Published : 14 May 2024 05:44 AM
Last Updated : 14 May 2024 05:44 AM

தட்பவெப்ப நிலைக்கேற்ப நாய் இனங்களை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும்: மோப்ப நாய் பிரிவு முன்னாள் ராணுவ அதிகாரி அறிவுறுத்தல்

சென்னை: நமது தேவை அறிந்து, தட்பவெப்பநிலைக்கேற்ப நாய் இனங்களை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் வளர்க்க வேண்டும் என்று மோப்ப நாய் பிரிவு முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

தங்களை வளர்ப்போரின் நம்பிக்கைக்குரிய பிராணியாக நாய்கள்உள்ளன. அவற்றுக்கு தெரிந்ததெல்லாம் தன்னை வளர்ப்போர் மீது பாசத்தை பொழிவதும், பழக்கமில்லாதவர்களை எதிர்ப்பதும் மட்டும்தான்.

தனிமையில் வசிக்கும் முதியோருக்கு உற்ற தோழனாக நாய்கள்உள்ளன. தங்கள் பிள்ளைகளுடன் பேசும்போது கிடைக்கும் அதே மகிழ்ச்சி, நாய்களுடன் பேசும்போது அவர்களுக்கு கிடைக்கிறது. அதனால் அவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் நாய்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதேநேரம் அவற்றை முறையாகப் பராமரிக்காதபோது பிறருக்கு எமனாக மாறிவிடுகின்றன.

அண்மைக்காலமாக மேற்கூறிய நோக்கங்களுக்காக நாய்கள் வளர்க்கும் காலம்போய், சமுதாய அந்தஸ்துக்காக விலை உயர்ந்த வெளிநாட்டு நாய்களை வளர்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த நாய்களை முறையாக பராமரிக்காததால் சென்னையில் அண்மையில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின.

இதுதொடர்பாக இந்திய ராணுவத்தில் மோப்ப நாய் பிரிவில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி எஸ்.சரவணன் கூறியதாவது:

தேசிய பாதுகாப்புப் படையில் இருந்தபோது, 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அப்போதுமோப்ப நாயுடன் சென்ற வீரர்களில் நானும் ஒருவன். வெளிநாட்டுநாய்கள் இயல்பாகவே நுண்ணறிவு திறன் பெற்றவை. உடல்பலம் மற்றும் கடி திறன் மிகுந்தவை. இவை வெளிநாடுகளில் ஆள் நடமாட்டம் இல்லாத மிகப்பெரிய விவசாயப் பண்ணைகளில் பாதுகாப்புக்காக வளர்க்கப்படுபவை.

ராட்வைலர் போன்ற நாய்கள், வளர்ப்போரிடம் பாசமாகவும், மற்றவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளக்கூடியவை. கூட்டாக விரட்டி வேட்டையாடும் திறன் இவைகளுக்கு இயல்பாகவே இருக்கும். வளர்ந்த நாய்களை பராமரிப்போருக்கு அதிக உடல் பலம் தேவை. நம்மிடம் உரிய வசதிகள் இல்லாதபட்சத்தில் பொதுமக்கள் நலன் கருதி, இவைகளை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வளர்ப்பதையும், நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதையும் தவிர்க்கலாம்.

இந்திய ராணுவத்தில் ரிமவுன்ட் வெட்னரி கார்ப்ஸ் (ஆர்விசி) என்ற படைப்பிரிவு உள்ளது. இப்பிரிவில் நாய்களுக்கு 3 மாத குட்டியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இங்குபயிற்சி பெரும் நாய்கள் யாரையும் தன்னிச்சையாகத் தாக்காது, குரைக்காது, விரட்டாது. பிறர் கொடுக்கும் உணவையும் உண்ணாது. பராமரிப்பாளரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும்.

ராணுவத்தில் தேவை அடிப்படையிலேயே நாய்கள் தேர்ந்தெடுத்து வளர்க்கப்படுகின்றன. வெடிபொருள், கண்ணி வெடி, மனிதர்களின் உடைமைகள் போன்றவற்றை மோப்பம் பிடிக்க என ஒரு நாய்க்கு ஒருவகை பயிற்சி மட்டுமே வழங்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில் புல்வெளிகளில் மறைந்திருக்கும் மனிதர்களைக் கண்டறிய தனியாகவும், ஆயுதக் கிடங்குகள் பாதுகாப்புக்கு தனியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற தேவைகளுக்கு உயர்வகை வெளிநாட்டு நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் அடர்த்தி மிகுந்தசென்னை போன்ற நகர்ப்புறங்களில், குடும்பச் சூழலில் வாழும்மக்களுக்கு இத்தேவை அவசியமில்லை. இந்த நாய்களுக்கு பொதுமக்களால் ராணுவ பயற்சி வழங்க முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் அவர்களின் தேவை அறிந்து, அந்த ஊர் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப எந்த வகை நாய்களை வளர்க்கலாம் என கால்நடை மருத்துவர்களின் அறிவுரையைப் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x