Published : 18 Feb 2023 02:42 PM
Last Updated : 18 Feb 2023 02:42 PM

Deaf Talks | குரலற்றவர்களின் இணையக் குரலும், நம்மில் பலரும் அறியாத பக்கங்களும்!

"இதே மாதிரி இன்னும் நிறைய வீடியோக்களை நீங்கள் பார்க்கணுமா, இந்தச் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க, மறக்காமல் அந்த பெல் ஐகானை க்ளிக் பண்ணுங்க" - இந்த வார்த்தைகளை ஒரு நாளில் குறைந்தது ஒரு முறையாவது கேட்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள் அனைவரது வாழ்விலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

தக்காளி சட்னி அரைப்பது தொடங்கி தங்க நகை வாங்குவது வரை அனைத்துக்குமான ஆகச்சிறந்த வழிகாட்டிகளாக சமூக ஊடகங்கள் இன்று மாறியிருக்கின்றன. குறிப்பாக யூடியூபில் வீடியோ பதிவிட்டால் நன்றாக சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தில், தொடங்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இதிலும் பெரும்பாலானவை சராசரி மனிதர்களின் தேவைகளையே பூர்த்தி செய்து வருபவையாகவே இருக்கின்றன. பெரும்பான்மை மனோபாவத்துக்கு பழகிவிட்ட இந்த உலகம் எண்ணிக்கையில் குறைவாக உள்ளவர்கள் குறித்து ஒருபோதும் கவலை கொள்வதே இல்லை.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தாழ்தள பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிக்கையையும், இதை அமல்படுத்துவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்தும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான போராட்டமே இப்படி என்றால், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் குறித்து எல்லாம் யார் யோசிக்கப் போகின்றனர்.

யார் மொழி பெரியது, எந்தக் கட்சி சிறந்தது, முதலிடத்துக்கான நடிகர் யார் என்றெல்லாம் பெரும்பான்மை சமூகம் (குறைபாடுகள் ஏதுமற்றவர்கள்) சண்டையிட்டுக் கொள்ளவும், பொழுதைக் கழிக்கவும் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்ற சூழலில், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் இவை பற்றியெல்லாம் எப்படி தெரிந்துகொள்கின்றனர். ஆனால், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதே தெரியாமல் நம்மோடு வாழ்ந்துவருபவர்கள் குறித்து வேகமாக நகரும் வாழ்க்கையில் நேரம் இருப்பதில்லை.

இந்த நிலையில், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்காக தொடங்கப்பட்டிருப்பதுதான் 'டெஃப் டாக்ஸ்' (Deaf Talks) https://youtube.com/@deaftalks யூடியூப் சேனல். சராசரி மனிதர்களுக்கான இந்த உலகின் நடப்பு நிகழ்வுகளை செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்கள் அறிந்துகொள்வதற்கான பெரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்டோரை கொண்ட இந்தக் குழு, உலகின் மிக முக்கிய நிகழ்வுகள், அத்தியாவசிய செய்திகள், அறிவிப்புகள், முக்கிய தினங்கள் குறித்து வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகின்றனர். இந்தக் குழுவில் செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு உதவுவதற்காக குறைபாடுகளற்ற சாதாரண மனிதர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒரு தொழில்முறை சைகை மொழி விளக்குநரும் உள்ளார்.

இணையமும், சமூக ஊடகமும்தான் இன்றைய உலகையே ஆள்கிறது. ஆனால், சிக்கல் என்னவென்றால், இந்த இணைய உலகை அணுகுவதற்கு குறைந்தபட்ச அடிப்படை கல்வியறிவு அவசியமாகிறது. சராசரி மக்களைப் பொறுத்தவரை இந்த அடிப்படைக் கல்வியை தமிழ், ஆங்கிலம் அல்லது வேறு மாநில மொழிகள், ஆங்கிலம் மற்றும் மாநில மொழி, ஆங்கிலம், இந்தியென இருமொழி அல்லது மும்மொழிக் கல்விக் கொள்கையின்படி படித்திருப்பர். ஆனால், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு அடிப்படையே 'சைகை மொழி'தான் எனும்போது இந்த உலகம் மேலும் அந்நியமாகிறது.

