Published : 20 Feb 2024 09:55 AM
Last Updated : 20 Feb 2024 09:55 AM

பறவைகள், பழங்கள், காய்கறிகளை அடையாளம் காட்டி உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை

கைவல்யா, உலக சாதனை படைத்த பெண் குழந்தை

விஜயவாடா: ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தில் உள்ள நந்திகாமாவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு கைவல்யா என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை சிறுவயதிலேயே 27 பறவைகள், 27 பழங்கள், 27 காய்கறிகள், 27 விலங்குகள் மற்றும் 12 பூக்களின் படங்களை மிக சரியாக அடையாளம் காட்டுகிறது.

இக்குழந்தைக்கு இந்த தனித்திறன் ஒரு மாதத்திலேயே இருந்ததை கவனித்த அக்குழந்தையின் தாய் ஹேமா மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். பின்னர் அக்குழந்தையின் அறிவை சோதிக்க பல படங்களை காண்பித்துள்ளார். அவற்றை கைவல்யா மிகச் சரியாக தொடர்ந்து அடையாளம் காட்டி வந்ததால், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் அந்த வீடியோக்களை நோபல் உலக சாதனை நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களும் அதனை பரிசோதித்துள்ளனர்.

அதன் பின்னர் மிகச் சிறிய வயதிலேயே அதிக படங்களை அறியும் திறன் கொண்ட குழந்தையாக கைவல்யாவை பாராட்டி அதற்கான உலக சான்றிதழையும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த சாதனை சான்றிதழை கண்டு குழந்தையின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தாய் ஹேமா கூறியதாவது: சுமார் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது கைவல்யாவின் தனித்திறனை நான் கவனித்தேன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரு குழந்தைக்கு இந்த சிறு வயதிலேயே இவ்வளவு ஞாபகத் திறன் இருக்குமென எனது கணவர் ரமேஷிடம் அடிக்கடி கூறி, குழந்தையை பரிசோதித்தேன்.

ஒவ்வொரு முறையும் அவள் மிகச் சரியாக நான் காட்டும் படங்களை அடையாளம் காட்டினாள். பின்னர் அதனை வீடியோ எடுத்து உலக சாதனைக்காக அனுப்பி வைத்தேன். எனது குழந்தை இளம் வயதிலேயே உலக சாதனை செய்திருப்பதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ஹேமா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x