Published : 24 Jun 2022 12:43 AM
Last Updated : 24 Jun 2022 12:43 AM

கும்பகோணம் காதல் தம்பதி படுகொலையை எப்படி ‘குறிப்பிடுவது’? - ஒரு கேள்வி எழுப்பும் சிந்தனை

ஆணவப் படுகொலை கொலைகளில் சாதி என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே சமூகச் செயற்பாட்டாளர்களும் முற்போக்கு இயக்கங்களும் தூக்கிப் பிடித்தனர். ஆனால், இதற்குள் தந்தைவழிச் சமுதாயத்தின் குடும்ப ஆதிக்கம் வகிக்கும் பாத்திரத்தை ஏனோ பலரும் பேச முன்வரவில்லை.

சாதி மட்டும் காரணமா?: குடும்பம் காதலை எதிரியாகப் பார்க்கிறது. பிள்ளைகளின் சுயேச்சையான முடிவை அத்துமீறலாகப் பார்க்கிறது. எந்தச் சாதி ஆணவப்படுகொலையும் குடும்பத்தினரின் முதன்மையான பங்களிப்பின்றி நிறைவேறவில்லை. ஆனால், சாதியை எதிர்க்கிற நாம் குடும்பம் என்கிற அமைப்பைக் கேள்வி கேட்கவோ அதன் அமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று கோரவோ தயாராக இல்லை. சொந்த மாமன் மகனைக்கூடத் தன் விருப்பத்துக்கு மாறாகக் கட்டினால் மகளை வெட்டிப்போடத் தகப்பன் தயாராக இருக்கும் அமைப்புதான் குடும்பம்.

தான் பார்த்த மாப்பிள்ளையைத் தான் மறுத்த பிறகு மகள் காதலித்தவுடன் அதைத் தன் கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு மகளை மோசமான வியாதிக்காரனுக்குக் கட்டிவைக்க தகப்பன் முயல்வதை ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படம் விரிவாகவே பேசியிருக்கிறது. ஆணவக்கொலை என்பதைவிட கௌரவக் கொலை என்கிற பெயர் காரணப் பெயராக அதன் காரணியை உணர்த்துகிறது. எனவே, கௌரவக்கொலை என்கிற பெயர்தான் சரி.

கௌரவக் கொலைகள்: ‘ஆணவக் கொலை’ என்கின்ற சொல் ‘கௌரவத்தின்’ இடத்தைக் காப்பாற்றிவிட்டது. உண்மையில் நாம் கௌரவம் என்கிற பெயரில் காப்பாற்றிவரும் பல்வேறு மதிப்பீடுகளே இந்த நிலைக்குச் சம்பந்தப்பட்டவர்களை இழுத்துச் செல்கின்றன. கௌரவத்துக்காக நடத்தப்படும் இந்தக் கொலைகளைக் கௌரவக் கொலைகள் என்று அடையாளப்படுத்தினால்தான் கௌரவம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்.

அரசுக்குப் பொறுப்பு: சில நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் சாதி மாறி திருமணம் செய்த காதல் தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் கொலை செய்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்றவுடன் சிலர் இந்தக் கொலை ஆணவக் கொலையிலேயே வராது என்று சொல்லத் தலைப்பட்டு விட்டார்கள். இப்படியான உரையாடல் நாம் தொடர்ந்து செய்துவரும் பல தவறுகளின் தொடர்ச்சியே. ஆணவக் கொலைகளில் குடும்ப அமைப்பின் பங்களிப்பை முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருந்தால் தற்போது நடந்த கொலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பது நன்கு தெரியும்.

இங்கு நமது முற்போக்காளர்களில் பலர் காதல் எதிர்ப்பைச் சாதியப் பிரச்சினையாக மட்டுமே முன்னிறுத்துகிறார்கள். ஒரு விஷயத்தில் பல காரணிகள் செயல்படும்போது அதில் ஒரு காரணியை முக்கியத்துவப்படுத்தலாம். ஆனால், அது மட்டும்தான் என்று பேசுவது நமக்கு வாடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், தந்தைவழிச் சமூகத்தின் அடிப்படை மதிப்பீடுகளைக் கேள்வி கேட்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஆணவக் கொலைகளில் ‘சாதி’க்கும் பெரிய பங்கிருக்கிறது. ஒரு சில சாதியினர் அதிக வன்முறையோடு இதை அணுகுகிறார்கள் என்பதிலும் உண்மை இருக்கிறது. ஆனால், இவை ஒவ்வொன்றும் பகுதி உண்மைகளே தவிர தனித்த முழுமை பெற்ற ஒற்றை உண்மைகள் அல்ல.

அகமணமுறை: அதே போல் இந்தக் கொலைகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் நடத்தப்பட்டிருப்பதால், இதில் சாதி அமைப்புக்கோ சாதிய இறுக்கத்துக்கோ தொடர்பில்லை என்றும் கூற முடியாது. சாதி அமைப்பின் எந்தப் படிநிலையில் இருந்தாலும் அவை சாதிய இறுக்கத்தைத் தொடர்ந்து பேணவே முற்படுகின்றன. சுய சாதியில் மணம் முடிக்கும் அகமணமுறை என்கிற விதியே தங்கள் கூட்டத்தின் வலிமையைப் பாதுகாக்கும் என்றே ஒவ்வொரு சாதியக் குழுவும் நினைக்கிறது. இதற்கு எந்தச் சாதியும் இன்றைய தேதியில் விதிவிலக்கல்ல.

இன்னொரு புறம் இன்னொரு சாதியக் குழுவிலிருந்த பெண் கொண்டுவரப்பட்டால் ஏற்றுக் கொள்வதும் தன்னுடைய சாதிப் பெண் இன்னொரு சாதிக்கு நகர்த்தப்படக் கூடாது என்கிற உளவியலும் சேர்ந்தே சாதிய உணர்வாக வெளிப்படுகிறது. ஏனெனில், சாதி அமைப்பு பெண்ணைத் தன் உடமையாகவே வைத்திருக்கிறது. சாதியாக ஒன்று கூடும் இடங்களில் அது எந்த பதாகைக்குக் கீழ் நடந்தாலும் மாற்றுச் சாதியில் திருமணம் செய்யாதீர்கள் என்கிற வேண்டுகோள் அனைத்துச் சாதிகளாலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆண் தலைமையிலிருந்து விடுபடல்: இந்தப் பின்னணியில் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக நடத்தப் படும் கொலைகள் எதுவாக இருந்தாலும் அதில் கொலையாளிகள் யாராக இருந்தாலும் கொலை செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவையனைத்தும் சாதி ஆணவக் கொலைகள்தாம்.

சட்டங்கள், சமுதாய விழிப்புணர்வு இவற்றின் வாயிலாக இவற்றைக் குறைத்திட நாம் போராடலாம். ஆனால், மனித வாழ்க்கை ஆண் தலைமையிலிருந்து விடுபட வேண்டும். எப்படி விலங்கினங்கள் இளமைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி அடையும்போது பின் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்ளுமாறு விடப்படுகின்றனவோ, அதுபோல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்பதை மனித சமுதாயம் உணர்ந்து அதற்கேற்ப மாற்றங்களைப் படைக்க முன்வர வேண்டும்.

> இது, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x