Last Updated : 08 Oct, 2023 04:48 PM

1  

Published : 08 Oct 2023 04:48 PM
Last Updated : 08 Oct 2023 04:48 PM

உடுமலையில் இல்லாதோருக்கு உதவும் கரங்கள்: பசிப்பிணி போக்கும் தம்பதிக்கு குவியும் பாராட்டு

உடுமலை அரசு மருத்துவமனை முன் மணிகண்டன் வைத்திருந்த உணவை எடுத்துச் செல்லும் பொதுமக்கள்.

உடுமலை: உடுமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). வேளாண் துறையில் கடைநிலை ஊழியராக உள்ளார். இவரது மனைவி அர்ச்சனா. இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக உடுமலை வட்டாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து மணிகண்டன் கூறியதாவது: கரோனா பாதிப்பின்போது ஊரடங்கு அமலானது. அப்போது குடிசை பகுதி மக்களில் பலரும் உணவு, மளிகைப் பொருட்கள் கிடைக்காமல் முடங்கினர். அவர்களை தேடிச் சென்று உணவு, மளிகை பொருட்களை வழங்கினோம். மருத்துவ மனைகளில் தங்கியிருந்த கரோனா நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், தூதுவளை, முடக்கத்தான் சூப் வழங்கினோம்.

பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினோம். எனது இரு சக்கர வாகனத்தில் திறந்தவெளி கூடையில் எப்போதும் பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் இருக்கும். ‘பசிக்கும் யார் வேண்டுமானாலும் அதனை எடுத்து உட்கொள்ளலாம். யாருடைய அனுமதியும் கேட்கத் தேவையில்லை. படிக்கத் தெரியாதவர்கள் உணவு எடுக்கத் தயங்கினால், உடன் இருப்பவர்கள் உணவை எடுத்து விநியோகிக்கலாம்’ என்ற வாசகத்தை இருசக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளேன்.

தொடக்கத்தில் 2 பாக்கெட் பிஸ்கெட், 2 தண்ணீர் பாட்டில் களுடன் தொடங்கிய இச்சேவையை, தற்போது 20 பாட்டில்களில் தண்ணீர், 50 பிஸ்கெட் பாக்கெட்டுகள் என விரிவுபடுத்தியுள்ளேன். அதேபோல ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், உழவர் சந்தை முன் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் ஏழைகள் பயன்பெறும் வகையில் சத்து கஞ்சி இலவசமாக வழங்கி வருகிறேன். இதன் மூலம் சுமார் 500 பேர் வரை பயன்பெற்று வருகின்றனர்.

மணிகண்டன்

உடுமலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களில் ஆதரவற்றோரை கண்டறிந்து தினமும் காலை சூடான இட்லி, சட்னி, சாம்பார் வழங்குகிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுடன் தொடர்பில் உள்ள தன்னார்வலர்கள் நேரில் சென்று, ஆதரவற்றோருக்கு டோக்கன் வழங்குவர்.

மறுநாள் மருத்துவமனை முன்பாக டேபிளில் தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொட்டலங்களை டோக்கன் கொண்டு வருவோர் எடுத்துச் செல்லலாம். உணவுக்காக யாரும் பிறரிடம் கையேந்தக் கூடாது என்ற நோக்கத்துடன் அவர்களாகவே எடுத்து செல்ல இந்த ஏற்பாடு. கடந்த 40 நாட்களாக திங்கள் முதல் வியாழன் வரை காலை உணவு வழங்கப்படுகிறது.

இது தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்தம் தேவைப்பட்டால், தேவையான நபர்களை தொடர்பு கொண்டு ரத்தம் கிடைக்க உதவுகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கருணை கரங்கள் தன்னார்வ அமைப்பு மூலம் வீடுகளில் சேகரிக்கப்படும் பயன்படுத்திய துணி, புத்தகங்கள், இதர வீட்டு உபயோகப் பொருட்களை சேகரித்து, அவற்றை குடிசைப் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

மேலும், உடுமலை வட்டாரத்தில் உள்ள திருமண மண்டபங்கள், இதர வீட்டு நிகழ்ச்சிகளின்போது மீதமாகும் (நல்ல நிலையில் உள்ள) உணவு வகைகளை சேகரித்து, ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த பணிகளுக்காக எங்களை பலர் பாராட்டி, உதவி வருகின்றனர், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x