Last Updated : 04 Nov, 2023 04:56 PM

 

Published : 04 Nov 2023 04:56 PM
Last Updated : 04 Nov 2023 04:56 PM

விழுப்புரம் 30 | போக்ஸோ சட்டமும், சிறார் மீதான பாலியல் அத்துமீறலும்!

சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்.

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றையை தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில், போக்ஸோ சட்டம் நடைமுறைப்படுத்தும் நிலை குறித்து பார்ப்போம். அதிக அளவில் கிராமப்புற பகுதிகளை கொண்டதும், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார் மீதான பாலியல் தாக்குதல் சற்றே அதிகம் உள்ள மாவட்டங்களுள் ஒன்றாக விழுப்புரம் மாவட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது, போக்ஸோ சட்டங்கள் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் அதன் நிலைமை சற்றே மாறியிருக்கிறது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு போக்ஸோ சட்டம் உருவாக்கப்பட்டது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இச்சட்டம் பாயும். பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல், ஆபாசபடமெடுத்து குழந்தைகளை அச்சுறுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இந்தச் சட்டத்தில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஓராண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இதில் குற்றம் புரிபவர்களுக்கு சாதாரண சிறை தண்டனையில் இருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை அளிக்கலாம் என சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் மத்தியில் போக்ஸோ சட்டம் குறித்து போதுமான அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 உட்கோட்டங்களுக்குட்பட்ட காவல்துறையினர், தங்கள் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, ‘சைல்டு லைன்’ ஆகியவற்றுடன் இணைந்து போக்ஸோ சட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

“எதெல்லாம் பாலியல் சீண்டல்?, எது நல்ல தொடுதல்? (குட் டச்) - எது தீய தொடுதல் (பேட் டச்) என்பது குறித்து மாணவ, மாணவிகளிடம் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இது வரவேற்கத்தக்க அம்சமாக உள்ளது. நமது மாவட்டத்தில் அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், எங்களுடன் இணைந்து, ஆர்வம் உள்ள பல்வேறு ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு தான்” என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

செஞ்சி அருகே மழவந்தாங்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள‘
மாணவர் மனசு’ புகார் பெட்டி.

“வழக்குகள் கூடுவதால் குற்றங்கள் கூடுவதாக ஆகாது; கிராமப்புறங்களில் குற்றங்கள் மறைக்கப்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு, தற்போது வழக்குகள் பதிய வைக்கப்படுகின்றன” என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கையாளப்பட்டு வந்த இரு வழக்குகளில் 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்கப் பட்டுள்ளது.காவல்துறையினர் இந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் ஆர்வமுடன் செயல்படுவதை காணமுடிகிறது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “ விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 125 போக்ஸோ வழக்குகளும், 2022-ம் ஆண்டு 81 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரு ஆண்டுகளை காணும்போது இந்தாண்டு வழக்கு விகிதம் சற்று குறைவாக காணப்படுகிறது.

தொடர்ந்து கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்வுகளால், பாலியல் தொல்லை யால் பாதிக்கப்படும் மாணவிகள், அதுதொடர்பாக தங்களின் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தயக்கமின்றி தெரிவிப்பதை காண முடிகிறது. இதை ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.

மாணவர் மனசு: “தமிழக பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ஒவ்வொரு பள்ளியிலும் ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டு. அதன் மூலமும் பாலியல் சார்ந்த புகார்கள் பெறப்பட்டு வருகின்றன” என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

“இவர்கள் குறிப்பிடும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டிகள் இல்லாத பள்ளிகள் இன்னும் பல உண்டு. பெயரளவில் இந்த புகார் பெட்டியை வைத்திருக்கும் பள்ளிகளும் உண்டு. இந்த புகார் பெட்டி எதற்காக இருக்கிறது என்பதே தெரியாமல் அதை கடந்து செல்லும் மாணவர்களும் உண்டு. அவர்களுக்குள்ளும் பாலியல் மற்றும் இதர சிக்கல்கள் குறித்த குறைகள் உண்டு.

இந்த ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை பெயரளவுக்கு வைக்காமல், அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த;ப பெட்டி எதற்காக வைக்கப்பட்டுள்ளது? அதில் என்ன மாதிரியான புகார்களை எழுதி போடலாம்? அதில் எந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படும்? என்பதை இரு பால் மாணவர்களிடையே தனித்தனியே கூட்டங்கள் நடத்தி சொல்ல வேண்டும். அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று பெற்றோர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

போக்ஸோ சட்டங்கள் தாண்டி, ஊரகப் பகுதிகளில் நிலவும் சிறார் மீதான பாலியல் குற்றங்களைக் களைய உளவியல் சார்ந்த வேறுமாதிரியான முன்னெடுப்புகளை சமூக நலத்துறையினர் காவல்துறையினருடன் இணைந்து எடுக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. ஆனாலும், முன்பிருந்த நிலையை ஒப்பிடும் போது, போக்ஸோ சட்டமும், அதுதொடர்பான காவல்துறையின் விழிப்புணர்வையும் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வரவேற்கத்தக்க அம்சமாக கருத வேண்டியதிருக்கிறது. இதுபோன்ற விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | நகரில் காணாமல் போன நீர் நிலைகள்! - ஒரு பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x