Published : 15 Jul 2023 04:57 PM
Last Updated : 15 Jul 2023 04:57 PM

தங்கம், பிளாட்டின ‘நிப்’... - வகை வகையான பேனாக்களை சேகரிக்கும் மதுரை பேராசிரியர்!

நூற்றாண்டுகள் பழமையான வெளிநாட்டு பேனாக்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: தங்கம், பிளாட்டினம் ‘நிப்’களையுடைய வெளிநாட்டு பேனாக்கள், வெளிநாட்டு அதிபர்கள் உபயோகிக்கும் பேனாக்களை மதுரை பேராசிரியர் ஒருவர் பாதுகாத்து வருகிறார்.

மொழியின் மூலமான எழுத்துகள். மட்பாண்டத்தில் பொறிக்கப்பட்ட குறியீடுகள் சங்க கால மனிதனின் நாகரிகத்தை அடையாளம் காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. மட்பானையில் எழுதிய வளர்ச்சி பனையோலைக்கு மாறியது. எழுதுவதற்கு நாணல், பறவைகளின் இறகுகள், எலும்பாலான எழுத்தாணி, உலோகத்தாலான எழுதுகோல் போன்றவை பயன்பட்டது. பின்னர் மையைத் தொட்டு எழுதும் பேனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின் பேனாவில் மையை அடைத்து எழுதும் வசதி கண்டறியப்பட்டது. தற்போது பந்துமுனைப் பேனா, ஜெல் பேனா என பல்வேறு நவீன வடிவம் பெற்று விட்டன.

நாணயங்கள் சேகரிப்பு, அஞ்சல்தலை சேகரிப்பு வரிசையில் அரிதான பேனாக்களை சேகரிக்கும் பழக்கமும் சிலரிடம் உள்ளது. அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் தயாரிப்பான வாட்டர் மேன், மோன்ட் பிளான்க், ஷீஃபர், கிராஸ், எவர்ஷார்ப் (செல்லுலாய்டு பேனா), பெளிகான், ஸ்வான், செனாடர், எலைஷீ, பைலட் ஆகிய பேனாக்கள், ஜெர்மனி, ரஷ்யா நாட்டு அதிபர்கள் பயன்படுத்தும் பேனாக்கள் மற்றும் உள்நாட்டு பேனாக்களையும் பொக்கிஷமாக சேகரித்து வருகிறார் பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த எஸ்.சிவசீலன்.

இவர் திருப்பரங்குன்றம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் நோய் புலனாய்வு மைய பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பேனாக்களை சேகரித்து பாதுகாத்து வருகிறார்.

இதுகுறித்து பேராசிரியர் எஸ்.சிவசீலன் கூறியதாவது: முதலில் என் தந்தை பரிசாக கொடுத்த பவுண்டைன் பேனாவிலிருந்து பேனா மீதான காதல் தொடங்கியது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரைகள் பேனா மீதான ஆர்வத்தை தூண்டின.

பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், அயர்லாந்து உள்பட வெளிநாட்டு பேனாக்களை வாங்கத் தொடங்கினேன். தற்போது என்னிடம் 1880-ம் ஆண்டு தயாரிப்பான வாட்டர்மேன்ஸ் பேனா, 1900-ம் ஆண்டு மான்ட் பிளாங்க் உட்பட நூற்றாண்டு கடந்த பேனாக்கள், சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பேனாவும் உள்ளது. பெரும்பாலான பேனாக்களின் ‘நிப்’ 14, 18 காரட் தங்கத்தாலானது.

சில ‘நிப்’ பிளாட்டினத்தாலானது. 1 முதல் 6-ம் நம்பர் வரையிலான நிப் பேனாக்களும், வைடூரிய குறியுடைய பேனா, பிஸ்டன் மூலம் மை உறிஞ்சும் பேனா, சைடு லீவர் மூலம் மை உறிஞ்சும் பேனா என பல வகை உள்ளது.

ஒரே பேனாவில் மெல்லிய, தடித்த எழுத்துகளை எழுதும் வகையில் நிப்பை மாற்றலாம். உடல் நிலை சரியில்லாமலிருந்தாலும் தினமும் 2 வரிகளையாவது எழுதி விடுவேன். பேனாக் கள் மனிதர்களோடு நூறாண்டாக சிநேகம் கொண்டுள்ளன. வாரத்தில் ஒருநாளை பேனாக் களை பராமரிக்க ஒதுக்கி விடுவேன், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x