முன் உடை மாற்றும் இடத்திற்கே சென்று சோதனை செய்தல் போன்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் நீதிமன்ற தலையீட்டால் வழக்கொழிந்து போயின. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜப்பான் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளி நிர்வாகங்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப தங்களின் விதிமுறைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், சிறுவனின் சிகை அலங்கார சர்ச்சை ஜப்பான் ஊடகங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த ஆண்டு தலைநகர் டோக்கியாவில் ஒரு பிரம்மாண்ட போராட்டம் வெடித்தது. இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், இனி மாணவர்கள் தலைமுடிக்கு கறுப்பு மை அடிக்க வற்புறுத்த மாட்டோம் என உறுதியளித்தன. இருப்பினும் சில பள்ளிகள் மாணவர்களின் தலைமுடி இயற்கையாகவே பழுப்பு நிறம் கொண்டதா என்பதற்கான சான்றை கேட்டுப் பெறுவோம் என்று கெடுபிடி காட்டின.

மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் வரும் கல்வி ஆண்டு முதல் தங்கள் பள்ளி விதிமுறைகள் எல்லாமே பாலின பாகுபாடற்றதாக இருக்கும் என்று கூறியுள்ளது. மாணவர்கள் விரும்பினால் குதிரை வால் போட்டுக் கொள்ளலாம். மாணவிகள் விரும்பினால் தங்கள் முடியை ஒட்ட வெட்டிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. சிகை அலங்காரத்தால் பட்டமளிப்பு விழா கனவை தொலைத்த சிறுவனுக்கு நேர்ந்த அவலம் மனதை வாட்டினாலும் இது போன்ற சில அறிவிப்புகள் மாற்றம் தூரமில்லை என்ற ஆறுதலைத் தருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x