Published : 04 Nov 2023 03:32 PM
Last Updated : 04 Nov 2023 03:32 PM

‘அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியது ஏன்?’ - வசுந்தரா ராஜே விளக்கம்

வசுந்தரா ராஜே சிந்தியா | கோப்புப் படம்

ஜலாவர் (ராஜஸ்தான்): அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறியது ஏன் என்பது குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா, ஜலாவர் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாஜக மூத்த தலைவரும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரஹலாத் ஜோஷி அப்போது உடன் இருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வசுந்தரா ராஜே சிந்தியாவிடம், அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாகக் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த வசுந்தரா ராஜே சிந்தியா, "ஜலாவர் தொகுதி எனது குடும்பத்தைப் போன்றது. இந்தத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் என் முன்னிலையில் பேசிய என் மகன் துஷ்யந்த், மிகவும் அருமையாகப் பேசினார். அவரது பேச்சைக் கேட்ட பிறகு நான் கூறியது அது. ஜலாவர் தொகுதியைப் பார்த்துக்கொள்ள என் மகன் தயாராகிவிட்டதால், நான் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என கூறினேன். அதனை அரசியலோடு இணைத்துப் பார்க்க வேண்டாம். அது ஒரு தாயாக பெருமிதத்துடன் நான் கூறியது. ஜலாவர் மக்களுக்கும் துஷ்யந்த்துக்கும் இடையே ஒரு பாலமாக நான் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் எங்கேயும் போய்விடப் போவதில்லை. தற்போதுதான் நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எனவே, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஏதும் என்னிடம் இல்லை. ஜலாவர் தொகுதி மக்கள் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர்களின் ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு இருக்கும். அவர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன். நேரம் வரும்போது அவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் வாக்களிப்பார்கள்" என குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "எங்கள் கட்சியின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா. அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்ததால் நான் வந்துள்ளேன். அவர் 10-வது முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மிகப் பெரிய வெற்றியை இம்முறை அவர் பெறுவார் என நம்புகிறேன். ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன் எப்போதும் இல்லாத அளவு மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்புகிறேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x