Last Updated : 22 Mar, 2023 07:03 PM

 

Published : 22 Mar 2023 07:03 PM
Last Updated : 22 Mar 2023 07:03 PM

‘மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு’

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் எல்லையான சானாவயலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் எல்லையான சானாவயலில் மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா.இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமையிலான குழுவினர் அண்மையில் ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து ஆ. மணிகண்டன் கூறியதாவது: ''சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம், கொடுவூர் ஊராட்சி சானாவயல் பெருமாள் மேட்டில், நான்கரை அடி உயரத்துடனும், ஒன்றே முக்கால் அடி அகலத்துடனும், 3 புறங்களில் 114 வரிகளுடன் உடைந்த நிலையில் கல்வெட்டு உள்ளது.

இவற்றில் 103 வரிகள் தெளிவாக உள்ளன. அதில், சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மாறவர்மன் திருபுவன சக்கரவர்த்தியான முதலாம் சுந்தரபாண்டியனின் 6-வது ஆட்சியாண்டில் (பொ. ஆ.1222) தாழையூர் நாட்டு, சிற்றானூர், திருத் திருத்தெங்கூர் உடையார் திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோயிலுக்காக, உடையார் மாளவ சக்கரவத்தியிடம்இருந்து கலிதாங்கி மங்கலத்துப் பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தான் செம்பியன் பல்லவரயர் என்பவர் பெயரில் காணி நிலத்தை பிடிபாடு (பதிவு) செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.

கல்வெட்டை ஆய்வு செய்யும் மணிகண்டன் தலைமையிலானோர்.

மேலும், இந்நிலத்தில் அறுவடை செய்யும் பொருட்களில் நெல்லாக இருந்தால் பாதியையும், தினை, வரகு போன்ற பொருட்களாக இருந்தால் கால் பகுதியையும் கோயிலுக்கு கடமையாக கொடுக்க வேண்டும் என்ற தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, கோப்பலை பட்டன் திருநாஹீஸ்வரமுடையான், மும்முடி சோழன் ஐய்ய நம்பி, திருவேகம்பந் கூத்தாடி கொற்றபட்ட நனாந திருஞாநசம்பந்தப்பட்டந், ஆழித்தேர் வித்தகந், பொந்மா மாளிகைய பிள்ளை, சிகாரியம் சுந்தரப்பெருமாள், கோயிற்கணக்க நாகதேவந், ஸ்ரீமாளவச்சக்கரவத்திகள், கோயிற் தளத்தார்(தேவரடியார்) முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

மிழலை கூற்றத்தில் (சங்ககால நாட்டுப் பிரிவின் பெயர்), தாழையூர் நாடு தற்போது தாழனூர் என்றும், சிற்றானுர் சிறுகனூர் என்றும், கலிதாங்கி மங்கலம், கதிராமங்கலம் என்றும், பொன்பற்றி பொன்பேத்தி என்றும், மாறியுள்ளதையும் செம்பொன்மாரி, திருத்தெங்கூர் ஆகிய ஊர்கள் அதே பெயருடன் தற்போது அழைக்கப்படுவதையும் அறிய முடிகிறது. இதில் பாதி ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன. பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் தனது 3-வது ஆட்சியாண்டில் (பொ. ஆ. 1219) செம்பொன்மாரியில் சோழரைவென்றதாக இலங்கையின் வரலாற்று தகவலுக்கு இக்கல்வெட்டு வலு சேர்க்கிறது.

முன்னதாக, தனது தந்தையின் ஆட்சியின்போது 3-வது குலோத்துங்க சோழன் மதுரையை அழித்து கழுதையை பூட்டி நிலத்தை உழுததாக நேரில் கண்ட சுந்தர பாண்டியன் பின்னாளில் மதுரையை மீட்டதோடு மட்டுமின்றி சோழநாட்டையும் கைப்பற்றினார்.

பொன்பேத்தியில் வீர ராசேந்திர சோழர் ஆட்சிக்காலத்தில் புத்த மித்திரன் எழுதிய வீர சோழியம் எனும் ஐந்திலக்கண நூலுக்கு உரை எழுதியவர் பெருந்தேவனார். இவர், புத்தமித்திரரின் முன்னோர்களில் ஒருவரான, பொன்பேத்தியைச் சேர்ந்த சேந்தன் என்பவர், தொண்டைமானின் படைத் தலைவனாக இருந்து, இலங்கையில் இருந்த குறு நில மன்னர்களான சிங்களத்து அரையன், வில்லவன் ஆகியோரை வென்ற செய்தியை குறிப்பிடுகிறார்.

“பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தானான” என்ற கல்வெட்டு வரியின் மூலம் செம்பியன் பல்லவரயர் என்பவர், சேந்தன் வழி வந்தவர் என இக்கல்வெட்டுகூறுகிறது. மிக முக்கிய வரலாற்று தகவல்களை கொண்டுள்ள இக்கல்வெட்டானது பல்வேறு வரலாற்று ஆய்வுகளுக்கு சான்றாக இருக்கும் என்றார். ஆய்வின்போது மா. இளங்கோவன், ச.சாகுல் ஹமீது, அ. தளபதி அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x