இதுகுறித்து டெஃப் டாக்ஸ் சேனலின் கன்டென்ட் எக்ஸிக்யூட்டிவ் சைமன் பிரபாகரன் கூறியது: “தேசிய காதுகேளாதோர் சங்கத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 1.8 கோடி பேர் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் 45.6 கோடி பேர் உள்ளதாக இணையத்தில் புள்ளி விவரக் குறிப்புகள் கூறுகின்றன. செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களின் உலகம் வேறு மாதிரியானது. 1-12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி காலத்திலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். காரணம், இவர்களது உலகம் சைகைகளால் புரிந்துகொள்ளக்கூடியது. உதாரணமாக, வாட் இஸ் யுவர் நேம்? என்பதை இவர் யுவர் நேம் வாட்? என்ற முறையைதான் இவர்கள் பின்பற்றுகின்றனர். சைகை மொழியுடன் கூடிய இளங்கலை பட்டப்படிப்புகள் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கற்பிக்கப்படுகிறது. சாதாரணமானவர்கள் மூன்று ஆண்டுகளில் படிக்கும் இந்த இளங்கலைப் படிப்புகளை இவர்கள் 5 வருடங்கள் கற்க வேண்டும். காரணம் முதல் இரண்டு ஆண்டுகள் சைகைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஆனால், பள்ளிக் கல்விதான் அடிப்படை. தற்போது ஆங்காங்கே சைகை மொழி படிப்புகளைக் கற்பிக்கும் பள்ளிகள் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. பொதுவாக வாய்மொழி கற்பித்தலை இவர்களால் புரிந்துகொள்ள இயலாது என்பதே உண்மை. இதைவிட பெரிய சவாலாக இருப்பது 100, 1098, 108 உள்ளிட்ட அவசரகால உதவி எண்களைக்கூட ஏதாவது ஒரு ஆபத்துகாலத்தில் இவர்களால் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதுதான். ஆனால், இங்கிலாந்தில் செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்கள் இதுபோன்ற அவசர கால எண்களை தொடர்பு கொண்டால், அது வீடியோ காலாக போகும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்காக சைகை மொழி விளக்குநரும் அங்கு பணியில் இருப்பார்கள். குறைந்தபட்சம் வீடியோ கால் வசதி மட்டுமாவது இங்குள்ளவர்களுக்கு அரசு செய்து தர முன்வர வேண்டும்" என்று அவர் கூறினார்.

சைகை மொழி விளக்குநர் ஸ்டெஃபி செபாஸ்டின் கூறும்போது, “செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களுடன் உரையாட சைகை மொழிதான் சிறந்த முறை. இதன்மூலம் அவர்கள் நாம் சொல்ல வருவதை எளிதாக புரிந்துகொள்வர். அவர்களது தேவையையும் நமக்கு புரிய வைத்துவிடுவர். இந்த துறை நான் விரும்பி எடுத்துக் கொண்டதுதான். இந்த துறையில் பயிற்றுநர்களாக இருப்பவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில்முறை சைகை மொழி விளக்குநராக இருப்பதற்கு 2 ஆண்டுகள் படிக்க வேண்டும். சைகை மொழியைப் பொருத்தவரை, வட்டார வழக்குப் போல மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் தன்மை கொண்டது.

சைகை மொழி பயிற்றுநர் ஸ்டெஃபி செபாஸ்டின்

உதாரணத்துக்கு, தமிழகத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு தண்ணீர் என்பதை குறிப்பிட தண்ணீர் பாட்டில் போன்ற சைகை காட்டப்படும். ஆனால், வட இந்தியாவில் தண்ணீரை குறிக்க தண்ணீர் குழாய் காட்டப்படும். இப்படி நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இருப்பினும், 2016 முதல் மத்திய சைகை மொழி ஆராய்ச்சி நிறுவனம் சைகை மொழிக்கான அகராதி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தொடர் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

மேலும், டெஃப் டாக்ஸ் நிறுவனர்கள் கூறியது: "பொதுவாக சமூகத்தில், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்களை விளிப்பதற்காக, Deaf and Dumb என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இது தவறானது. குறிப்பாக Dumb என்ற சொல்ல அவர்களை அவமானப்படுத்தக்கூடிய சொல்லாடல். இதை மாற்ற வேண்டும் என்று எண்ணிணோம். எனவேதான் எங்களுடைய முதல் நோக்கமே Deaf can also Talks என்பதை உணர்த்துவதுதான். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த Deaf Talks யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டது.

