Last Updated : 02 Feb, 2018 11:26 AM

 

Published : 02 Feb 2018 11:26 AM
Last Updated : 02 Feb 2018 11:26 AM

விளையாட்டு வேலையானது!

இந்தியாவில் கிரிக்கெட் பணக்கார விளையாட்டு. இதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் மட்டுமே பணக்கார வீரர்களாக வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய அணியில் விளையாடாவிட்டாலும் பெரிய அளவில் வருவாய் ஈட்டும் வாய்ப்பை இளம் வீரர்களுக்குத் தற்போது ஐபிஎல் வழங்கிவருகிறது. ஐபிஎல் பாணியில் விளையாடப்படும் பிற விளையாட்டுகளும் இன்று இளம் வீரர்களுக்குக் கணிசமாக வருவாய் ஈட்ட வழி செய்துகொடுத்திருக்கிறது.

ஐபிஎல் அறிமுகமாவதற்கு முன்பு இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், இளம் வீரர்கள் தவமாய்த் தவம் கிடக்க வேண்டும். ரஞ்சிக் கோப்பை தொடங்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பல போட்டிகளிலும் முத்திரை பதிக்க வேண்டும். அதையும் தாண்டி அணியில் இடம்பிடிக்க சாதிய பின்னணி பார்க்கப்படுவதும் உண்டு. ஆனால், 2008-ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் அறிமுகமான பிறகு இவை எல்லாம் உடைத்தெறியப்பட்டுவிட்டன. திறமையாக கிரிக்கெட் விளையாடினால், ஐபிஎல் அணிகளில் இடம்பிடித்து, இந்திய அணியில் இடம் பிடிக்கும்வரை வாய்ப்புகள் வந்துவிட்டன.

Ishan Kishan இஷான் கிஷன்

அதைவிட முக்கியமான விஷயம், வருவாய் ஈட்டுவதற்கான வழி. 30, 35 வயதுவரை ரஞ்சி மற்றும் இதர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, அதோடு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து காலாவதியான வீரர்கள் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். அரசு வேலை என்ற சலுகையைத் தாண்டி பெரிய அளவில் வருவாய் ஈட்டும் வாய்ப்பையும் இந்த வீரர்கள் பெற்றதும் இல்லை.

ஆனால், இன்று நிலவரம் அப்படியில்லை. கிரிக்கெட் விளையாடினால், ஐபிஎல்லில் மட்டுமல்ல; அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் ஐபிஎல் பாணியிலான அணிகளில் இடம்பெற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க வழி கிடைத்திருக்கிறது.

அண்மையில் ஐபிஎல் 2018 ஏலம் நடைபெற்று முடிந்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற்ற வீரர்களைக்கூட அணியில் எடுக்கப் பல அணிகள் ஆர்வம் காட்டவில்லை. பிரபலமான வீரர்களைக்கூட இரண்டாம் கட்ட ஏலத்தில்தான் அணிகள் ஏலம் கேட்டன.

ஆனால், முதல் தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடிய, ஐபிஎல்லில் மட்டுமே இதற்கு முன்பு விளையாடிய அனுபவ வீரர்கள், முதல் தர கிரிக்கெட்டில் பெரிதாக விளையாடாத, ஐபிஎல்லில் இதுவரை தலையே காட்டாத வீரர்களை எல்லாம் முதல் கட்ட ஏலத்திலேயே அணிகள் அள்ளிப்போட்டுக் கொண்டன. அதுவும் அடிப்படை விலை 20 லட்சம், 30 லட்சம், 40 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட இளம் வீரர்கள் கோடிகளில் ஏலம் போனார்கள்.

உதாரணமாக அங்கித் சிங் ராஜ்புட் (பஞ்சாப்) 3 கோடி ரூபாய்க்கும், நவ்தீப் சைனி, சயித் கலீல் அகமது (பெங்களூர்) 3 கோடி ரூபாய்க்கும், சித்தார்த் கவுல் (ஹைதராபாத்) 3.8 கோடி ரூபாய்க்கும், இஷான் கிஷன் (மும்பை) 6.2 கோடி ரூபாய்க்கும், நிதிஷ் ரானா, கமலேஷ் நாகர்கோடி (கொல்கத்தா) தலா 3.4 கோடி ரூபாய், 3.2 கோடி ரூபாய்க்கும், குர்ணல் பாண்ட்யா (மும்பை) 8.8 கோடி ரூபாய்க்கும், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் (டெல்லி) 3.2 கோடி ரூபாய்க்கும் என ஏலம் போயிருக்கிறார்கள். இன்னும் பல புதுமுக வீரர்கள் அடிப்படை விலையான 20 லட்சத்தைத் தாண்டி 1 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் போயிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் இந்திய அணிக்காக, சர்வதேச அளவில் விளையாடாத வீரர்கள். இன்னும் சொல்லப்போனால் முதல்தர கிரிக்கெட்டில்கூட முத்திரை பதிக்காதவர்கள். ஆனால் அதிரடியான, நேர்த்தியான, திறமையான இவர்களுடைய ஆட்டத்திறன் ஐபிஎல்லில் இவர்களுக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொடுத்திருக்கிறது.

vijay shankar விஜய் சங்கர் right

இந்தியாவில் கிரிக்கெட் பெரிய அளவில் வளர்ந்திருக்கும் விளையாட்டு என்ற அடிப்படையில் மட்டுமே இந்தப் போக்கைப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டைத் தாண்டி கபடி, பாட்மிண்டன், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் ஐபிஎல் பாணியில் இந்தியாவில் விளையாடப்பட்டுவருகின்றன.

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் இந்த விளையாட்டுகளின் அணிகளை விலைக்கு வாங்குவது, அந்த அணிகளின் தூதர்களாக இருப்பது என அந்த விளையாட்டுகளின் மீதும் கவனத்தைக் குவிக்கச் செய்திருக்கிறார்கள். கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் இடம் பிடித்திருக்கும் இளம் வீரர்களும் இன்று குறிப்பிட்ட அளவில் வருவாய் ஈட்டும் வாய்ப்பை இதன்மூலம் பெற்றிருக்கிறார்கள்.

பணத்தை மட்டுமே மையமாக வைத்து நடத்தப்படும் போட்டி என்று இந்தப் பாணி விளையாட்டுகள் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், இளம் வீரர்களுக்கு வருவாய் ஈட்டவும் அது வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை மறுக்க முடியாது. இன்றும் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக விளையாட்டுகளைத் தேர்வு செய்யும் இளையோர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

வேலையைத் தாண்டி குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கணிசமாக இளைஞர்கள் சம்பாதிக்க ஐபிஎல் போன்ற விளையாட்டுகள் வாய்ப்புகளை வழங்கிவருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

அண்மைக் காலமாக கபடி விளையாட்டைக்கூடப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று தொடர்ச்சியாக நடத்தப்படும் கபடி லீக் விளையாட்டால் விளைந்த நன்மை இது. அந்த வகையில் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழியாக இருந்த ஐபிஎல்தான் இதற்குக் காரணம். பொதுவாக, சர்வதேச அணியில் விளையாட வேண்டும், சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இளம் வீரர்கள் விளையாட்டில் அடியெடுத்துவைக்கிறார்கள்.

திறமையானவர்களாக இருந்தாலும் அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை. ஆனால், குறைந்தபட்சம் அந்த வீரர்கள் வருவாய் ஈட்டுவதற்காகவாவது விளையாட்டுகள் உதவுகின்றன என்ற வகையில் ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் விளையாட்டுகள் இன்னும் அதிகம் வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x