Published : 01 Oct 2023 01:26 PM
Last Updated : 01 Oct 2023 01:26 PM

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் செங்குத்து தோட்டம்: மன அழுத்தத்துக்கு மருந்தாகும் பசுமை சூழல்!

மதுரை: செடி, கொடிகள் வளர்க்க இடவசதியில்லாத நகர்ப்புறங்களில் செங்குத்து தோட்டம் மூலம் கீரைகள், காய்கறி செடிகள் வளர்க்கலாம்.

மேலும், கரியமில வாயுவை குறைத்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் செங்குத்து தோட்டம், மன அழுத்தத்துக்கும் மருந்தாகிறது என தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கி.ரேவதி கூறியதாவது: சாகுபடி செய்ய இடமில்லாத நகர்ப்புற குடியிருப்புகளில் செங்குத்து தோட்டம் மூலம் சாகுபடி செய்யலாம். இடவசதியில்லாத, சமமான தரைப்பகுதிகள் இல்லாத இடங்களில் செங்குத்து தோட்ட தொழில் நுட்பத்தின் மூலம் ஒன்றன் மேல் ஒன்றாக பல அடுக்குகளில் செங்குத்தாக செடிகளை வளர்க்கலாம்.

செங்குத்து தோட்டமானது, வெளிப் புற செங்குத்து தோட்டம் மற்றும் உள் அரங்க செங்குத்து தோட்டம் என இரு வகைகள் உள்ளன. இதில், சூரிய ஒளியை அதிகம் விரும்பும் மலர்ச் செடிகள் மற்றும் படர்ந்து வளரும் கீரைகள், காய்கறிகள், வெளிப்புற செங்குத்து தோட்டங்களுக்கு ஏற்றது. நிழலை தாங்கி வளரும் அழகுச்செடிகள் உள் அரங்க செங்குத்து தோட்டங்களுக்கு ஏற்றது.

செங்குத்து தோட்டமானது இட அமைப்பு மற்றும் சூழல் அழகை கூட்டுகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து கரியமில வாயுவை குறைத்து, காற்றின் தரத்தை உயர்த்துகிறது. மேலும், நீரை சேமிப்பதோடு, செடிகளுக்கு நீர் விடுவதும் எளிதாகிறது. ஒளியையும் எளிதாக உட்கவர்கிறது. மன அழுத்தத்துக்கும் மருந்தாகிறது.

நடப்பாண்டில் செங்குத்து தோட்டம் அமைக்க மாநில வளர்ச்சி தோட்டக் கலை திட்டத்தின் கீழ் 25 பேருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.15 ஆயிரம் மானியத்துடன் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x