Last Updated : 02 Nov, 2023 04:23 PM

 

Published : 02 Nov 2023 04:23 PM
Last Updated : 02 Nov 2023 04:23 PM

விழுப்புரம் 30 | நகரில் காணாமல் போன நீர் நிலைகள்! - ஒரு பார்வை

விழுப்புரம் நகரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் குளம்.

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றையை தொடர்ச்சி... விழுப்புரம் மாவட்டத்தின் நீர் தேவையை தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகள் மட்டுமின்றி ஏரிகள், குளம், குட்டைகள் பூர்த்தி செய்கின்றன. விழுப்புரம் நகரை பொறுத்தவரையில் பல்வேறு நீர்நிலைகள் இருந்து வந்து, கால போக்கில் வளர்ச்சியை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

ஆட்சியர் அலுவலகம் பூந்தோட்டம் ஏரியிலும், சென்னை புறவழிச்சாலை முத்தாம்பாளையம் ஏரியிலும், விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி கீழ்பெரும்பாக்கம் ஏரியிலும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கம் ஏரியிலும் அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் விழுப்புரம் நகரில் சித்தேரி ஏரி, ஈஸ்வரன் கோயில் குளம், ஐயனார் குளம், திரௌபதி அம்மன் கோயில் குளம், பாப்பான் குளம், தாமரைக்குளம், மீனாட்சி அம்மன் குளம், பங்களா குட்டை, லால்கான் குட்டை, தட்டச்சன் குளம், வண்ணான் குட்டை, பச்சநாயக்கன் குட்டை,ராவணப்ப நாயக்கன் குட்டை, பிடாரியம்மன் குட்டை, ஈஸ்வரன் கோயில் குட்டை , கா.குப்பம்ஊறல், சேவியர் காலனி குட்டை, கீழ்ப்பெரும்பாக்கம் வண்ணான் குளம், கீழ்ப்பெரும்பாக்கம் ஊறல் குட்டை, தட்டான் குட்டை, செஞ்சி சாலை குட்டை, கொசவன் குட்டை,மகாராஜபுரம் ஊறல், கிழக்கு சண்முகபுரம் குட்டை, பிள்ளையார் குட்டை, பூந்தோட்டம் குளம், பூங்கா அருகேஇருந்த ஊறல், மருதூர் குட்டை, கன்னியாகுளம் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் சிலநீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் அகப்பட்டு சிக்கித் தவிக்கின்றன. சில நீர்நிலைகள் ஏறக்குறைய காணாமல் போய் விட்டன.

பாப்பான் குளம்.

இந்த நீர்நிலைகள் அனைத்தும் விழுப்புரம் நகரம் மகாராஜபுரம் பகுதியில் இருந்து மாம்பழப்பட்டு சாலை காட்பாடி ரயில்வே கேட் உட்பட்ட பகுதியில் தான் இருந்திருக்கின்றன. நகரமயமாக்கல், இடநெருக்கடி ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் சிறுசிறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, காணாமல் போவது போல் விழுப்புரம் நகரத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விழுப்புரம் ஐயனார் கோயில் குளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வரலாற்று ஆர்வலருமான செங்குட்டுவன் கூறியது:

விழுப்புரம் நகரத்தின் 1948-ம் ஆண்டின் வரைபடம் ஒன்றினைப் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. இதை ஆவணப்படுத்தும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறேன். அப்போது தான் விழுப்புரம் நகருக்குள் இத்தனை நீரிடங்கள் இருந்த தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீரிடங்கள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன என்றும் நேரில் சென்று கள ஆய்வு செய்தேன். இவற்றில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் பல காணாமல் போய் இருக்கின்றன.

மீனாட்சி அம்மன் குளம்

கீழ்ப்பெரும்பாக்கம் ஏரியின் மீதுதான் அரசு கலைக் கல்லூரி உருவாக்கப்பட்டிருக்கிறது. சித்தேரி அழிவின் விளிம்புக்குச் சென்று விட்டது. அரசு மருத்துவமனை எதிரே இருந்த வண்ணான் குட்டை, கிழக்கு பாண்டி ரோட்டில் இருந்த பிள்ளையார் குட்டை, வி.மருதூர் குட்டை இவற்றின் மீது அரசு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பங்களா குட்டை, மகாராஜபுரம் ஊறல், இவை வீட்டு மனைகளாக்கப்பட்டு குடியிருப்புகளாகக் காட்சி அளிக்கின்றன. நகரின் மையப்பகுதியில் இருந்த ஊறல் குளத்தை நகராட்சி நிர்வாகமே மண்ணைக் கொட்டி மூடி விட்டது.

நீரிடங்களை ஆக்கிரமிப்பதில் அரசு நிர்வாகமும் பொதுமக்களும் போட்டி போட்டு செயல்பட்டு இருக்கின்றனர். அதே நேரம் பூந்தோட்டம் குளம் முழுவதுமாக மீட்கப்பட்டிருப்பது வரவேற்புக்கு உரியது. ஆக்கிரமிப்புகளுடன் இருந்தாலும் பாப்பான் குளம், திரௌபதி அம்மன் கோயில் குளம் ஆகியவை மீண்டும் மீட்கப்படும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆக்கிரமிப்புகள் இல்லாத மகாராஜபுரம் மீனாட்சி அம்மன் குளம் சீரமைப்புக்காக காத்திருக்கிறது.

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் இருக்கும் கி.பி.1405-ம் ஆண்டு கல்வெட்டில் பூந்தோட்டம் ஏரி குறிப்பிடப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த ஏரியின் மீதுதான் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பெருந்திட்ட வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் குறிப்பிடும் அந்த வரைபடத்தில் பூந்தோட்டம் ஏரி குறித்த விவரங்கள் இல்லை. ஆனாலும், விழுப்புரம் நீர்நிலைகளின் வீழ்ச்சியைப் பற்றி குறிப்பிடும் போது, பூந்தோட்டம் ஏரியைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இது அல்லாமல், அந்த வரைபடத்தில் இடம் பெற்றிருந்த ஏராளமான பொதுக் கிணறுகளும் இன்று இல்லை. கடந்த 75 ஆண்டுகளில் ஏராளமான நீர்நிலைகளை நாம் காணாமல் போகச் செய்து விட்டோம்.

விழுப்புரம் நகரின் பல பகுதிகளில் 500 அடிகளுக்கும் கீழே தண்ணீர் கிடைக்காத வரலாற்று சோகத்தை ஏற்படுத்தி விட்டோம். புதிய ஏரி, குளங்களை நம்மால் வெட்ட முடியாது. எஞ்சி இருப்பவற்றையாவது நாம் நினைத்தால் காப்பாற்றலாம். இதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். விழுப்புரம் நகரை ஆய்வு செய்து வரும், வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறுவது போல், இதற்கு அரசு முன்வர வேண்டும்.

அதற்கும் மேலாக விழுப்புரம் நகர மக்களுக்கும், மிச்சம் இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். அரசும் மக்களும் இணையும் பட்சத்தில் சீர்கெட்ட நீர்நிலைகளை சீர்படுத்த முடியும். இதுபோல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | “எங்க ஏரியாவுக்கு டவர் எப்ப வரும்..?” - 30,000 பேரின் கேள்வி இது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x