Published : 11 Jan 2024 06:50 AM
Last Updated : 11 Jan 2024 06:50 AM

ராமர் கோயில் கும்பாபிஷேகம் | 7,000 கிலோ ‘ராம் அல்வா’ தயாரிக்கிறார் கின்னஸ் சாதனை சமையல் கலைஞர்

அயோத்தி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 7000 கிலோ எடையில் ‘ராம் அல்வா’ தயாரிக்கும் பணியில் நாக்பூரைச் சேர்ந்த, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் ஈடுபடவுள்ளார். இந்த ராம் அல்வா ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலர் பலவிதமான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுக்கு ரவையில் அல்வா தயாரிக்கவுள்ளார். இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 1000 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவவை பயன்படுத்தப்படவுள்ளது.

ராம் அல்வா கிண்டுவதற்காக 12,000 லிட்டர் கொள்ளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்புகடாயும் நாக்பூரில் தயாரிக்கப்பட்டு அயோத்தி கொண்டு செல்லப்படுகிறது. இது எஃகு மற்றும் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இதை தூக்குவதற்கு கிரேன் பயன்படுத்தப்படும். அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார். 7000 கிலோ எடையில் தயாரிக்கப்படும் ராம் அல்லவா, குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்பு, ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு அது பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் விஷ்ணு மனோகர் பலமுறை இடம்பிடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 12-வது முறையாக இடம் பெற்றது. அப்போது 75 வகையான அரிசியில் 75 வகையான பலகாரங்களை 285 நிமிடங்களில் தயாரித்தார். இவற்றின் மொத்த எடை 375 கிலோ. ராம் அல்வா தயாரிப்பு மூலமும், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புவதாக ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x