Last Updated : 28 Jul, 2017 10:33 AM

 

Published : 28 Jul 2017 10:33 AM
Last Updated : 28 Jul 2017 10:33 AM

சேனல் உலா: யூடியூபில் மணக்கும் எரும சாணி!

ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் வளாகத் தேர்வில் வெற்றிபெற்று, ஒரே இடத்தில் பணியாற்றுவது பழைய சங்கதி. ஒரே கல்லூரி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து யூடியூப் சேனலைத் தொடங்கி, கலாய்ப்புகளை அரங்கேற்றுவதுதான் புதிய பாணி. அப்படி ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் சேனல்தான் ‘எரும சாணி’. இளைஞர்கள் எதைச் சொன்னால் விரும்புவார்கள் என்பதைச் சின்னச் சின்ன ரியாக்ஷன்களைக் காட்டி பார்ப்பவர்களுக்குக் கலகலப்பூட்டும் இந்த சேனல், யூடியூப் சேனல்களில் குறிப்பிட்டத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.

இந்த சேனலைத் தொடங்க பிள்ளையார் சுழி போட்டவர்களில் விஜயும் ஒருவர். கோவைதான் இருவருக்குச் சொந்த ஊர். சினிமா இயக்குநர் கனவோடு பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு நடையாய் நடந்துகொண்டிருந்தவருக்கு, “ரொம்ப சின்ன பையனா இருக்கப்பா, எப்படிப் படம் எடுப்பே” என்று தயாரிப்பாளர்கள் கேட்ட கேள்விதான் எப்போதும் பதிலாகவே கிடைத்தது. தன் திறமையை வெளிப்படுத்தினால்தான் சாதிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்ட விஜய், அப்போது யோசித்த விஷயம்தான் இந்த யூடியூப் சேனல்.

“முதல்ல என்னோட திறமையைக் காட்டவே நண்பர்களோடு சேர்ந்து சேனல் ஆரம்பித்தேன். ஆனால், குறுகிய நாட்களிலேயே உயரத்தைத் தொடுவோம் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாள் சும்மா நடந்துபோகும்போது வழியில் கீழே கிடந்த சாணியைத் தெரியாமல் மிதிக்கப் போயிட்டேன் அப்போது எங்கள் கேமராமேன், ‘எரும சாணி’ என்று சொல்ல, அதையே சேனல் பெயரா வெக்கலாமே என்று முடிவுசெஞ்சு வைச்ச பெயர்தான் இந்த ‘எரும சாணி’ சேனல்” என்று புன்னகைக்கிறார் விஜய்.

image3

‘எரும சாணி’ சேனலைப் பார்த்த பலருக்கும் அதில் நடிக்கும் ஹரிஜாவை நன்றாகவே தெரியும். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து, பல குறும்படங்களில் நடித்த பிறகு ‘எரும சாணி’ வீடியோக்களில் நடித்து வருகிறார் இவர். நடிப்பதை தவிர்த்து ‘3 மாங்க்ஸ்’ என்ற ஸ்டூடியோவையும் நடத்திவருகிறார். ‘எரும சாணி’ சேனலுடனான அவரது அனுபங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருந்தாலும், அப்போதெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு இப்போது கிடைக்கிறது. நாங்கள் படிக்கும்போதே நல்ல நண்பர்கள். அதனால் வீடியோவுக்காகப் பணியாற்றும்போது உற்சாகமாகவே வேலை செய்வோம். எங்கே சென்றாலும் எல்லாரும் எங்களை வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை நாங்கள் உருவாக்கிய வீடியோக்கள் எல்லாமே நம் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்கள்தான். அதைக் கொஞ்சம் நகைச்சுவையாகச் செய்கிறோம்” என்கிறார் ஹரிஜா.

எரும சாணியில் விஜய் சொல்லும் ‘ஹாய் ஆண்ட்டி’ என்ற வார்த்தை யூடியூபில் வைரல் ஆனது. அந்த ஆண்ட்டி வசனத்துக்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, “ ஒரு முறை நாங்கள் வீடியோ ஷூட்டிங் செய்துகொண்டிருந்த நேரத்தில் பக்கத்து வீட்டு ஆன்ட்டி வந்துவிட்டார். எதிர்பாராமல் ஷூட்டிங் இடத்துக்கு வந்ததால், நாங்கள் அவரைப் பார்த்து முழித்தோம். உடனே நான், ‘ஹாய் ஆன்ட்டி, அங்கிள் வரலையா’ன்னு சும்மா கேட்டேன்.

ஷூட்டிங் செய்து வீடியோவில் பார்த்தபோது அந்த வார்த்தையைச் சொன்னது நன்றாக இருப்பதாகவும், அதை அப்படியே வைத்துக்கொள்வோம் என்று கேமராமேன் சொன்னதால் நாங்களும் விட்டுட்டோம். அந்த ஆன்ட்டி வசனம் டிரெண்ட் ஆகும் என்று நினைக்கவே இல்லை” என்று ஏதேச்சையாக வந்த ஆன்ட்டிக்கு நன்றி சொல்லியபடி சிரித்தார் விஜய்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘யூடியூப் ஃபெஸ்ட்’ விழாவுக்கு வந்திருந்த விஜயும் ஹரிஜாவும் ரசிகர்கள் முன்பு நடித்துக் காட்டினார்கள். அந்த அனுபவத்தைச் சிலாகித்தும் பேசினார்கள். “சென்னையில் எங்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. மேடை ஏறி நடித்த அனுபவம் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.

முதன்முறையாகச் சென்னை ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பும் பாராட்டுகளும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அப்புறம், சென்னை என்றாலே எங்களுக்கு எப்போதும் பயம்தான். வீடியோ எடுக்கலாம் என்று கேமராவை எடுத்தாலே போலீஸ் வந்துவிடுகிறார்கள். ஆனால், கோவையில் அப்படி இல்லை” என்று இருவரும் தங்கள் ஊரின் பெருமையைச் சொல்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x