Published : 08 Nov 2023 07:20 PM
Last Updated : 08 Nov 2023 07:20 PM

தீபாவளி பலகார உணவுப் பொருட்களின் விலை 25% அதிகரித்தாலும் விற்பனைக்கு குறைவில்லை!

மதுரை: வடமாநிலங்களில் பருவம் தவறிய மழையால் உணவுப் பொருட்கள் எதிர்பார்த்த aளவு விளைச்சல் இல்லாததால் தமிழகத்தில் தீபாவளி உணவுப் பொருட்கள் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், குறைவின்றி விற்பனை நடக்கிறது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் உணவு பலகாரங்கள் முக்கிய இடம் உண்டு. பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில் மக்கள் பண்டிகை உணவுப் பலகாரங்கள் தயாரிப்பும், அதன் விற்பனையும் மும்முரமடைந்துள்ளது. தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் உள்ள உணவுதானிய விற்பனை கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருகிறார்கள். ஒருபுறம், புத்தாடைகள் வாங்கவும், மற்றொரு புறம் உணவுப் பொருட்கள் வாங்கவும் மக்கள் சித்திரைத் திருவிழாபோல் மதுரையில் மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு உணவுப் பலகாரங்கள் தயாரிப்பு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் விலை உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளி உணவுப் பலகாரங்கள், உணவுப் பொருட்கள் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனாலும், விற்பனை எந்த வகையிலும் குறையவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு உணவுப்பொருட்கள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயபிரகாஷ் கூறுகையில், ''தமிழகத்தின் அரிசி தேவையில் 50 சதவீதம் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருகிறது. டெல்டா மாவட்டத்திலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை.

பெரியாறு அணை, வைகை அணை நீர்மட்டம் போதுமானதாக இல்லை என்பதால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் நெல் விளைச்சல் இல்லை. அதனால், தமிழகத்தில் இந்த ஆண்டு அரிசி விலை கூடியுள்ளது. சீரகம், கடுகு, வெந்தயம், சோம்பு, கசகசா போன்றவை குஜராஜ், ராஜாஸ்தானில் இருந்து வருகிறது. உளுந்தும் பருப்பு, தோவரம் பரப்பு, பாசிப்பருப்பு போன்றவை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து வருகிறது.

கடந்த ஓர் ஆண்டாக வடமாநிலங்களில் பருவம் தவறிய மழை, தேவைக்கு அதிகமாகவும் மழை பெய்துள்ளது. தீபாவளி உணவுப் பொருட்களுக்கு தேவையான அதிகமான உணவு தானியப் பொருட்கள், பருப்பு வகைகள் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வருகிறது. வடமாநிலங்களில் சரியான விளைச்சல் இல்லாததால் பருப்பு உள்ளிட்ட அனைத்து உணவு தானியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்ய முடியவில்லை. அதனால், உணவுத் தானியப் பொருட்டுகள், பருப்பு போன்றவை இந்த ஆண்டு விலை கூடியது. அதனால், தீபாவளி உணவுப் பலகாரப் பொருட்கள் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. விலை கூடினாலும், விற்பனை இந்த ஆண்டு தீபாவளிக்கு குறையவில்லை. பொதுமக்கள் அதிகளவு வாங்கி செல்கிறார்கள். கரோனாவுக்கு பிறகு மக்களிடம் ஒரளவு பணப்புழக்கம் அதிகரித்தள்ளது. அதுவும் இந்த விற்பனை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x