

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத்தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய தொடர்ச்சி.. தமிழகத்தில் அதிக அளவு பனை மரங்கள் உள்ள மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று. இங்கு செங்கல் சூளைகளில் எரிபொருளாக பனை மரங்கள் பயன்படுத்தபடுகின்றன. கள் இறக்கப்படுகிறதா என மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸாரின் விசாரணை கெடுபிடியால் தொல்லையே வேண்டாம் என சில விவசாயிகள் பனை மரங்களை வெட்டி வீழ்த்து கின்றனர்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை. இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப் படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சி அடைய 15 ஆண்டுகள் வரை எடுக்கும். அதன் வயது மனிதனின் சராசரி வயதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பனைகள் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இதன் உச்சியில் கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரிபொருளாக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் காய்த்துக் கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப் படுகின்றன.
இது தொடர்பாக தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது: பனை முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லா திருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். முற்காலத்தில் பனையோலைகளே எழுதப் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போதும் பல பழைய நூல்களை பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பனை இயக்கம் சார்பில், தற்போது 22.45 ஹெக்டேர் பரப்பளவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் 30 ஆயிரம் பனை விதைகள் நடப்படுகின்றன. இதில் முளைப்புத்திறன் 40 சதவீதம் ஆகும். மானாவாரி பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 லட்சம் பனை விதைகள் கடந்த 2021-22ம் ஆண்டு நடப்பட்டன. அதில் 40 ஆயிரம் பனை கன்றுகள் முளைத்துள்ளன. இவைகளில் பெரும்பாலும் மேல்மலையனூர் மற்றும் கஞ்சனூர் பகுதிகளில் அதிகளவில் உள்ளன. நாரசிங்கனூரில் உள்ள பனங்காட்டில் கள் இறக்க அனுமதி வேண்டி பனை மரம் ஏறுபவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு பனைமரம் ஏறுபவர்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, "பனை, தென்னை, ஈச்சை மரங்களில் இருந்து கள் இறக்கவும் பருகவும் விற்பனை செய்யவும் உள்ள தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும். கள்ளை தமிழர்களின் பாரம்பரிய உணவாக அறிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் கள்ளுக்கடை திறந்ததன் மூலமாகவே பெருமளவில் கலப்படம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றன. எனவே கள் இறக்குமிடத்திலேயே விற்பனை செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். பனை மரம் ஏறுபவர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் போட்டு தண்டிப்பதையும், அவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
அண்மையில் விழுப்புரம் அருகே ராதாபுரம் கிராமத்தில் ஏரிக்கரையில் தார்ச்சாலை அமைக்கும் வகையில், 200 பனை மரக்கன்றுகள் வேரோடு அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அக்டோபர் 19-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப் பேரவையில் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் தனி பட்ஜெட்டில், ``பனை மரங்கள் வெட்டுவது தடை செய்யப்படும். தவிர்க்க முடியாத சூழலில் பனை மரங்களை வெட்ட வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் அனுமதிக்கப்படும். ரூ. 3 கோடியில் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும். 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், 1 லட்சம் கன்றுகளும் முழு மானியத்தில் கொடுக்கப்படும்" என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.
சந்தன மரம், தேக்கு மரம் ஆகியவற்றுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டிய வகையாக பனை மரத்தை அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால் தான் அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்காக சட்டப் பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பனை மரத்தின் வேர்கள் அடர்த்தியாகவும், உறுதி உறுதியாகவும் இருக்கும். பனை மரத்தின் வேர்கள் மண்ணுக்குள் நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று வலை குவியல் போல் சேர்ந்து மண்ணை இறுக்கமாக பற்றிக் கொள்ளும். இதனால் எவ்வளவுதான் மழை பெய்தாலும், நீரோட்டம் பெருக்கெடுத்தாலும் கரைகள் உடையாமல் உறுதியாக இருக்கும். ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடப்பட்டு அவைகளை பராமரிப்பது அவசியமான ஒன்று. பனை மரங்களை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.
இம்மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் கருத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது. அவற்றுடன் நமது பார்வையும் இணைந்து அடுத்தடுத்த நாட்களில்...!
முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | திண்டிவனம் நகரின் தேவைகள் என்னென்ன?