Published : 19 Feb 2023 04:10 AM
Last Updated : 19 Feb 2023 04:10 AM

பட்டு கூட்டுறவு சங்கங்கள், 'இந்து தமிழ் திசை' இணைந்து நடத்திய மார்கழி மாத வண்ண கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், திருவனம் பட்டு கூட்டுறவு சங்கம், ‘இந்து தமிழ் திசை' இணைந்து நடத்திய மார்கழி மாத வண்ணக் கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கினார் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் ஆர்.கணேசன்.படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: அறிஞர் அண்ணா மற்றும் திருவனம்பட்டு கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்திய மார்கழி மாத வண்ணக் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஆகியவற்றுடன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, மார்கழிமாத வண்ணக் கோலப் போட்டியைகடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நடத்தியது.

இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று, வண்ணக் கோலமிட்டு, அந்தப் படங்களை அனுப்பி வைத்திருந்தனர். சென்னை, மதுரை, திருச்சி, சேலம்-வேலூர், கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி என 7 மண்டலங்களாகப் பிரித்து, தலா 12 சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டன.

சென்னை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 12 பேருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியில் வென்ற12 மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பரிசுக் கூப்பன்களை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் ஆர்.கணேசன் வழங்கினார். இதர மண்டலங்களில் வெற்றிபெற்றோருக்கான பரிசுக் கூப்பன்கள் அவரவர் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இது குறித்து ஆர்.கணேசன் கூறும்போது, “அறிஞர் அண்ணா மற்றும் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கங்களின் விற்பனையகங்களில் நவீன டிசைன்களில் ஏராளமான பட்டுச் சேலைகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றை தள்ளுபடி விலையில் அனைவரும் வாங்கி மகிழலாம்” என்றார்.

போட்டியில் பங்கேற்றது குறித்து ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த ஜா.கவுரி கூறும்போது, “வாழ்வியல் முறை மாற்றத்தால் கோலமிடுவதையே பலர் விட்டுவிட்டனர். கோலமிடும் பழக்கத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது” என்றார்.

முகப்பேர் கிழக்கை சேர்ந்த பிரமிளா தமிழ்ச்செல்வன் கூறும்போது, “நகர வாழ்வில் ஒன்றிவிட்டதால் கோலமிடுவதையே மறந்துவிட்டோம். ‘இந்து தமிழ் திசை' வழங்கிய வாய்ப்பால் அதிகாலையில் எழுவது, கோலமிடுவது ஆகியவை மீண்டும் பழக்கத்துக்கு வந்துவிட்டது. இது நல்ல உடற்பயிற்சியாகவும் உள்ளது” என்றார். இந்த நிகழ்ச்சியில், திருபுவனம் கூட்டுறவு சங்க விற்பனைப் பிரதிநிதி எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x