

கட்சிரோலி: மாவோயிஸ வன்முறையால் பழங்குடியின சமூகத்தினரே கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் பழங்குடியினருக்கு வாக்குரிமை கூட மறுக்கப்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடைபெற்ற 'பழங்குடியின கவுரவ தினம்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “மாவோயிஸ வன்முறையால் பழங்குடியின சமூகத்தினரே கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மாவோயிஸ்டுகள் குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றபோதும், பழங்குடியின இளம் பெண்களைக் கடத்தியபோதும் முந்தைய அரசாங்கங்கள் மவுனம் காத்தன.
நக்சலைட்டுகள் பழங்குடியின சமூகத்தினருக்கு வாக்குரிமையை மறுத்தனர். ஆனால், முந்தைய அரசாங்கங்கள் இதைப் பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்தன. இருப்பினும், மாவோயிச வன்முறை ஒழிக்கப்பட்டதால் தற்போது நிலைமை மாறியுள்ளது. பழங்குடியினத் தாய்மார்களும் சகோதரிகளும் இப்போது பாதுகாப்பாக உணர்வதால், தற்போதைய அரசாங்கத்திற்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வன்முறையால் தங்கள் குழந்தைப் பருவத்தைப் பறிகொடுத்த பிள்ளைகளுக்கு, இப்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மேலும், கடந்த 12-13 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 50 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று” என்றார்.