

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது கூட்டத்தினரைக் கலைக்க துணை ராணுவப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளால் மாணவர்களை சுட்டனர். இந்த பெல்லட் துப்பாக்கி குண்டுகளின் தன்மைகள் குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
பெல்லட் துப்பாக்கி என்பது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்காத, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் கருவி. உலக அளவில் ராணுவத்தினர், போலீஸார் இதை பயன்படுத்துகிறார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிக் குண்டுகள் தவிர, கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தல், பெப்பர் ஸ்ப்ரே, டீசர் கன் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
பெல்லட் துப்பாக்கியை வைத்து கூட்டத்தினரைப் பார்த்து 500 அடி தொலைவில் இருந்து சுடும்போது, எந்த தீவிரமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே, மிகவும் அருகே சென்று கூட்டத்தினர் மீது துப்பாக்கியால் சுடும்போது, குறிப்பாக கண்களில் குண்டுகள் சிதறி பட்டால் பார்வை இழக்கவும் வாய்ப்புள்ளது.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாதபோது, தேவைப்பட்டால் அவர்களை நோக்கி பெல்லட் துப்பாக்கியால் இடுப்புக்கு கீழ் சுடலாம் என்பது நிலையான விதியாகும். பெல்லட் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் கேட்ரிட்ஜ்களில் 100-க்கும் மேற்பட்ட சிறிய குண்டுகள் நிரப்பப்பட்டிருக்கும். இந்த குண்டுகள் துத்தநாகத்தால் செய்யப்பட்டிருக்கும். இதை சில நூறு மீட்டருக்கு அப்பால் இருந்துதான் பயன்படுத்த வேண்டும்.
பெல்லட் குண்டுகள் ஊசிபோன்ற வடிவம், முக்கோண வடிவம், பால் பேரிங் என பல்வேறு வகைகளில் உள்ளன. ஒருமுறை பெல்லட் துப்பாக்கியால், ட்ரிகரை அழுத்தி சுடும்போது, சில நூறு குண்டுகள் வெடித்துச் சிதறும்.
இந்த பெல்லட் குண்டுகளும், துப்பாக்கிகளும் இஷாபூரில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
முதல் பயன்பாடு எப்போது?
கடந்த 2010-ம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 112 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பெல்லட் துப்பாக்கிகளை ஓர் உயிரிழப்பு ஏற்படுத்தாத கருவியாக பயன்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கி குண்டுகள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன.
2016-ம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவத்தினர் பெல்லட் துப்பாக்கியால் சுட்டதில் பலர் பார்வை இழந்தனர்.
2016-ம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி நடந்தபோது, போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்தி ராணுவத்தினர் சுட்டது பல விமர்சனங்களை எழுப்பியது. பல்வேறு கட்சியினரும் பெல்லட் குண்டுகளை முழுமையாக பயன்படுத்த தடை செய்யக் கோரினர். 2016-ம் ஆண்டில் பெல்லட் குண்டுகள் பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் காயமடைந்தனர்; சிலர் பார்வையை இழந்தனர்.
இதையடுத்து, 2017-ம் ஆண்டு பிற்பகுதியில், குறைந்த பாதிப்புகளை உருவாக்கும் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
2024-ம் ஆண்டு தேசிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடந்தது. அதில் பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் கனுவாரி மற்றும் ஷாம்பு பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. ஆனால், போலீஸார் தரப்பில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்றனர், ஆனால், விவசாயிகள் தரப்பில் பலர் காயமடைந்ததாகத் தெரிவித்தனர்.
ஷாக் பேட்டன்கள் என்றால் என்ன?
அதிவிரைவுப் படையின் முக்கிய ஆயுதங்களில் ஒன்று ‘ஷாக் பேட்டன்’. 2021-ம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுயபாதுகாப்பு மற்றும் அன்றாட பாதுகாப்பு பணிகளுக்கு ஷாக் பேட்டன்களை பயன்படுத்தக் கூறியது. இந்த ஷாக் பேட்டன்கள், ஒரு கிலோ எடை அளவுதான் இருக்கும். இதன் நீளம் 450 முதல் 700 எம்எம் இருக்கும். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஷாக் பேட்டன் மூலம் கலவரத்தை, போராட்டத்தை கலைக்க முயலும்போது, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்கினால், ஒருவிதமான வெப்பம் பாய்ச்சப்படும். இந்த வெப்பம், சில மணிநேரத்துக்கு இருந்து, தசையில் வலியை ஏற்படுத்தும், பின்னர் தானாக சரியாகிவிடும். இதனால் காயம் ஏற்படாது, உயிருக்கும் ஆபத்தும் இல்லை.
பாவா (PAVA) செல்ஸ் என்றால் என்ன?
பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றுகளைக் கண்டறிய மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2021-ம் ஆண்டு ஒரு நிபுணர் குழு அமைத்தது. அந்த குழுவினர் உருவாக்கிய, சக்தி வாய்ந்த ஒன்றுதான் பாவா குண்டுகள். இதை மிளகாய் பொடி குண்டுகள் என்றும் அழைக்கிறார்கள். பாவா (PAVA) என்பது பெலார்கானிக் ஆசிட் வென்னிலில் அமைட் (Pelargonic Acid Vanillyl Amide) என்பதன் சுருக்கமாகும்.
இந்த பாவா குண்டுகள் மூலம் போராட்டக்காரர்கள், கலவரத்தில் ஈடுபடுவோரை நோக்கி சுடும்போது, அவர்களால் சில நிமிடங்களுக்கு அந்த இடத்தைவிட்டு நகர முடியாது. கண்களில் தற்காலிகமாக எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும். ஆனால், எந்தவிதமான பாதிப்பையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்காது.
கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தும்போது, சில நேரங்களில் அதை போராட்டக்காரர்கள் எடுத்து மீண்டும் போலீஸார், பாதுகாப்புப் படையினர் மீது வீசும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். இதைத் தவிர்க்க, ‘டியர் ஸ்மோக் ஷெல் வித் சாப்ட் நோஸ்’ என்ற குண்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த குண்டு தரையில் பட்டவுடனே உருகிவிடும். இதனால் போராட்டக்கார்களால் எடுத்து மீண்டும் போலீஸார் பக்கம் தூக்கி எறிய முடியாது.