Published : 06 Nov 2023 07:55 AM
Last Updated : 06 Nov 2023 07:55 AM

எஜமானர் இறந்தது தெரியாமல் கேரள மருத்துவமனை சவக்கிடங்கு முன்பு  4 மாதமாக காத்துக் கிடக்கும் வளர்ப்பு நாய்

கோழிக்கோடு: கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த நாய் ஒன்று கடந்த 4 மாதமாக காத்துக் கிடக்கிறது.

இதுகுறித்து விசாரித்தபோது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இறந்தவருடன் இந்த நாய் வந்ததாக சிலர் கூறுகின்றனர். மருத்துவமனையில் நோயாளி இறந்ததும் அவரது உடல் அங்குள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மற்றொரு நுழைவு வாயிலில், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அவரது வளர்ப்பு நாய் சவக்கிடங்கு வாயிலில் கடந்த 4 மாதமாக காத்துக் கிடக்கிறது. இதை மருத்துவமனை ஊழியர் ராஜேஷ் என்பவர் கவனித்துள்ளார்.

முதலில் சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதன்பின் சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவு பொருட்களை அந்த நாய் சாப்பிட்டு தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் சவக்கிடங்கு அருகே காத்துக் கிடக்கிறது. அருகில் உள்ள பிசியோதெரபி கட்டிடத்துக்கும் சவக்கிடங்குக்கும் மாறி மாறி அந்த நாய் சென்று வருகிறது. மற்ற தெரு நாய்களுடன் அந்த நாய் சேராமல் தனியாகவே காத்துக் கிடக்கிறது.

தற்போது அந்த நாய்க்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் மாய கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குகிறார். முட்டை, மீன் மட்டும் அந்த நாய் விரும்பி சாப்பிடுகிறது. சாதத்தை அதிகம் சாப்பிடுவதில்லை. அந்த நாய்க்கு ராமு என டாக்டர் மாய கோபால கிருஷ்ணன் பெயர் வைத்துள்ளார். அந்த நாயை வளர்க்க கண்ணூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்வந்துள்ளதாக மருத்துவர் மாய கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

விசுவாசத்துக்கு பெயர் ‘ஹச்சிகோ': ஜப்பானில் விசுவாசத்துக்கு பெயர் போன் ஹச்சிகோ என்ற அகிதா இன நாய், தனது எஜமானரான பேராசிரியரை தினமும் ரயில் நிலையம் வரை கூட்டிச் சென்று விட்டு, மாலையில் மீண்டும் திரும்பி வந்து அவரை வீடு வரை அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தது. பணியாற்றும் இடத்தில் பேராசிரியர் மாரடைப்பால் இறந்து விட்டார். அது தெரியாமல் ஹச்சிகோ நாய், தினமும் ரயில் நிலையம் வரை சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்த நாய் கதைகள், திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. அதுபோல், ‘ராமு’ என்ற நாயை கேரளாவின் ஹச்சிகோ என அழைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x