இந்த சேனல் தொடங்கப்பட்டு 8 மாதங்களுக்குள் இதுவரை 15 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். சர்வதேச செவித்திறன் குறைபாடு உடையோர் வாரத்தின்போது, சர்வதேச செவித்திறன் குறைபாடு உடையோருக்கான இணையத்தில், எங்களது வீடியோவும் இடம்பெற்றது. குறிப்பாக, 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 பேர் சைகை மொழி வடிவில் தேசிய கீதத்தை விளக்குவதுபோல் வீடியோ பதிவிடப்பட்டது. மேலும், உலகில் நடக்கும் முக்கியச் செய்திகளை செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வீடியோ உருவாக்கி பதிவிடப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

செய்தி ஒருங்கிணைப்பாளரான குஜராத்தைச் சேர்ந்த ராஜ் பாண்டியா கூறியது: "இன்றைய சூழலில் எல்லாமே இணையதளம்தான். குறிப்பாக கூகுள் தேடல்தான். ஆனால், அவற்றை பயன்படுத்த குறைந்தபட்ச ஆங்கிலம் தேவைப்படுகிறது. கூகுள் உலகின் பல்வேறு மொழிகளை பேசுபவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இவை போன்றதொரு தேடல் கருவிகளில் சைகை மொழி பயன்பாட்டாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல், வங்கி உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்களில் நிச்சயமாக சைகை மொழி பேசுபவர்களை பணியமர்த்துவது நல்லது. KYC இணைப்பு போன்ற சமயங்களில் செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். மேலும், ரயில் நிலையங்கள் தொலைதூர பயணங்களுக்கு செல்லும்போது, ரயில் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் எந்த ரயில் எந்த பிளாட்பாஃர்ம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், மின்சார ரயில்களைப் பொருத்தவரை எந்த ரயில் எங்கே செல்கிறது என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டாலும், எங்களைப் போன்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும்.

ராஜ் பாண்டியா

அதேபோல் இன்று எண்ணற்ற ஓடிடி தளங்களில் திரைப்படங்கள், இணையதொடர்கள் என ஏராளமாக வருகின்றன. ஒருசிலவற்றில் சப் டைட்டில் வருகிறது. அவை வந்தால் அதனைபார்த்து தெரிந்துகொள்வோம். இல்லையென்றால், மற்றவர்கள் பார்த்து சிரிக்கும்போது சேர்ந்து சிரிப்போம். அண்மையில் வெளியான "83" திரைப்படத்தில் சைகை மொழிகளைக் கொண்டு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற முயற்சிகளை இன்னும் நிறைய படங்களில் மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

செய்தி தேர்வாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹேமந்த் கூறியது: "செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாத எங்களைப் போன்றவர்களுக்கே பள்ளியிலிருந்தே பிரச்சினைதான். காரணம் பள்ளிக் கல்விதான் அடிப்படை. சைகை மொழி வழியாக பள்ளிப்படிப்பைக் கற்றுக்கொண்டால், அடிப்படையான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். நடைமுறையில் உள்ள வாய்மொழி கற்பித்தலை நாங்கள் கவனிக்கும்போது அது ஒருவேளை எங்களுக்கு தவறனாதாகபட்டால் அது இறுதிவரை தவறானதாக மாறிவிடும். பெரும்பாலும் செய்திகள் இணையம் வழியாகத்தான் தேர்வு செய்கிறோம். அதுமட்டுமின்றி, எங்களுக்கென்று பிரத்யேக குழுக்கள் உள்ளன. அந்த குழுவில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்கள் மூலமாக நடப்பு நிகழ்வுகளை நாங்கள் அறிந்து கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

ஹேமந்த்

அவசர உதவி எண்கள் தொடங்கி, அத்தியாவசிய சேவைகளான கால்டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து, உணவுப்பொருள் உள்ளிட்ட விநியோக சேவைகள் வரை அனைத்துமே சராசரி மனிதர்களைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள சூழலில், உலகம் முழுவதும் பொது தேடல் கருவியான கூகுள் போன்றவைகளாவது செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலம் கருதி சைகை மொழி பயன்பாட்டை உள்ளீடு செய்ய வேண்டும் என்பது இவர்களது பெருங்கனவாக இருந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x