Published : 06 Nov 2023 07:39 AM
Last Updated : 06 Nov 2023 07:39 AM

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவத்தில் இணையும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட உள்ளன.

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரிட்டன், இஸ்ரேல் உட்பட 18 நாடுகளின் ராணுவத்தில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மணிக்கு 289 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது. மோசமான வானிலையிலும் ஹெலிகாப்டரை இயக்க முடியும். அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரை பறக்கும். ஒரு நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. இதன்மூலம் எதிரிகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களையும் தரை இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமானப் படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவை தற்போது விமானப்படையில் சேவையாற்றி வருகின்றன.

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக ரூ.5,691 கோடியில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், மெசா பகுதியில் உள்ள போயிங் ஆலையில், இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பறக்கும் பீரங்கிகள் என்றழைக்கப்படும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்ட பிறகு ராணுவத்தின் பலம் மேலும் பலமடங்கும் அதிகரிக்கும்.

மேலும் இந்திய விமானப்படை, ராணுவத்துக்காக உள்நாட்டில் 156 ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளன. இவை சியாச்சின், கிழக்கு லடாக் பகுதிகளில் நிலை நிறுத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x