Published : 08 Nov 2023 07:01 PM
Last Updated : 08 Nov 2023 07:01 PM

“கற்பனைக்கு அப்பாற்பட்ட அநாகரிக கருத்து” - நிதிஷ் குமார் மீது பிரதமர் மோடி தாக்கு

மோடி

புதுடெல்லி: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சட்டசபையில் பெண் அரசியல்வாதிகள் முன்னிலையில் கற்பனைகூட செய்ய முடியாத அநாகரிகமான கருத்துகளை பிஹார் முதல்வர் தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பிஹார் சட்டபேரவையில் செவ்வாய்கிழமை பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வழிவகுத்தது. கல்வியறிவு பெற்ற பெண் (மனைவி) கலவியின்போது தனது கணவனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து விளக்கிப் பேசினார். அப்போது அவர், "கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவார். இந்தக் காரணங்களினால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் இதனை நன்கு அறிவார்கள். முன்பு 4.3 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் அது 2 ஆக குறையும்" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. இதையடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், "எனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் மற்றும் முன்னேற்றத்துக்காக நான் எப்போதும் துணை நின்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தின் குணா என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிதிஷ் குமார் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்வித்திருந்தார். அதாவது, “அவருக்கு வெட்கமேயில்லை... இன்னும் எவ்வளவு தரம் தாழ்ந்து போவார்கள் அவர்கள்? இண்டியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர், சட்டசபையில் பெண் அரசியல்வாதிகள் முன்னிலையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட அநாகரிகமான கருத்துகளை தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்த்து இண்டியா கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் கூட எதுவும் சொல்லவில்லை.

பெண்களைப் பற்றி இப்படிப்பட்ட பார்வைகளை வைத்திருப்பவர்களால், உங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா? அவர்களால் உங்களின் மரியாதையை காப்பாற்ற முடியுமா?. உலகத்தின் முன்பு இந்தியாவையே அவமதித்துவிட்டீர்கள். தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் மரியாதையை காப்பாற்ற, என்னால் முடிந்ததைச் செய்வேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x